பிணை முறி மோசடியில் அரசாங்கத்திற்கு சுமார் ஆயிரம் கோடி ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளதாக மத்திய வங்கியின் முன்னாள் பிரதி ஆணையாளர் கலாநிதி டபிள்யூ.ஏ விஜேவர்தன தெரிவித்துள்ளார். மத்திய வங்கி பிணை முறி மோசடி தொடர்பில் நேற்று நடைபெற்ற ஜனாதிபதி ஆணைக்குழு விசாரணைகளின் போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
2015ம் ஆண்டு பெப்ரவரி மாதம் 27ம் திகதி விநியோகம் செய்யப்பட்ட பிணை முறிகளினால் இவ்வாறு ஆயிரம் கோடி ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளதாகவும் உடனடியாக 53 கோடி ரூபாவும் 30 ஆண்டு காலத்தில் எஞ்சிய தொகையும் நட்டம் ஏற்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார். கூடுதலான விலை கோரப்பட்டிருந்த நிலையில் குறைந்த விலைக்கு பிணை முறிகள் வழங்கப்பட்டதனால் இவ்வாறு நட்டம் ஏற்பட்டது என அவர் குறிப்பிட்டுள்ளார்.