இந்தியா முழுவதிலும் வீதி விபத்துகளில் ஆண்டுதோறும் 1.5 லட்சம் பேர் இறக்கிறார்கள் என இந்திய மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் கேள்வி நேரத்தின் போது கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்படி கருத்தினை தெரிவித்துள்ளார்.
கடந்த 3 ஆண்டுகளில் வீதி விபத்துகளின் எண்ணிக்கை 4 சதவீதம் அதிகரித்துள்ளது என சுட்டிக்காட்டிய அவர் நாடு முழுவதிலும் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 5 லட்சம் வீதி விபத்துகள் தொடர்பான வழக்குகள் பதிவு செய்யப்படுகின்றன எனவும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் நாடு முழுவதும் புழக்கத்தில் உள்ள சாரதி அனுமதிப் பத்திரங்களில் 30 சதவீதமானவை போலியானது என கண்டறியப்பட்டுள்ளதாகவும் விபத்துகளில் இறப்பவர்களின் எண்ணிக்கையை குறைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளில் அரசு ஈடுபட்டு வருகிறது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் நாடு முழுவதும் பயன்பாட்டில் இருக்கும் பாலங்களை ஆய்வு செய்ததில், 147 பாலங்கள் மோசமான நிலையில் இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாகவும் பாலங்களை முறையாக பராமரிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.