கேரளாவில் ஒரு மையத்தில் நீட் தேர்வு எழுத வந்த ஒரு மாணவி யின் ஆடையை கழட்டச் சொன்ன சம்பவம் அதிர்வலை களை ஏற்படுத்தி உள்ளது. நாடு முழுவதும் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் சேர்வதற்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (நீட்) நேற்று முன்தினம் நடைபெற்றது. இந்தத் தேர்வை நடத்திய மத்திய பள்ளிக்கல்வி வாரியம் (சிபிஎஸ்இ), முறைகேடுகளை தடுப்பதற்காக பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்திருந்தது.
இந்நிலையில், கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டம் பரியரம் மையத்தில் தேர்வு எழுத வந்த ஒரு மாணவியிடம் மேல் உள்ளாடையை கழட்டுமாறு தேர்வு கூட கண்காணிப்பாளர் கூறியுள்ளார். இதையடுத்து, அந்த மாணவி உள்ளாடையைக் கழட்டி மையத்துக்கு வெளியே இருந்த தனது தாயிடம் கொடுத்துவிட்ட வந்த பிறகே, அவர் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்தத் தகவலை அந்த மாணவியின் தாய் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மாணவியின் தாய் கூறும்போது, “மெட்டல் டிடெக்டர் கருவி மூலம் எனது மகளைக் கண்காணிப்பாளர் பரிசோதித்துள்ளார். அப்போது பீப் ஒலி வந்ததால் உள்ளாடையை கழட்டச் சொல்லி உள்ளார். ஆனால் அந்த ஆடையில் இருந்த மெட்டல் கொக்கிதான் பீப் ஒலி வரக் காரணம்” என்றார்.
இதுபோன்ற கடுமையான உடை கட்டுப்பாடுகளால் நாடு முழுவதும் பல மாணவிகள் பாதிக்கப்பட்டதாக புகார் எழுந்துள்ளது.
இதுகுறித்து கண்ணூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜி.சிவ விகரம் கூறும்போது, “இந்த சம்பவம் தொடர்பாக இதுவரை புகார் வரவில்லை. பாதிக்கப்பட்ட மாணவியோ அவரது பெற்றோரோ புகார் செய்தால் நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.
இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்படும் என்று மாநில கல்வி அமைச்சர் சி.ரவீந்திரநாத் தெரிவித்தார். இதுபோல எதிர்க்கட்சியினரும் இந்த சம்பவத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
மனித உரிமை ஆணையம் வழக்கு
இதனிடையே, இந்த சம்பவம் தொடர்பாக மாநில மனித உரிமை ஆணையம் நேற்று வழக்குப் பதிவு செய்தது. இதுகுறித்து விளக்கம் அளிக்குமாறு சிபிஎஸ்இ-க்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது. இது மோசமான மனித உரிமை மீறல் என தெரிவித்துள்ள ஆணை யம், தேசிய மனித உரிமை ஆணையத்துக்கும் தகவல் தெரி வித்துள்ளது. இதுபோல, இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த கேரள மகளிர் ஆணையமும் உத்தரவிட்டுள்ளது.