குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
நிதிக் குற்றவியல் விசாரணைப் பிரிவின் நடவடிக்கைகள் குறித்து அரசாங்கத்திற்கு திருப்தி கிடையாது என அமைச்சரவை இணைப் பேச்சாளர் டொக்டர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க, அமைச்சர்கள் அனைவரும் நிதிக் குற்றவியல் விசாரணைப் பிரிவின் நடவடிக்கைகள் குறித்து அதிருப்தி வெளியிட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
குறிப்பாக குற்றம் சுமத்தப்பட்ட நபர்களுக்கு எதிராக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் தொடர்பில் திருப்தி கொள்ள முடியாது என குறிப்பிட்டுள்ள அவர் நிதிக் குற்றவியல் விசாரணைப் பிரிவினர் தொடர்பில் அறிக்கை ஒன்று அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட உள்ளதெனவும் தெரிவித்துள்ளார்.
நிதிக் குற்றவியல் விசாரணைப் பிரிவின் பொறுப்பு தம்மிடம் ஒப்படைக்கப்பட்டால் ஆறு மாத காலத்தில் பாரிய குற்றச் செயல்கள் தொடர்பான தகவல்களை அம்பலப்படுத்த முடியும் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
நிதிக் குற்றவியல் விசாரணைப் பிரிவினை பராமரிப்பதற்காக அரசாங்கம் 1.2 மில்லியன் ரூபாவினை மாதாந்தம் செலவிடுவதாகத் தெரிவித்துள்ள ராஜித வசீம் தாஜூடீன் கொலை உள்ளிட்ட பல்வேறு முக்கிய சம்பவங்கள் மோசடிகள் தொடர்பில் உரிய விசாரணை நடத்தப்படவில்லை என குற்றம் சுமத்தியுள்ளார்.