நைலோன் உள்ளிட்ட பொருட்களால் தயாரிக்கப்படும் மாஞ்சா நூலுக்கு இந்தியா முழுவதும் தேசிய பசுமை தீர்ப்பாயம் தடை விதித்துள்ளது
காற்றாடிகளை பறக்கவிட கண்ணாடி துகள்களைக் கொண்ட மாஞ்சா நூல் அதிகம் பயன்படுத்துகிறது. இந்த மாஞ்சா நூல் கழுத்தில் சிக்கி பலரும் உயிரிழந்துள்ளனர்.
இந்தநிலையில் மாஞ்சா நூல் பயன்பாட்டுக்கு தடை கோரி தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் பீட்டா அமைப்பு சார்பில் கடந்த மார்ச் மாதம் மனு தாக்கல் செய்யப்பட்டது. கண்ணாடி, உலோகங்கள் மற்றும் பிற கூர்மையான துகள்கள் பூசப்பட்ட மாஞ்சா நூல்கள் மின்சாரத்தை எளிதில் கடத்தும் திறன் கொண்டவை.
எனவே, பட்டம் விடும்போது மாஞ்சா நூல் மின்கம்பியில் உரசினால், பட்டம் விடுபவர் மின்சாரம் தாக்கி உயிரிழப்பதுடன், அந்த வழியாக செல்வோரும் நூலைத் தொட்டால் உயிரிழக்க நேரிடுகிறது என்று பீட்டா தனது மனுவில் குறிப்பிட்டிருந்தது.
இதனை விசாரித்த தேசிய பசுமை தீர்ப்பாயம் நைலான் உள்ளிட்ட பொருட்களால் தயாரிக்கப்படும் மாஞ்சா நூலுக்கு இந்தியா முழுவதும் விதிக்கப்பட்டிருந்த இடைக்காலத் தடையை நிரந்தரத் தடையாக்கி இன்று உத்தரவிட்டுள்ளது.