சர்வதேச கிரிக்கட் பேரவையின் சம்பியன்ஸ் கிண்ணப் போட்டித் தொடரிலிருந்து அவுஸ்திரேலிய அணி வெளியேறியுள்ளது. நேற்றைய தினம் நடைபெற்ற போட்டியில் அவுஸ்திரேலிய அணியை இங்கிலாந்து அணி டக்வர்த் என்ட் லுயிஸ் முறையில் வீழ்த்தியது.
நாணய சுழற்சியில் வெற்றியீட்டிய இங்கிலாந்து அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது. இதன்படி களமிறங்கிய அவுஸ்திரேலிய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 9 விக்கட்டுகளை இழந்து 277 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது. இதில் ட்ரவர் ஹெட் 71 ஓட்டங்களையும் ஆரோன் பின்ச் 78 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.பந்து வீச்சில் மார்க் வுட் மற்றும் அதீல் ராசீட் ஆகியோர் தலா 4 விக்கட்டுகளை வீழ்த்தினர். பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணியின் இன்னிங்ஸிற்கு மழை குறுக்கீடு செய்தது.
எனினும், டக்வர்த் என்ட் லுயிஸ் முறையில் இங்கிலாலந்து அணி 40 ஓட்டங்களினால் வெற்றியீட்டியதாக அறிவிக்கப்பட்டது. இங்கிலாந்து அணி 40.2 ஓவர்களில் 4 விக்கட்டுகளை இழந்து 240 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது. இதில், பென் ஸ்டோக்ஸ் ஆட்டமிழக்காது 102 ஓட்டங்களையும் இயோன் மோகன் 87 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர். இங்கிலாந்து அணி அவுஸ்திரேலியாவை தோற்கடித்ததன் மூலம் பங்களாதேஸ் அணி அரையிறுதிக்கு தகுதி பெற்றுக்கொண்டுள்ளது.