குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு
புதிதாக அரசியல் சாசனம் உருவாக்கப்பட வேண்டுமே தவிர தற்போதைய அரசியல் சாசனத்தில் திருத்தங்கள் செய்யப்படக் கூடாது என பாராளுமன்ற உறுப்பினரும் அரசியல் சாசன நிபுணருமான கலாநிதி ஜயம்பதி விக்ரமரட்ன தெரிவித்துள்ளார்.
புதிய அரசியல் சாசனமொன்றை உருவாக்குவதற்கு அனைத்து அரசியல் கட்சிகளும் நெகிழ்வுப் போக்குடன் அரசாங்கத்திற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென குறிப்பிட்டுள்ள அவர் அரசியல் சாசனத் திருத்தங்கள் ஒரு தனிப்பட்ட நபரின் நலனுக்கானது அல்ல எனவும் ஒட்டுமொத்த மக்களுக்குமானது எனவும் தெரிவித்துள்ளார்.
கடந்த காலங்களில் உருவாக்கப்பட்ட அரசியல் சாசனங்கள் தனிப்பட்ட அரசியல் கட்சிகளின் விருப்பு வெறுப்புக்களை உள்ளடக்கி அதன் தேவைகளுக்காக உருவாக்கப்பட்டவை எனவும் தற்போது நாட்டில் ஐக்கிய தேசியக் கட்சியும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் இணைந்து ஆட்சி நடத்தி வருவதாகவும் இதனால் மக்களுக்கு நலன் அளிக்கக்கூடிய வகையில் புதிய அரசியல் சாசனத்தை உருவாக்க சாத்தியமுண்டு எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
புதிய அரசியல் சாசனத்தில் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை ரத்து செய்யப்பட வேண்டுமென குறிப்பிட்டுள்ள அவர் இலங்கையில் அரச மதம் என எதுவும் கிடையாது எனவும் எனினும், பௌத்த மதத்திற்கு அதி முக்கியத்துவம் வழங்கப்படுவதாகவும், ஏனைய மதங்களின் உரிமைகளும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் எனவே, மதம் குறித்த தற்போதைய சரத்துக்களில் மாற்றம் செய்ய வேண்டிய அவசியமிருக்காது எனவும் குறிப்பிட்டுள்ளார்.
நிரந்தர அரசியல் தீர்வுத் திட்டமொன்றை முன்வைப்பதற்கு புதிய அரசியல் சாசனம் வழியமைக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.