சத்தமாக பிரித் பாராயணம் செய்து அயலர்களை தொல்லைப்படுத்த வேண்டாம் என எலன் மெதினியாராமயவின் பீடாதிபதி உடுவே தம்மாலோக தேரருக்கு நீதிமன்றம் அறிவுரை வழங்கியுள்ளது. கொழும்பு நீதவான் துலானி அமரசிங்க இந்த அறிவுரையை வழங்கியுள்ளார். கொழும்பு பொல்ஹென்கொட எலன்மெதினியாராமயவிற்கு அருகாமையில் வாழ்ந்து வரும் பொதுமக்கள் தம்மாலோக தேரருக்கு எதிராக நீதிமன்றில் வழக்குத் தொடர்ந்துள்ளனர்.
அதிகாலையில் சத்தமாக பிரித் பாராயணம் செய்வதனால் தமக்கு உளவியல் ரீதியாக பாதிப்பு ஏற்படுவதாகவும், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும் வகையில் சத்தமாக பாராயணம் செய்யப்படுவதாகவும் மனுவில் குற்றம் சுமத்தியுள்ளனர்.
முன்னாள் அமைச்சர் மிலிந்த மொரகொட உள்ளிட்டவர்களும் இந்த வழக்கின் மனுதாரர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. சத்தமாக பிரித் பாராயணம் ஒலிபரப்புச் செய்வதற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட முடியாது என தம்மாலோக தேரர் வெளியிட்ட எதிர்ப்பை நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
இதன்படி குறித்த எதிர்வரும் ஜூலை மாதம் 18ம் திகதி இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளது.