55
யாழ்ப்பாணம், செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வுப் பணிகளுக்குத் தேவையான முழுமையான நிதியுதவிகளை தற்போதைய அரசாங்கம் ஒதுக்கியுள்ளதாக நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார். ஜூன் 19ஆம் திகதியாகிய இன்றைய வெள்ளிக்கிழமை செம்மணிப் பகுதிக்கு நேரில் சென்று பார்வையிட்ட பின்னரே அவர் ஊடகங்களுக்கு இந்த விபரங்களை வெளியிட்டார்.
அகழ்வுப் பணிகளுக்கு மட்டுமன்றி, அதற்கு அடுத்தகட்டமாக முன்னெடுக்கப்படும் அனைத்து சட்ட மற்றும் தடயவியல் நடவடிக்கைகளுக்கும் தேவையான நிதியை வழங்க அரசாங்கம் தயாராக இருப்பதாக அமைச்சர் குறிப்பிட்டார். கடந்த கால அரசாங்கங்களைப் போல தமிழ் மக்களை ஏமாற்றும் நோக்கம் தற்போதைய அரசாங்கத்திற்கு இல்லை என்றும், மக்கள் தங்களை முழுமையாக நம்பலாம் என்றும் அவர் உறுதியளித்தார்.
வடக்கு, தெற்கு என்ற எந்தவொரு பாகுபாடும் இன்றி, குற்றம் இழைத்தவர்கள் எவராக இருந்தாலும் அவர்களுக்குத் தகுந்த தண்டனை பெற்றுத்தரப்படும் எனத் தெரிவித்த அமைச்சர், முறையான விசாரணைகளின்றி எவரையும் கைது செய்ய முடியாது என்பதையும் சுட்டிக்காட்டினார். மேலும், இறுதிப் போர்க்காலத்தில் இராணுவத்தினர் படுகொலைகளில் ஈடுபட்டதற்கான முறையான ஆதாரங்கள் சமர்ப்பிக்கப்படும் பட்சத்தில், அவர்களுக்கு எதிராகவும் சட்டப்படி கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார மிகத் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார்.
Spread the love

