குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு
தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டவர் சண்டே லீடர் பத்திரிகையின் ஸ்தாபகப் பிரதம ஆசிரியர் லசந்த விக்ரமதுங்கவின் மெய்யான கொலையாளியா என்பது குறித்து விரிவான அடிப்படையில் விசாரணைகள் நடத்தப்பட உள்ளன. லசந்தவை தாமே கொன்றதாக கடிதம் ஒன்றை எழுதி வைத்து நேற்றைய தினம் கேகாலை பிரதேசத்தில் உள்ள தமது வீட்டில், ஓய்வு பெற்ற இராணுவப் புலனாய்வு உத்தியோகத்தர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருந்தார்.
ஓய்வு பெற்ற புலனாய்வுப் பிரிவு உத்தியோகத்தர் கொலை செய்யப்பட்டாரா அல்லது வேறும் தரப்பினர் கொலை செய்தனரா என்பது குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இந்த புலனாய்வு உத்தியோகத்தர் தற்கொலை செய்து கொள்ள நியாயமான காரணங்கள் இருந்தனவா என்பது குறித்து விசாரணை நடத்தப்பட உள்ளது.
இந்த உத்தியோகத்தரின் மனைவி சில ஆண்டுகளுக்கு முன்னதாக வெளிநாட்டு வேலை வாய்ப்பு பெற்றுச் சென்றுள்ளதுடன் இவர் பிள்ளைகளுடன் வீட்டில் வாழ்ந்து வந்துள்ளார். இராணுவ உத்தியோகத்தர் எழுதிய கடிதம் தொடர்பிலும் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இந்த கடிதத்தின் கையெழுத்து தமது தந்தையின் கையெழுத்திற்கு நிகரானது என அவரது மகன் காவல்துறையினரிடம் தெரிவித்துள்ளார்.
1 comment
தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டவர் லசந்த விக்ரமதுங்கவைக் கொன்ற மெய்யான கொலையாளியாக இருக்கும் வாய்ப்புக்கள் மிக மிக அரிதென்றே கூற வேண்டும்? ஏறக்குறைய பத்து வருடங்களுக்கு முன்பு நடந்த ஒரு சம்பவம் மனவுறுத்தலைத் தந்தமை காரணமாகத் தற்கொலை செய்வதென்பது, நம்பும்படியாக இல்லை?
சமூகத்தில் கனவான்களாக உலா வரும் உண்மையான கொலையாளிகள், ஏதாவது ஒரு வகையில் முன்னாள் புலனாய்வுப் பிரிவு அதிகாரியைத் தற்கொலைக்குத் தூண்டியிருக்கலாம் அல்லது கொன்றிருக்கலாம் ? அநேகமாக இது கொலையாக இருக்கவல்ல வாய்ப்புக்களே அதிகமாகும்! கடிதத்தில் காணப்படும் கையெழுத்து, இறந்தவரின் கையெழுத்தை ஓத்திருப்பதென்பது, ஒன்றும் புதுமையான விடயமல்ல! கையெழுத்துக் குறித்த பிரச்னையை, அதற்கேயுரிய நிபுணர்களின் பரிசோதனைகள் மூலம் உறுதிப்படுத்துவதே பொருத்தமானதாக இருக்கும்!
ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றக் காத்திருப்பவர்கள், எதிர்காலத்தில் தமக்குச் சவாலாக இருக்கக்கூடிய பிரச்சனைகளை தற்பொழுதே களையெடுக்க விரும்புகின்றார்கள்போலும்? மகிந்த ஆட்சிக் காலத்தில் அதிகாரத்தில் இருந்த பலரின், இது போன்ற மர்ம மரணங்கள் எதிர்வரும் நாட்களில் இன்னும் தொடருமென எதிர்பார்க்கலாம்!