குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு
நிதி நகரத்தை அமைக்கும் பணிகள் துரித கதியில் மேற்கொள்ளப்படும் எனவும் நாட்டின் எதிர்கால அபிவிருத்தித் திட்டங்கள் குறித்த விடயங்கள் எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்திற்கு முன்னதாக சமர்ப்பிக்கப்பட உள்ளதாகவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச் சலுகையை மீளப் பெற்றுக்கொண்டு நாட்டின் இளைஞர் யுவதிகளுக்கு தொழில் வாய்ப்புக்களை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் இந்து சமுத்திரத்தின் கேந்திர நிலையமாக இலங்கையை மாற்றியமைப்பதே தற்போதைய அரசாங்கத்தின் நோக்கமாக அமைந்துள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
துறைமுகம் மற்றும் விமான நிலையம் ஆகியனவற்றை மேலும் அபிவிருத்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என குறிப்பிட்டுள்ள அவர் கொழும்பு, ஹம்பாந்தோட்டை, திருகோணமலை ஆகிய துறைமுகங்களையும், மத்தள மற்றும் கட்டுநாயக்க விமான நிலையங்களையும் அபிவிருத்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
சிங்கப்பூருக்கும் இலங்கைக்கும் இடையில் காணப்படும் ஒரே நிதி நகரமாக கொழும்பு மாற்றியமைக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.