54
யேமனின் ஈரான் ஆதரவு பெற்ற ஹூதி கிளர்ச்சியாளர்கள், சவுதி அரேபியாவின் தெற்கு பகுதியில் உள்ள அபா (Abha) சர்வதேச விமான நிலையத்தை இலக்கு வைத்து பெலிஸ்டிக் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தியதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஹூதி அமைப்பின் இராணுவப் பேச்சாளர் யஹ்யா சரீ வெளியிட்ட அறிக்கையில், சனா (Sanaa) சர்வதேச விமான நிலையத்தின் ஓடுதளத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்குப் பதிலடியாகவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, சவுதி வான்வெளியைப் பயன்படுத்தும் விமான நிறுவனங்களுக்கு எச்சரிக்கையும் ஹூதி தரப்பு விடுத்துள்ளது.
சவுதி ஆதரவு பெற்ற யேமனின் சர்வதேச அங்கீகாரம் பெற்ற அரசு, சனா விமான நிலையத்தில் தரையிறங்கவிருந்த ஈரானிய விமானத்தைத் தடுக்க ஓடுதளத்தை குறிவைத்து தாக்குதல் மேற்கொண்டதாக தெரிவித்துள்ளது. இதற்கு பதிலடியாக ஹூதி தாக்குதல் இடம்பெற்றதாக சர்வதேச செய்திகள் கூறுகின்றன.
அபா நகரம், யேமன் எல்லைக்கு அருகிலுள்ள சவுதி அரேபியாவின் மலைப்பாங்கான அசீர் (Asir) மாகாணத்தின் முக்கிய நகரமாகும். உள்நாட்டு சுற்றுலாவுக்குப் பிரபலமான இந்தப் பகுதி, கடந்த காலங்களிலும் ஹூதி தாக்குதல்களின் இலக்காக இருந்துள்ளது.
2022ஆம் ஆண்டு சவுதியின் எரிசக்தி கட்டமைப்புகள் மீதான தாக்குதலுக்குப் பிறகு ஏற்பட்ட போர்நிறுத்தம் மற்றும் பதற்றத் தணிவு காலத்தைத் தொடர்ந்து, சவுதி அரேபியாவுக்கு எதிராக ஹூதிகள் பொறுப்பேற்று அறிவித்த முதல் பெரிய தாக்குதலாக இது பார்க்கப்படுகிறது. இந்தச் சம்பவம், நான்கு ஆண்டுகளாக நீடித்திருந்த ஒப்பீட்டளவிலான அமைதி நிலை மீண்டும் சிதைவடையும் அபாயத்தை ஏற்படுத்தியுள்ளதாக சர்வதேச ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர்.
Spread the love

