நீதிமன்ற குற்றப்பணங்களையும், தண்டப்பணங்களையும் கைமாற்றும் நியதிச்சட்டம், வடமாகாண சபையில் இன்று (06) அங்கிகரிக்கப்பட்டுள்ளது.
வடமாகாண சபையின் 90ஆவது அமர்வு, யாழ். கைதடியில் அமைந்துள்ள வடமாகாண சபைக் கட்டடத்தொகுதியில், வடமாகாண அவைத்தலைவர் சீ.வி.கே.சிவஞானம் தலைமையில் நடைபெற்றது.
நீதிமன்றங்களினால் அறவிடப்படும் குற்றப்பணங்கள் மற்றும் தண்டப்பணங்களை, வடமாகாண உள்ளூராட்சி அதிகார சபைகளுக்கு மாற்றுவதற்கான ஏற்பாடுகள் செய்வதற்கான ஒரு நிதியச் சட்டத்தினை உருவாக்கும் நோக்கில், முதலமைச்சரினால் குறித்த நியதிச்சட்டம் கொண்டுவரப்பட்டது.
வடமாகாண முதலமைச்சரினால் கொண்டுவரப்பட்ட குறித்த நியதிச்சட்டம், குழுநிலை விவாதத்தில் விவாதிக்கப்பட்டு திருத்தங்களும் கொண்டுவரப்பட்டன. திருத்தங்கள் கொண்டுவரப்பட்டு, உறுப்பினர்கள் ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டதன் பின்னர், வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் முன்மொழிய, எதிர்க்கட்சி தலைவர் சி.தவராசா வழிமொழிந்தார்.
இந்நிலையில், குறித்த நியதிச்சட்டம் முழுமையாக அங்கிகரிக்கப்படுகின்றதாக, அவைத்தலைவர் சீ.வி.கே.சிவஞானம் சபையில் அறிவித்தார்.