192
ஆளும் கட்சியில் உள்ள தமிழரசு கட்சி உறுப்பினர்கள் , எதிர்க்கட்சி தலைவர் உள்ளிட்டோர் வடமாகாண சபையில் வெளிநடப்பு செய்தனர்.முன்னதாக இன்றைய சபை அமர்வில் தமது கருத்துக்களை தெரிவிக்க சந்தர்ப்பம் வழங்க வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் சி.தவராசா சபையில் கோரிக்கை விடுத்திருந்தார்.
அதற்கு ஆளும் கட்சியான தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.குறிப்பாக தமிழரசு கட்சி உறுப்பினர்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர்.
இன்றைய அமர்வு அமைச்சர்கள் தன்னிலை விளக்கம் கொடுப்பதற்காக கூடிய அமர்வு அமைச்சர்கள் தன்னிலை விளக்கம் கொடுத்துள்ளனர். இனி இது தொடர்பில் முதலமைச்சர் முடிவெடுக்கட்டும் என ஆளும் கட்சி உறுப்பினர்கள் தொடர்ந்து வலியுறுத்தினார்கள்.
இந்த அமர்வில் விவசாய அமைச்சர் சபையில் தன்னிலை விளக்கம் கொடுத்துள்ளார். அது தொடர்பில் கருத்துக்கூற வேண்டும் அதற்கு இந்த சபை அனுமதிக்க வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் கோரினார்.
அதற்கு அவைத்தலைவர் அனுமதி வழங்காத நிலையில் எதிர்க்கட்சி தலைவர் சி.தவராசா மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர் ஜெயதிலக ஆகியோர் வெளிநடப்பு செய்தனர்.
அதனை தொடர்ந்து ஆளும் கட்சி உறுப்பினர்களான கே.சயந்தன் , அஸ்மீன் உள்ளிட்ட சில உறுப்பினர்கள் விசாரணை குழு அறிக்கை தொடர்பில் முதலமைச்சர் இன்றைய தினம் கருத்து தெரிவிக்க கூடாது என வலியுறுத்தினார்கள்.
இருந்த போதிலும் சபையில் முதலமைச்சர் உரை நிகழ்த்தினார். அதற்கு எதிர்ப்பு தெரிவித்து அமைச்சர்களான த.குருகுலராஜா மற்றும் ப.சத்தியலிங்கம் பிரதி அவைத்தலைவர் கமலேஸ்வரன் உட்பட ஆளும் கட்சி உறுப்பினர்களான கே.சயந்தன் , எஸ்.சுகிர்தன் , அயூப் அஸ்மீன் , இ.ஆனோல்ட் , பசுபதிப்பிள்ளை , அரியரட்னம் , பரம்சோதி , சிராய்வா , சிவயோகன் , உள்ளிட்டோர் வெளிநடப்பு செய்தனர்.
ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்த நிலையில் முதலமைச்சர் சபையில் உரையாற்றினார்.அதன் போது குற்றச்சாட்டுக்கு உள்ளான அமைச்சர்கள் இருவரையும் தாமாக பதவி விலகுமாறும், நாளை மதியத்திற்கு முன்னர் தமது ராஜினாமா கடிதத்தை ஒப்படைக்குமாறும் முதலமைச்சர் வலியுறுத்தினார்.
Spread the love