குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
தன் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிப் பிரயோகம் நீதித்துறை மீது விடுக்கப்பட்ட சவால் என யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி மா. இளஞ்செழியன் தெரிவித்துள்ளார்.
தான் பயணித்த வாகனத்தை நோக்கி துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டமை குறித்து ஊடகவியலாளர்களுக்கு கருத்துத் தெரிவித்த போதே அவர் இதனைத் கூறினார்.
அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில், யாழ் மேல் நீதிமன்றத்தில் காணப்படும் பாராதூரமான வழங்குகளை தான் நெறிப்படுத்தி வருவதினால் இந்த துப்பாக்கிச் சூட்டுப் பிரயோகம் தன் மீதே நிகழ்த்தப்பட்டது என தான் நம்புவதாகவும் தெரிவித்துள்ளார்.
தனது பாதுகாவலர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது என்று சொல்ல முடியாது எனவும் தன்னைக் குறிவைத்து நிகழ்த்தப்பட்டதாகவே தான் கருதுவதாகவும் தெரிவித்த அவர் துப்பாக்கி பிரயோகத்தில் காயமடைந்தவர்களை தனது வாகனத்தில் ஏற்றி தானே யாழ் வைத்தியசாலைக்குக் கொண்டு சென்றதாகவும் தெரிவித்துள்ளார்.
போகும் வழியில் யாழ் பொலிஸ் தலைமையகத்திற்கு தொடர்பு கொண்டு சம்பவத்தினைத் தெரியப்படுத்தியதுடன் சம்பவம் தொடர்பில் விசாரணை ஆரம்பிக்கும் படியும், குற்றவாளிகளை கைது செய்ய நடவடிக்கை எடுக்கும் படியும் உத்தரவு இட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
யாழில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் நீதிபதி இளம்செழியனை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்டதல்ல.
யாழ் நல்லூர் வீதியில் துப்பாக்கி சூட்டுப் பிரயோகம் ஒன்று இடம்பெற்றுள்ளது. வீதியில் நின்றுகொண்டிருந்த இளைஞர் ஒருவர் மீது இனம்தெரியாத நபர் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த சமயத்தில் யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் தனது குடும்பத்துடன் அவ்வழியே பயணித்துக்கொண்டு இருந்ததாகவும், சம்பவம் இடம்பெற்ற போது நீதிபதியின் பாதுகாவலர் வாகனத்தை விட்டு இறங்கி துப்பாக்கிதாரியை துரத்திச் சென்று துப்பாக்கியை பறிக்க முற்பட்ட வேளை அவரை நோக்கி மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் பாதுகாவலர் காயம் அடைந்ததாகவும் எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை பாதுகாவலரிடம் இருந்து தப்பித்துக்கொண்ட துப்பாக்கிதாரியின் கைத்துப்பாக்கி வீதியில் வீழ்ந்த அதே நேரம், வீதியால் வந்த ஒரு தம்பதியினரின் ஸ்கூட்டி என்ற ஈருளியை பறித்து அதில் துப்பாக்கிதாரி தப்பிச் சொன்றுள்ளார். இந்த நிலையில் தற்போது பொலிசார் அவ்விடம் சென்று மேலதிக விசாரணைகளை தொடர்ந்துள்ளனர்.
இதே வேளை இந்த துப்பாக்கிப் பிரயோகமானது இளஞ்செழியனை நோக்கி மேற்கொள்ளப்படவில்லை எனவும் வேறு ஒரு இளைஞரை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகமே எனவும் தற்போது வெளியாகியுள்ள செய்திகள் தெரிவிக்கின்றன.