குளோபல்தமிழ்ச்செய்தியாளர்
பொதுபல சேனா இயக்கத்தின் பொதுச் செயலாளர் கலகொடத்தே ஞானசார தேரரை தாம் மறைத்து வைத்திருக்கவில்லை என நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
நீதிமன்றில் பிடிவிராந்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள ஞானசார தேரரை தாம் மறைத்து வைத்திருப்பதாக சில கூறி வரும் கருத்துக்கள் கவலையளிப்பதாகத் தெரிவித்துள்ளார்.
கடந்த சில வாரங்களாக சிங்கள முஸ்லிம் சமூகங்களுக்கு இடையில் முரண்பாட்டை ஏற்படுத்தும் முயற்சியில் சில தரப்பினர் ஈடுபட்டு வருகின்றனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இரண்டு தரப்பினருடனும் பேச்சுவார்த்தை நடத்தி இவ்வாறான நிலைமைகளை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட அர்ப்பணிப்புடன் செயற்படத் தீர்மானித்திருக்கின்றேன் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
2010 முதல் 2014ம் ஆண்டு வரையிலான காலப் பகுதியில் அலுத்கம சம்பவம் உள்ளிட்ட பல்வேறு பாரிய சம்பவங்கள் இடம்பெற்றிருந்ததாக அவர் தெரிவித்துள்ளார்.
இவ்வாறான சம்பவங்களின் போது ஞானசார தேரரை கைது செய்ய எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவும் அப்போது நீதி அமைச்சராக ரவூப் ஹக்கீம் கடமையாற்றியிருந்தார் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.