பட்டாசு தயாரிப்பில் பயன்படுத்தப்படும் தீங்கு விளைவிக்கக்கூடிய உலோகங்களான காரீயம், பாதரசம் உள்பட 5 உலோகங்களை பயன்படுத்த உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது. பண்டிகைகளின்போது, பட்டாசுகள் வெடிக்கப்படுவதால், காற்று மாசு ஏற்படுவதாகவும், எனவே, பட்டாசுகளுக்கு தடை விதிக்க வேண்டும் எனவும் உச்ச நீதிமன்றில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இம்மனுவை ஏற்று டெல்லியில் பட்டாசு விற்பனைக்கும், பட்டாசுகளை இருப்பில் வைப்பதற்கும் உச்சநீதிமன்றம் தடை விதித்தது. மேலும், மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் தாக்கல் செய்த பதில் மனுவில்,’பெரும்பாலான பட்டாசுகளில் அதிக அளவில் கந்தகம் சேர்க்கப்படுவதால்தான் காற்று மாசு பெரிய அளவில் ஏற்படுகிறது. அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமாக ரசாயன கலவை சேர்க்கப்படுவதால், பெரும் தீங்கு ஏற்படுகிறது என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் பட்டாசு தயாரிப்பில் பயன்படுத்தப்படும் தீங்கு விளைவிக்கக்கூடிய உலோகங்களான காரீயம், பாதரசம், கல்லியம், ஆர்சனிக், ஆன்டிமோனி ஆகியவற்றால், மிகப்பெரிய அளவில் காற்று மாசு ஏற்படுகிறது. ஆகவே, பட்டாசு தயாரிப்பில் மேற்கண்ட 5 உலோகங்களையும் பயன்படுத்த தடை விதிக்கப்படுகிறது என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.