குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு:-
காணாமல் போனோர் அலுவலகம் தொடர்பில் உச்ச நீதிமன்றின் சட்ட விளக்கம் கோர வேண்டுமென கூட்டு எதிர்க்கட்சியினர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் எழுத்து மூலம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
காணாமல் போனவர்கள் அலுவலகம் தொடர்பிலான உத்தேச சட்ட மூலம் இன்று நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட உள்ளது.
இந்த சட்ட மூலம் சமர்ப்பிக்கப்படுவதனை ரத்து செய்யுமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
எனவே, உடனடியாக நாடாளுமன்றின் சமர்ப்பிக்கப்படுவதனை நிறுத்துமாறு கோரப்பட்டுள்ளது.
கூட்டு எதிர்க்கட்சியின் தலைவர் தினேஸ் குணவர்தன உள்ளிட்ட உறுப்பினர்கள் கையொப்பமிட்டு இந்தக் கோரிக்கையை ஜனாதிபதியிடம் முன்வைத்துள்ளனர்.
இந்த சட்டத்தின் சில சரத்துக்கள் தேசிய பாதுகாப்பிற்கும் நாட்டின் இறைமைக்கும் பெரும் சவாலாக அமைந்துள்ளது என புத்திஜீவிகளும் தொழிற்சங்கங்களும் எச்சரிக்கை விடுத்து வருவதாக கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்த உத்தேச சட்டத்தின் சில சரத்துக்கள் அரசியல் சாசனத்திற்கு நேர் எதிரானது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதியின் விசேட அதிகாரங்களை பயன்படுத்தி இந்த உத்தேச சட்டம் பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்படுவதனை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.