55
யாழ்ப்பாணம், செம்மணி மனிதப் புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணியின் 29ஆம் நாள் அகழ்வுகள் இன்றைய திகதி வெள்ளிக்கிழமை (19.06.2026) அன்று நீதிமன்ற மேற்பார்வையின் கீழ் மேற்கொள்ளப்பட்டன. இன்றைய அகழ்வாய்வின் போது மேலும் 3 புதிய என்புக்கூடுகள் முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளதுடன், புதிதாக மேலும் 7 என்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
இதனடிப்படையில், செம்மணியில் இதுவரை மேற்கொள்ளப்பட்ட மனிதப் புதைகுழி அகழ்வுப் பணிகளின் போது ஒட்டுமொத்தமாக 394 என்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அவற்றில் 370 என்புக்கூடுகள் பாதுகாப்பான முறையில் தோண்டி எடுக்கப்பட்டுள்ளன. கடந்த சில நாட்களாக மேற்கொள்ளப்பட்ட அகழ்வுகளின் போது சிசுக்கள் மற்றும் சிறுவர்களுடைய என்புக்கூடுகளும், உடமைகளும் கண்டெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இன்றைய தின அகழ்வுப் பணிகளை நீதி அமைச்சர் தலைமையிலான விசேட குழுவினரும், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் அலுவலகத்தின் (OMP) ஆணையாளர்கள் உள்ளிட்ட உயர் அதிகாரிகளும் நேரில் சென்று பார்வையிட்டு, ஆய்வுகளின் முன்னேற்றம் குறித்து கேட்டறிந்தனர். இப்பகுதியில் தொடரும் அகழ்வாராய்ச்சிகள், யுத்த காலத்தில் காணாமல் ஆக்கப்பட்ட தங்களின் உறவுகளுக்கு என்ன நேர்ந்தது என்பதை அறியக் காத்திருக்கும் தமிழ் மக்களுக்கு மிக முக்கியமான நீதி விசாரணையாகப் பார்க்கப்படுகிறது.
Spread the love

