குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு
அரசியல்வாதிகள், உயர் அரச அதிகாரிகள் கைது செய்யப்படுவதற்கு முன்னதாக அவர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் குறித்து விசாரணை நடத்த விசேட குழுவொன்று நிறுவப்பட உள்ளது. குற்றச்சாட்டுக்கள் குறித்து விசாரணை நடத்தி தீர்மானங்களை எடுக்க பாராளுமன்ற தெரிவுக்குழு ஒன்றை நிறுவுமாறு பணித்துள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன் இந்த குழுவினை நிறுவுவதற்கான அமைச்சரவை பத்திரமொன்றையும் பாராளுமன்றில் சமர்ப்பித்து அனுமதி பெற்றுக்கொள்ளுமாறும் அறிவித்துள்ளார்.
இனி வரும் காலங்களில் அரசியல் பிரபு அல்லது அரச உயர் அதிகாரி ஒருவருக்கு எதிரான விசாரணைகள் தொடர்பில் இந்த பாரளுமன்ற குழுவிற்கு அறிவிக்க வேண்டும் எனவும் இந்த குழுவின் பரிந்துரைக்கு அமையவே இனி வரும் காலங்களில் அரசியல் பிரபுக்கள் மற்றும் அதிகாரிகளை கைது செய்ய முடியும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
1 comment
அரசியல்வாதிகள், உயர் அரச அதிகாரிகள் கைது செய்யப்படுவதற்கு முன்னதாக, அவர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் குறித்து விசாரணை நடத்தி தீர்மானங்களை எடுக்க பாராளுமன்ற தெரிவுக்குழு ஒன்றை நிறுவுமாறு திரு. மைத்திரிபால சிறிசேன பணித்திருப்பாரானால், அவர் மேன்மேலும் தவறுகளுக்குத் துணை போகின்றாரென்றே கூறவேண்டும்!
சட்டம் என்பது எல்லோருக்கும் சமமென்றால், ஊழல் மற்றும் முறைகேடுகளில் ஈடுபடும்
அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகளை விசாரணை செய்வதற்கு மட்டும் எதற்குப் புதிதாக ஒரு பாராளுமன்றத் தெரிவுக்குழு? இது போன்ற முறைகேடான விசாரணைகள், கால இழுத்தடிப்பாகவும், குற்றச்செயல்களுக்கான ஆதாரங்களை மறைப்பதற்கான அவகாசத்தைக் கொடுப்பதாகவுமே அமையும்? நீதித் துறையின் சுயாதீன இயங்கு தன்மைக்கு ஐனாதிபதி மேன்மேலும் இடையூறு விளைவிக்கின்றார் என்றே எண்ணத் தோன்றுகின்றது?
தனது தவறை மறைக்க ஜனாதிபதி இன்று என்னதான் கூறினாலும், குறித்த 3 விசாரணைக் குழுக்கள் தொடர்பில் அவர் தெரிவித்த கருத்துக்கள் ஏற்புடையனவல்ல என்பதோடு, மிகவும் கண்டிக்கப்பட வேண்டியவையே, என்பதில் மாற்றுக் கருத்தில்லை! சமகாலத்தில் நிகழ்ந்த இரவுக்கு கேளிக்கை விடுத்தித் தாக்குதலில் ஜனாதிபதியின் மகனான தகம் சிறிசேன தொடர்பு பட்டிருப்பதாக சந்தேகம் நிலவுவதால், அச் செய்தியைத் திசை திருப்பும் நோக்கில் ஜனாதிபதி இப்படி நடந்துகொண்டிருப்பாரோ, என்றும் சந்தேகிக்க வேண்டியுள்ளது? ஜனாதிபதியையும், ஆளும் அரசையும் கண்கொத்திப் பாம்பு போலக் கண்காணித்துக் கொண்டிருக்கும் எதிர்க் கட்சிக் கூட்டணியில் இருக்கும் எவரும் இது குறித்த கண்டனத்தைத் தெரிவித்ததாகத் தெரியவில்லை?
நாட்டு மக்களின் வரிப்பணத்தைக் கொள்ளையடித்த, நாட்டுக்கும் மக்களுக்கும் பெரு நஷ்டத்தை ஏற்படுத்திய, ராஜபக்ஷர்களுக்கும், பாதுகாப்புத் துறை அதிகாரிகளுக்கும் எதிரான பல மில்லியன் ஊழல் குறித்த விசாரணையையே கண்டிக்கும் ஜனாதிபதி, குறிபிட்ட அவர்களுக்கே எதிரான போர்க் குற்ற விசாரணைகளை மட்டும் நடத்த அனுமதிக்கவா போகின்றார்?
‘ஆளுமையற்ற ஜனாதிபதி’, என்ற அவச் சொல்லை நாடுகளும், மக்களும் உச்சரிக்கக் கூடாதென்றால், ஜனாதிபதி அவரது பேச்சிலும் நடவடிக்கைகளிலும் மிக விழிப்பாக இருக்க வேண்டும்? பல மில்லியன் ரூபாய்களை ஊதியமாக வழங்கிப் பல(?) ஆலோசகர்களை வைத்திருந்தும், அவர்களின் ஆலோசனை இன்றிக்(?) கருத்துத் தெரிவிப்பாரானால், அவரின் அரசியல் எதிர்காலம் சூனியமானதாகவே இருக்கும்? சிந்தித்துச் செயற்படுவாரென நம்புவோம்!