குறுகிய காலப்பகுதியில் புதிய அரசாங்கத்தின் கீழ் இலங்கையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் ஐரோப்பிய நாடுகளுக்கு வியப்பாகவுள்ளதாக இலங்கைக்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் புதிய தூதுவர் Tung-Lai Margue தெரிவித்துள்ளார். நல்லிணக்கம், பொருளாதார அபிவிருத்தி மற்றும் சமூக முன்னேற்றத்திற்கான அரசாங்கத்தின் திட்டங்களுக்கு ஐரோப்பிய ஒன்றியம் முழு அளவில் உதவும் எனவும் அவர் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவிடம் உறுதியளித்துள்ளார்.
ஐரோப்பிய ஒன்றியத்தின் புதிய தூதுவர் Tung-Lai Margue தனது நியமனக்கடிதத்தை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்களிடம் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் வைத்து இன்று(14) கையளித்த வேளையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அதேவேளை ஐரோப்பிய ஒன்றியத்தின் உறுப்பு நாடுகளுக்கும் இலங்கைக்குமிடையிலான இருதரப்பு உறவுகள் குறித்து கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி, ஜனநாயகம், நல்லிணக்கம், வர்த்தகம் மற்றும் முதலீடுகள் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இருதரப்பு உறவை மேலும் பலப்படுத்த புதிய தூதுவர் ஒத்துழைப்பு வழங்குவார் என நம்பிக்கை வெளியிட்டார்.