குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
இலங்கை அரசாங்கம் புதிய பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் பயங்கரவாத நடவடிக்கைகளை எதிர்கொள்வதற்காக விசேட பிரிவொன்றை ஏற்படுத்தவுள்ளது. மேலும் அரசாங்கம் பல்வேறு விதமான நடவடிக்கைகளை பயங்கரவாத பட்டியலிற்குள் சேர்ப்பதற்கும் திட்டமிட்டுள்ளது. பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கி விட்டு புதிய பயங்கரவாத தடைச்சட்டத்தை அறிமுகப்படுத்துவதற்கான நடவடிக்கைகளில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளது. இதனடிப்படையில் அரசாங்கம் பயங்கரவாதம் என்பதற்கான பல புதிய வரைவிலக்கணங்களை அறிமுகப்படுத்த எண்ணியுள்ளது. அரசாங்கத்தினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள உத்தேச சட்டத்தின் நகல்வடிவில் இதனை காணமுடிகின்றது.
இலங்கையின் உத்தேச பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் குறித்த கொள்கை மற்றும் சட்ட கட்டமைப்பு எனும் ஆவணத்தை அமைச்சரவை, தேசியபாதுகாப்பு தொடர்பிலான குழுவின் பார்வைக்கு சமர்ப்பித்துள்ளது. இந்த குழுவில் பல கட்சிகளை சேர்ந்த 20 நாடாளுமன்ற உறுப்பினர்கள் அங்கம் வகிக்கின்றனர் அவர்கள் இது குறித்து ஆராய்ந்துவருகின்றனர்.
குறிப்பிட்ட நகல்வடிவில், இலங்கையினதோ அல்லது இறைமையுள்ள நாடொன்றினதோ இறைமை, பாதுகாப்பு, ஆள்புல ஓருமைப்பாடு ஐக்கியத்திற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்துவது, அதன் மீது தாக்குதலை மேற்கொள்வது அதனை மாற்றுவது அல்லது அதற்கு கடும் பாதிப்பை ஏற்படுத்துவது பயங்கரவாதம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையிலோ அல்லது வெளிநாடொன்றிலோ சட்டவிரோதமாக ஆட்சிமாற்றத்தை மேற்கொள்வதும் கொள்கைரீதியில் ஆதிக்கம் செலுத்துவதற்காக வன்முறையுடன் கூடிய தீவிரவாத செயலில் ஈடுபடுவதும் பயங்கரவாத செயலாக கருதப்படும் எனவும் அந்த ஆவணத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அரசாங்கத்தினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள நகல்வடிவில் பயங்கரவாதசெயல்கள் என்ற பட்டியலிற்குள் பலநடவடிக்கைகள் அடக்கப்பட்டுள்ளன. சுமார் நான்கு பக்கங்களை கொண்டதாக இந்த பட்டியல் காணப்படுகின்றது. இதுதவிர அதனுடன் தொடர்புபட்ட குற்றங்கள்,ஏனைய குற்றங்கள் ஆகியவற்றை குறிக்கும் நீண்டபட்டியலும் காணப்படுகின்றது.
பயங்கரவாத செயலிற்கு அல்லது அதனுடன் தொடர்புபட்ட அல்லது வேறுகுற்றங்களிற்கு வழங்குவதற்காக இரகசிய தகவல்களை சட்டவிரோதமான முறையில் அல்லது அனுமதிக்கப்படாத விதத்தில் பெறுவதும் பயங்கரவாத செயல் என குறிப்பிடப்பட்டுள்ளது.இதற்காக எழு வருட தண்டனை வழங்கப்படலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை அரசாங்கம் சமர்ப்பித்துள்ள ஆவணத்தில் சந்தேகநபர் ஓருவரிடம் பொலிஸார் தங்கள் முதல் வாக்கு மூலத்தை பெறுவதற்கு முன்னர் அவர் தனது சட்டத்தரணியை சந்திப்பதற்கு அனுமதிக்கப்படமாட்டார் எனவும்; தெரிவிக்கப்பட்டுள்ளது.முதல் வாக்குமூலம் பெறப்பட்ட பின்னர் அல்லது குறிப்பிட்ட நபர் கைதுசெய்யப்பட்டு 48 மணித்தியாலங்களிற்கு பின்னரே சட்டத்தரணியை சந்திக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இலங்கையின் பொலிஸ்மா அதிபர் புதிய பயங்கரவாத தடுப்பு பிரிவை ஏற்படுத்துவார்,அந்த பிரிவே பயங்கரவாதத்தை தடுப்பது மற்றும் அதற்கு எதிராக நடவடிக்கைகளை எடுப்பதற்கு பொறுப்பாக காணப்படும்,விசாரணைகளையும் அந்த அமைப்பே முன்னெடுக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது