பிரிட்டனில் எதிர்வரும் ஜூன் மாதம் 8ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தலை நடத்தும் திட்டத்தை பிரதமர் தெரீசா மே அறிவித்துள்ளார். தற்போதுள்ள நாடாளுமன்றத்தின் பதவிக்காலம் முடிவடைய இன்னும் மூன்று ஆண்டுகள் எஞ்சியுள்ள நிலையில் அவரது இன்றைய ‘திடீர் அறிவிப்பு’ வெளியாகியிருக்கிறது.
ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் விலகுவதற்கான பேச்சுவார்த்தைகள் ஆரம்பமாகியுள்ளதன் பின்னணியில், புதிய பொதுத் தேர்தல் மட்டுமே அரசின் உறுதிப்பாட்டை வெளிப்படுத்தி நாட்டில் ஸ்திரத்தன்மையை கொண்டுவர முடியும் எனும் முடிவுக்கு தான் வந்துள்ளதாக தெரீசா மே தனது உரையில் குறிப்பிட்டுள்ளார்.
மிகவும் தயக்கத்துக்கு பிறகே இந்த முடிவை தான் எடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். நாடு ஒருங்கிணைந்திருந்தாலும், நாடாளுமன்றம் அவ்வாறு இல்லை எனவும் தனது உரையில் மே அம்மையார் கூ தெரிவித்துள்ளார்.
ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் விலகும் நடவடிக்கைகளுக்கு அரசு தயாராகிவரும் நிலையில், எதிர்கட்சிகள் அரசின் முன்னெடுப்புகளை முடக்குவதாகவும், அதன் மூலம் பேச்சுவார்த்தைகள் பலவீனமடைகின்றன என்றும் தனது உரையில் அவர் தெரிவித்தார். பொதுத் தேர்தல் ஒன்று நடத்தப்படாவிட்டால், ‘எதிர்கட்சிகளின் பித்தலாட்டங்கள்’ தொடரும் எனவும் அவர் சாடினார்.
நாளை-புதன்கிழமை-நாடாளுமன்றத்தில் பொதுத் தேர்தலை ஜூன் 8 ஆம் தேதி நடத்துவது குறித்த மசோதா கொண்டுவரப்படும்போது, அதை எதிர்கட்சிகள் ஆதரிக்க வேண்டும் எனவும் அவர் கோரினார். அந்த மசோதா நாடாளுமன்றதில் நிறைவேற மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை தேவை என்றாலும், அப்படியான மசோதாவை தாங்கள் ஆதரிக்க தயாராக இருப்பதாக தொழிலாளர் கட்சி ஏற்கனவே அறிவித்துள்ளது.
BBC