குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
யாழ்.வடமராட்சி துன்னாலை பகுதியில் பொலிஸ் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு தேடுதல் சம்பவம் தொடர்பில் செய்தி சேகரிப்புக்கு சென்றிருந்த ஊடகவியலாளர்களை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் கையடக்க தொலைபேசிகளில் காணொளி (வீடியோ) பதிவு செய்தனர்.
துன்னாலை பகுதியில் போலீசார் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் இணைந்து இன்று சனிக்கிழமை அதிகாலை முதல் துன்னாலை பகுதியினை சுற்றி வளைத்து தேடுதல் நடவடிக்கையினை மேற்கொண்டனர்.
குறித்த நடவடிக்கைக்காக பொலிஸ் மற்றும் பொலிஸ் அதிரடிப்படையை சேர்ந்த 400 பேர் பயன்படுத்தப்பட்டுள்ளனர். குறித்த தேடுதல் நடவடிக்கையில் , மூன்று இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர். அத்துடன் உரிய ஆவணங்கள் இல்லாத ஹன்ரர் ரக வாகனம் ஒன்றும் 10 மோட்டார் சைக்கிளும் பொலிசாரால் பறிமுதல் செய்யப்பட்டது.
குறித்த சம்பவம் தொடர்பில் துன்னாலை பகுதிக்கு செய்தி சேகரிப்பு பணிக்காக சென்றிருந்த ஊடகவியலாளர்களை பொலிஸ் விசேட அதிரடிப்படையை சேர்ந்த சார்ஜென்ட் தர உத்தியோகஸ்தர் ஒருவர் காணொளி(வீடியோ) பதிவுகளை தன்னுடைய கையடக்க தொலைபேசியில் ரகசியமான முறையில் ஒளிப்பதிவு செய்தார்.
குறித்த அதிரடிப்படை உத்தியோகஸ்தர் ரகசியமான முறையில் தன்னுடைய கையடக்க தொலைபேசியில் காணொளி பதிவினை மேற்கொண்டது தம்மை அச்சுறுத்தும் செயல் என ஊடகவியலாளர்கள் கருதினார்கள்.