“நாம் கடந்த ரணில் விக்ரமசிங்க அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட்ட காலத்தில் குடாநாட்டில் ஆயிரக்கணக்கான ஏக்கர் பூர்வீகக் காணிகளை உத்தியோகபூர்வமாக விடுவித்திருந்தோம். தொடர்ந்தும் மேலதிகக் காணிகளை விடுவிக்க இருந்த சூழலில் திடீரெனத் தேர்தல் அறிவிக்கப்பட்டமையால், எம்மால் அந்தப் பணிகளை முழுமைப்படுத்த முடியாமல் போய்விட்டது” என முன்னாள் கடற்றொழில் அமைச்சரும், ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் (EPDP) பொதுச்செயலாளருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள கட்சியின் பிரதான தலைமை அலுவலகத்தில் இன்றைய தினம் (வியாழக்கிழமை) நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்விபரங்களை வெளிப்படுத்தியுள்ளார்.
தற்போதைய புதிய தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் காணி விடுவிப்புக் கொள்கை குறித்து குற்றஞ்சாட்டிய டக்ளஸ் தேவானந்தா கடந்த 2009ஆம் ஆண்டு யுத்தம் நிறைவுக்கு வந்ததைத் தொடர்ந்து, யாழ்ப்பாணத்தில் சிவிலியன்களின் நடமாட்டமே இன்றி உயர் பாதுகாப்பு வலயங்களாக (High Security Zones) முடக்கப்பட்டிருந்த பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களை நாமே அப்போதைய அரசாங்கங்களுடன் தொடர்ச்சியாகப் பேசி உத்தியோகபூர்வமாக விடுவித்து மக்கள் வசம் ஒப்படைத்திருந்தோம்.” எனத் தொிவித்தாா்.
கடந்த ரணில் விக்ரமசிங்கவின் ஆட்சிக் காலத்தின் இறுதிப் பகுதியில், ராணுவத்தினர் சிவில் மக்களிடம் மீள ஒப்படைப்பதற்கு முழுமையாகச் சம்மதம் தெரிவித்திருந்த குறிப்பிட்ட எல்லைக் காணிகளைக் கூட, ஆட்சிக்கு வந்துள்ள தற்போதைய அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான புதிய அரசாங்கம் இதுவரை மக்களிடம் மீளக் கையளிக்காமல் பாராமுகமாகவே உள்ளது என அவர் சாடினார்.
காணாமல் ஆக்கப்பட்டோரின் உன்னதப் பிரச்சினைக்குத் தமிழ் அரசியல் தளத்தில் முதன்முதலில் தீர்வைத் தேடியது ஈ.பி.டி.பி (EPDP) மாத்திரமே எனத் தெரிவித்த அவர், அது குறித்த வரலாற்றுத் தரவுகளைப் பகிர்ந்துகொண்டார்:
“எனது சொந்தத் தம்பியும் கடந்த காலத்தில் காணாமல் ஆக்கப்பட்ட ஒருவராவார். எனவே, காணாமல் ஆக்கப்பட்டோரின் குடும்பங்களின் உறைப்பான மன வலிகள் எனக்கும் நன்றாகவே தெரியும். கடந்த 1997ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் ராணுவக் கட்டுப்பாட்டுக்குள் வந்த பின்னர், நாமே முதன்முதலாகக் காணாமல் போனோர் விபரங்களைத் திரட்டி, அவர்களின் உறவினர்களை ஒன்றிணைத்து உத்தியோகபூர்வமாகச் சங்கம் அமைத்துப் போராட்டங்களை நடத்தினோம். அவ்வேளையில் சுமார் 600 காணாமல் ஆக்கப்பட்டோரின் பெயர் விபரங்களை அப்போதைய ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க அரசாங்கத்திடம் உத்தியோகபூர்வமாக ஒப்படைத்திருந்தோம்.”
மேலும், மிருசுவில் படுகொலை (Mirusuvil Massacre), கிருஷாந்தி படுகொலை மற்றும் சாரதாம்பாள் படுகொலை உள்ளிட்ட கொடூரச் சம்பவங்களின் உண்மைகளைத் தங்களது கட்சியே வெளிப்படுத்தியதுடன், சாட்சிகளைப் பாதுகாப்பாகக் கொழும்புக்கு அழைத்துச் சென்று நீதிமன்றங்களில் சாட்சியமளிக்க வைத்ததாகவும் குறிப்பிட்டார்.
இத்தகைய மனித உரிமைச் செயற்பாடுகளைப் பொறுத்துக்கொள்ள முடியாத விடுதலைப் புலிகள் அமைப்பினர், பின்நாட்களில் அரசியல் பழிவாங்கலுக்காகக் காணாமல் ஆக்கப்பட்டமைக்கு ஈ.பி.டி.பியே காரணம் எனப் பொய்களைப் பரப்பினர். இதில் உண்மை இருக்குமாயின் தாராளமாக நீதிமன்றங்களை நாடி நீதியைப் பெற்றுக் கொள்ள முடியும் எனச் சவால் விடுத்தார். காணாமல் ஆக்கப்பட்டோர் பிரச்சினையைத் தீர்க்கத் தாம் முயன்ற காலத்தில், “கறையான் புற்றெடுக்கக் கருநாகம் குடிகொண்டது” போல, சில சுயநலத் தமிழ் அரசியல் தரப்புகள் இப்பிரச்சினையைத் தங்களது வாக்கு வங்கி அரசியலுக்காகக் கையாண்டு, இன்றுவரை தீர்க்க முடியாத ஒரு பிரச்சினையாகவே முடக்கி வைத்துள்ளனர் என டக்ளஸ் தேவானந்தா மேலும் தெரிவித்தார்.
#DouglasDevananda #Jaffna #ValiNorthLandIssue #EPDP #MissingPersons #RanilWickremesinghe #NorthernProvince #PoliticalUpdate

