குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
அரசியல் சாசனம் அமைப்பதில் ஐக்கிய தேசியக் கட்சிக்கும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும் இடையில் இணக்கப்பாடு அவசியமானது என எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் தங்களுக்கு இடையிலான அரசியல் பேதங்களை களைந்து, புதிய அரசியல் அமைப்பினை உருவாக்கும் முனைப்புக்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.
தேசிய இணக்கப்பாட்டின் அடிப்படையில் அரசியல் சாசனம் அமைக்கப்பட வேண்டியது அவசியமானது என தெரிவித்துள்ள அவர் வடக்கு கிழக்கு மக்களின் பிரச்சினைக்கு காத்திரமான தீர்வுத் திட்டமொன்று முன்வைக்கப்பட வேண்டுமென வலியுறுத்தியுள்ளார்.
அதேவேளை இலங்கை வந்துள்ள ஐக்கிய நாடுகளில் அரசியல் விவகாரங்களுக்கான செயலாளர் நாயகம் ஜெஃப்ரி ஃபெல்ட்மன், எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனை நாளை சந்திக்கவுள்ளார்.
இதன்போது, தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் மற்றும் புதிய அரசியல் யாப்பு உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து கலந்துரையாடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது