136
குளோபல் தமிழ்ச் செய்தியாளர் யாழ்ப்பாணம்
யாழ்.ஊடக அமையத்தின் ஏற்பாட்டில் இன்று புதன்கிழமை காலை 10 மணியளவில் யாழ்.நீதிமன்ற கட்டட தொகுதிக்கு அருகில் உள்ள படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களின் நினைவாக கட்டப்பட்ட நினைவு தூபிக்கு மலர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட உள்ளது.
போர் சூழலில் யாழில் இருந்து , துணிவாக ஊடகப்பணி யாற்றியவர் மயில்வாகனம் நிமலராஜன் அவர்கள். இவர் பி.பி.சி.யின் தமிழ் மற்றும் சிங்கள சேவை , வீரகேசரி , ராவய போன்றவற்றில் பணியாற்றி இருந்தார். அந்நிலையில் கடந்த 2000ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 19ம் திகதி யாழ்.மாவட்டத்தில் ஊரடங்கு சட்டம் அமுலில் இருந்த வேளை இவரது வீட்டுக்குள் புகுந்த ஆயுத தாரிகள் அவர் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டனர். அதன் போது அவர் எழுதிக்கொண்டு இருந்த கட்டுரை மீது வீழ்ந்தே உயிர் துறந்தார்.
கொலையாளிகள் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டு நிமலராஜனை படுகொலை செய்த பின்னர் , வீட்டின் மீது கைக் குண்டு தாக்குதலையும் மேற்கொண்டனர். அதன் போது வீட்டில் இருந்த நிலமராஜனின் தந்தை சங்கரப்பிள்ளை மயில்வாகனம் , தாய் லில்லி மயில்வாகனம் மற்றும் மருமகன் ஜெகதாஸ் பிரசன்னா ஆகியோர் படுகாயமடைந்து இருந்தனர். குறித்த படுகொலை சம்பவம் நடைபெற்று 16 வருடங்கள் கடந்த நிலையிலும் இதுவரை விசாரணைகள் எதுவும் உரிய முறையில் முன்னெடுக்கப்படவில்லை.
புதிய அரசாங்கம் ஆட்சி அமைத்த பின்னர் கூட கொல்லப்பட்ட தமிழ் ஊடகவியலாளர்கள் மற்றும் ஊடக பணியாளர்கள் தொடர்பில் எவ்விதமான விசாரணைகளும் உரிய முறையில் முன்னெடுக்கப்படவில்லை. அந்நிலையில் படுகொலைசெய்யப்பட்ட மற்றும் காணாமல் போயுள்ள ஊடகவியலாளர்கள், ஊடகப்பணியாளர்களுக்கு, சர்வதேச ஊடக அமைப்புக்கள் முன்னிலையில் காலதாமதமின்றிய விசாரணை வேண்டும். ஊடகவியலாளர்கள் தமது பணிகளை சுதந்திரமாக ஆற்றுவதற்கான சுதந்திரத்தை அனைத்து மட்டங்களிலும் உறுதிப்படுத்தல், வேண்டும். தகவல் அறியும் உரிமை சட்டத்தை உடனடியாக அமுல்ப்படுத்தல் வேண்டும். ஆகிய கோரிக்கைகளை முன் வைத்து யாழில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றும் முன்னெடுக்கப்படவுள்ளது.யாழ்.மத்திய பேருந்து நிலையம் முன்பாக புதன் கிழமை காலை 10.30 மணிக்கு குறித்த போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
Spread the love