வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பானது என்பதை நிரூபிக்கும் வகையில் விரைவில் அனைத்து கட்சி கூட்டம் நடைபெறுமென தலைமை தேர்தல் ஆணையாளர் நஜீம் ஜைதி கூறியுள்ளார். தற்போது நடைமுறையில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் கோளாறு உள்ளதா அதை எப்படி சரி செய்யலாம் என்பது குறித்து ஆலோசனை நடத்த தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளதாகவும் இதனையடுத்து விரைவில் நாடு தழுவிய அளவில் அனைத்துக்கட்சிக் கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அண்மையில் இடம்பெற்ற 5 மாநிலங்களின் சட்டசபைத் தேர்தல்வகளின் வாக்குப் பதிவின்போது மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் தில்லுமுல்லு நடைபெற்றுள்ளதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்தன. இந்த குற்றச்சாட்டுக்களை மறுத்த தேர்தல் ஆணையம் வாக்குப்பதிவு இயந்திரங்களில் தில்லுமுல்லு செய்ய முடியும் என்று யாராவது நிருபிக்க முடியுமா என சவால் விடுத்திருந்த நிலையில் அனைத்து கட்சி கூட்டம் நடத்த ஏற்பாடு செய்துள்ளது.
இதில் வாக்குப்பதிவு இயந்திரங்களின் தொழில்நுட்ப பாதுகாப்பு அம்சங்கள் குறித்து விளக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.