இந்த ஆண்டு ரக்ஷாபந்தன் கடந்த திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது. பொதுவாக இந்த பண்டிகை அன்று உடன்பிறந்த, உடன்பிறவா சகோதர- சகோதரிகள் பரஸ்பரம் பணத்தையோ அல்லது பரிசையோ தங்களது வசதிக்கேற்ப கொடுத்து மகிழ்வர். ஆனால் உத்தரப்பிரதேச மாநிலத்தில் சிறுநீரக கோளாறால் அவதிப்பட்டு வந்த தனது சகோதரருக்கு தனது சிறுநீரத்தையே தானமாக ஒரு சகோதரி கொடுத்துள்ளார்.
ஆக்ரா
ஆக்ரா மாவட்டத்தைச் சேர்ந்த 38 வயதுடைய விவேக் சாராபாய் இரண்டு சிறுநீரகங்களும் செயலிழந்து விட்டதால் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டியிருந்தது. பல்வேறு மருத்துவமனைகளை அணுகிய போதும் மாற்று சிறுநீரகம் கிடைக்கவில்லை. இதனால் அவருடைய நிலை நாளுக்கு நாள் மிகவும் மோசமாகத் தொடங்கியது.
ரக்ஷாபந்தன் அன்று…
இந்நிலையில், விவேக்கின் சகோதரி தனது ஒரு சிறுநீரகத்தை விவேக்கிற்கு வழங்கி அவரின் உயிரை காப்பாற்றியுள்ளார். விவேக்கிற்கு டெல்லியில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்தது. அதுவும் ரக்ஷாபந்தன் பண்டிகைக்கு முன்பு அவர் வழங்கியதால் இச்சம்பவம் மேலும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சகோதரனை நேசிக்கிறேன்
இது குறித்து விவேக்கின் 48 வயதான சகோதரி வந்தனா சந்திரா கூறுகையில், நான் என் சகோதரனை மிகவும் நேசிக்கிறேன். அவர் என்னுடைய கடின நாட்களில் உறுதுணையாக இருந்தார். அவர் எனக்காக செய்த உதவிகளுக்கு மாறாக அவர் உயிரை காப்பாற்றுவது என் கடமை. மேலும் இந்த ஆண்டு ரக்ஷாபந்தன் எங்களுக்கு மிகவும் முக்கியமானது. எனது சகோதரன் மறு வாழ்வு பெற்றுள்ளான். அதனால் நாங்கள் மிகவும் சந்தோஷமாக ரக்ஷாபந்தனை கொண்டாடினோம் என கூறினார். மேலும் உடல்தானத்தின் அவசியத்தையும் வந்தனா கூறினார்.