ஊர்காவற்துறை பாலக்காட்டு சந்தி பகுதியில் நடைபெற்ற விபத்து சம்பவத்தினை அடுத்து வன்முறைகளில் ஈடுபட்டார்கள் எனும் சந்தேகத்தில் மெலிஞ்சி முனை பகுதியை சேர்ந்த பெண் உட்பட 17 பேர் இரண்டு நாட்களில் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
ஊர்காவற்துறை பாலக்காட்டு சந்தியில் கடந்த வாரம் தனியார் பேருந்து ஒன்றும் துவிச்சக்கர வண்டி ஒன்றும் மோதி விபத்துக்கு உள்ளாகியதில் மெலிஞ்சிமுனை பகுதியை சேர்ந்த ஜெயக்குமார் அகிலன் எனும் 16 வயது மாணவன் உயிரிழந்தார்.
அதனை அடுத்து விபத்துக்கு உள்ளான பேருந்தினை உயிரிழந்த மாணவனின் உறவினர்கள் அடித்து நொருக்கி இருந்தனர்.அதனை கையடக்க தொலைபேசியில் புகைப்படம் எடுத்த இளைஞர் ஒருவரையும் தாக்கி , அவரது கையடக்க தொலைபேசியினையும் பறித்து உடைத்துள்ளனர்.
இந்த வன்முறை சம்பவங்கள் தொடர்பில் ஊர்காவற்துறை போலீசார் , ஊர்காவற்துறை நீதிவான் ஏ.எம்.எம்.ரியாழின் கவனத்திற்கு கொண்டு சென்று இருந்தனர். அதனை அடுத்து , வன்முறைகளில் ஈடுபட்டவர்களை கைது செய்து நீதிமன்றில் முற்படுத்துமாறு பொலிசாருக்கு நீதிவான் உத்தரவு இட்டு இருந்தார்.
அதனை அடுத்து நேற்று முன்தினம் இரவு மெலிஞ்சி முனையை சேர்ந்த இருவரை போலீசார் கைது செய்து நேற்றைய தினம் ஊர்காவற்துறை நீதிமன்றில் முற்படுத்தினர். அதனை அடுத்து அவர்கள் இருவரையும் 29 ஆம் திகதி வரையில் விளக்க மறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவு இட்டார்.
அந்நிலையில் நேற்று வியாழக்கிழமை பெண் ஒருவர் உட்பட 15 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கைகளை போலீசார் முன்னெடுத்து வருகின்றனர்