கடந்த வருடம் பாடசாலை மட்டத்தில் இடம்பெற்ற கரப்பாந்தாட்டப் போட்டியில் வடக்கு மாகாண மட்டத்தில் வெற்றிப்பெற்று தேசிய மட்டத்திற்குச்சென்ற கிளிநொச்சி பாரதிபுரம் வித்தியாலய அணியை இம்முறை மாகாண மட்ட போட்டிகளுக்களுக்கே அனுப்பாது விட்டமை பெற்றோர்கள் மத்தியிலும் மாணவர்கள் மத்தியிலும் பெரும் கவலையையும் அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது
கிளிநொச்சி மாவட்டத்தில் பாடசாலை மட்டத்தில் கரப்பாந்தாட்ட போட்டியில் கிளிநொச்சி பாரதிபுரம் வித்தியாலயம் சிறந்த அணியாக திகழ்ந்து வருகிறது. கடந்த வருடம் இடம்பெற்ற கரப்பாந்தாட்டப் போட்டியில் வலய மட்டம், மாகாண மட்டம் என தொடர்ச்சியாக வெற்றிப்பெற்று தேசிய மட்டத்திற்கு சென்று நாட்டில் உள்ள பிரபல பாடசாலைகளுடன் போட்டியிட்டனர். தேசிய மட்டத்தில் வெற்றி வாய்ப்பு இல்லாத போதிலும் போட்டியில் பங்குபற்றுகின்ற எதிரணிக்கு சவால்மிக்க அணியாக காணப்பட்டது. அப்படியான திறமை மிக்க அணியை இந்த தடவை மாகாண மட்டத்திற்கே பாடசாலை அணுப்பவில்லை என்பது பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
போட்டியிடுகின்ற அணியில் ஆறு வீரர்கள் விளையாடுவார்கள். மேலதிகமாக இன்னும் ஆறு வீரர்கள் அணியில் காணப்படுவர். ஆனால் கடந்த வருடம் க.பொ.த சாதாரண தரம் பரீட்சையில் இந்த அணியைச் சேர்ந்த விளையாடுகின்ற ஆறு பேரில் மாணவன் ஒருவன் பரீட்சையில் சித்தியடையவில்லை இதனால் அணியை மாகாண மட்ட போட்டிக்கு பாடசாலை அனுப்பாது என அதிபர் எழுத்து மூலம் அறிவித்துவிட்டார். ஆனால் இது மிகவும் கவலைக்குரிய விடயம் மிகவும் எதிர்பார்போடு இருந்த ஒரு அணியில் ஒருவர் இல்லையென்றால் பாடசாலை வேறு ஒருவரை தயார் செய்து போட்டிக்கு அனுப்பியிருக்க வேண்டும். அணியில் இருக்கின்ற ஏனைய ஜந்து வீரர்களும் தேசிய மட்டம் வரை சென்று விளையாடியவர்கள் என்பதனால் அவர்கள் அணியை சமாளித்து போட்டிகளில் பங்குபற்றி சாதித்திருப்பார்கள். அதனை பாடசாலை செய்யவில்லை அது பாடசாலை நிர்வாகத்தின் அக்கறையின்மையே என வலயக் கல்வித்திணைக்கள அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
மாகாண மட்டத்தில் போட்டியிடுகின்ற அணிகளுக்கான போட்டி அட்டவணை(றோ) தயாரிக்கின்ற போது பாரதிபுரம் வித்தியாலய அணியை எதிர்கொள்ளப் போகின்றோம் என்ற பயத்தை பலரிடம் அவதானிக்க நேர்ந்தது அப்படிப்பட்ட எதிர்பார்போடு காணப்பட்ட ஒரு அணியை போட்டிக்கு அனுப்பாது விட்டமை கவலைக்குரியது எனவும் வலயக் கல்வித்திணைக்களத்தின் மற்றுமொரு அதிகாரி குறிப்பிட்டார்.
இது தொடர்பில் பாடசாலை அதிபருடன் தொடர்பு கொண்டு கேட்ட போது அணியில் காணப்படுகின்ற மேலதிக வீரர்களையும் சேர்த்து காணப்படுகின்ற பன்னிரண்டு பேரில் ஏழு பேர் க.பொ.த.சாதாரன தரம் பரீட்சையில் சித்தியடையாத காரணத்தினால் அணியை நாங்கள் போட்டிக்கு அனுப்பவில்லை என எழுத்து மூலம் உரியவர்களுக்கு அறிவித்து விட்டோம் என்றார்.