கடந்த நாற்பத்து நான்கு ஆண்டுகளாக தமிழகத்தில் வசித்துவரும் தான், பச்சைத் தமிழன்தான் என்றும் தமக்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்கள், அந்த எதிர்ப்புகளின் மூலம் உதவிக்கொண்டிருப்பதாகவும் நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
ரஜினிகாந்த் கடந்த மே 15ஆம் தேதி முதல் தன்னுடைய ரசிகர்களை சந்தித்து அவர்களுடன் புகைப்படம் எடுத்துவருகிறார். முதல் நாளில் புகைப்படம் எடுத்துக்கொள்வதற்கு முன்பாக ரசிகர்கள் மத்தியில் சிறிது நேரம் ரஜினி உரையாற்றினார். அதற்குப் பின், இன்றும் புகைப்படம் எடுத்துக்கொள்வதற்கு முன்பாக ரசிகர்கள் மத்தியில் உரையாற்றினார்.
“முதல் நாளில் ரசிகர்கள் மத்தியில், அரசியலுக்கு வருவது குறித்து நான் தெரிவித்த சில கருத்துக்கள் பெரும் விமர்சனங்களுக்கும் எதிர்ப்புக்கும் உள்ளாகின. எதிர்ப்புகள் இருக்க வேண்டியதுதான். சமூக வலைதளங்களிலும் இது குறித்து கடுமையாகப் பேசினார்கள். அதில் எழுதியிருந்த வாசகங்களைப் பார்த்து நான் வருத்தப்படவில்லை. ஆனால், நம் தமிழ் மக்கள் ஏன் இவ்வளவு கீழ்த்தரமாகப் போய்விட்டார்கள் என்று தோன்றியது” என ரஜினி குறிப்பிட்டார்.
மேலும், “ரஜினிகாந்த் தமிழரா என்ற கேள்வி வருகிறது. எனக்கு இப்போது 67 வயதாகிறது. 23 ஆண்டுதான் நான் கர்நாடகத்தில் இருந்தேன். மீதி 44 ஆண்டுகள் நான் தமிழ்நாட்டில்தான் இருக்கிறேன். கர்நாடகத்திலிருந்து, மராட்டியத்திலிருந்து வந்திருந்தாலும் நீங்கள்தான், பெயரும் புகழும் கொடுத்து அன்பைக் கொடுத்து நீங்கள் என்னைத் தமிழனாகவே ஆக்கிவிட்டீர்கள். நான் பச்சைத் தமிழன். என்னுடைய மூதாதையர்கள், அப்பா எல்லாம் கிருஷ்ணகிரி மாவட்டம் நாச்சிக்குப்பத்தில் பிறந்தவர்கள்” என்று தெரிவித்த ரஜினி, “என்னை இங்கிருந்து போ என்று தூக்கிப்போட்டால் இமயமலையில்தான் போய்விழுவேன். ஏனென்றால் நல்ல மக்கள் உள்ள தமிழகத்தில் இருக்க வேண்டும் அல்லது சித்தர்கள் வாழும் இமயமலையில் இருக்க வேண்டும்” என்றார்.
“மு.க. ஸ்டாலின் என் நெருங்கிய நண்பர். நல்ல திறமையான நிர்வாகி. சோ அடிக்கடி சொல்வார், அவருக்கு ஃப்ரீ ஹாண்ட் கொடுத்தால் சிறப்பாக செயல்படுவார் என்று. அன்புமணி ராமதாஸ், நல்ல படிச்சவர், மார்டனா திங்க் பண்ணுவார். திருமாவளவன் தலித்துகளுக்காக உழைத்துக்கொண்டிருக்கிறார். சீமான், போராளி. அவருடைய சில கருத்துக்களைப் பார்த்து பிரமித்துப் போயிருக்கிறேன். ஆனால், அமைப்பு கெட்டுப்போயிருக்கிறது. ஜனநாயகமே கெட்டுபோயிருக்கிறது. அமைப்பை மாற்ற வேண்டும். மக்களின் மனப்போக்கை மாற்ற வேண்டும். ஒரு மாற்றத்தை உண்டாக்க வேண்டும். அப்பதான் நாடு உருப்படும். அது எல்லோரும் சேர்ந்தது செய்ய வேண்டிய வேலை” என்று கூறிய ரஜினி, தனக்கு தொடர்ந்து எதிர்ப்புகள் வருவது குறித்துப் பேசினார்.
“எதிர்ப்பு இருந்தால்தான் வளர முடியும். ஒரு செடியை வளரச் செய்ய மண்ணைப் போட்டு மூடுவதுபோலத்தான் இந்த எதிர்ப்புகள், திட்டுகள் எல்லாம். இந்த எதிர்ப்புகளால் செடி நன்றாக வெளியில்வரும். அவர்கள் நமக்கு உதவிக்கொண்டிருக்கிறார்கள் என்பது அவர்களுக்குத் தெரிவதில்லை” என தெரிவித்த ரஜினி…
தன்னுடைய அரசியல் ஆர்வம் குறித்து சூசகமாகக் குறிப்பிடுவதைப் போல, “முந்தைய காலத்தில் ராஜாக்களிடம் பெரிய அளவில் படைபலம் இருக்காது. ஆனால், போர் என்று வரும்போது எல்லா ஆண் மக்களும் சேர்ந்துவந்து போரிடுவாங்க.அதுவரை அவர்கள், அவர்களுடைய வேலையைப் பார்த்துக்கொண்டிருப்பார்கள். அதற்காகத்தான் வீர விளையாட்டுகள். போர் வரும்போது எல்லோரும் தங்கள் மண்ணுக்காக போராடுவார்கள்.
அதுபோல எனக்கு கடமைகள், வேலைகள் இருக்கின்றன. உங்களுக்கும் கடமைகள், வேலைகள் இருக்கின்றன. ஊருக்குப் போங்க, வேலைகளைப் பாருங்க. போர் வரும்போது சந்திப்போம்” எனவும் ரஜினிகாந் தெரிவித்தார்.
கடந்த பத்தாண்டுகளுக்குப் பிறகு, ரஜினிகாந்த் தன்னுடைய ரசிகர்களைச் சந்தித்து அவர்களுடன் புகைப்படம் எடுத்துவருகிறார். இதற்காக அவருக்குச் சொந்தமான ராகவேந்திரா கல்யாண மண்டபத்தில் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன.
ஷங்கரின் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துவரும் 2.0 படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்ட நிலையில், அடுத்த படத்தின் படப்பிடிப்பு வரும் மே 28ஆம் தேதி ஆரம்பமாகிறது.
இதேவேளை முள்ளிவாய்க்கால் பேரவலம் குறித்து ரஜனிகாந்திடம் முன்பு கேட்கப்பட்ட கேள்வி ஒன்றிற்கு “No comments” எனத் தெரிவித்து இருந்தமை குறிப்பிடத்தக்கது.