குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு
தற்போதைய சூழ்நிலை குறித்து கூடுதல் கவனம் செலுத்துமாறு இலங்கை அரசாங்கத்திற்கு ஐக்கிய நாடுகள் அமைப்பின் சிறுபான்மை பிரச்சினைகள் குறித்த விசேட பிரதிநிதி ரீடா இசாக் தெரிவித்துள்ளார்.கடந்த காலத்திலேயே தொடர்ந்து இருப்பதனை தவிர்த்து தற்போதைய சூழ்நிலை குறித்து கவனம் செலுத்தப்பட வேண்டுமென சிறைச்சாலைகள் மறுசீமைப்பு, புனர்வாழ்வு புனரமைப்பு மற்றும் இந்து சமய விவகார அமைச்சர் டி.எம் சுவாமிநாதனை சந்தித்த போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். கடந்த காலப் பிரச்சினைகளிலேயே தங்கியிருக்காது, தற்போதைய சூழ்நிலையில் சிறுபான்மை சமூகத்தினரின் பிரச்சினைகள் மனித உரிமை விவகாரங்கள் குறித்து கூடுதல் கவனம் செலுத்தப்பட வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.
இதேவேளை, நாட்டின் மனித உரிமை நிலைமைகளை மேம்படுத்துவதற்கு அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளதாகவும் பயங்கரவாதத் தடைச் சட்டம் நீக்கப்பட்டு புதிய சட்டமொன்று அறிமுகம் செய்யப்பட உள்ளதாகவும் அமைச்சர் சுவாமிநாதன் தெரிவித்துள்ளார். சிறுபான்மை சமூகத்தினர் மற்றும் ஏனைய இலங்கைப் பிரஜைகளின் உரிமைகளை உறுதி செய்யும் நோக்கில் சுயாதீன ஆணைக்குழுக்கள் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.