இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் மொகமட் கேசாப் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியனைச் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார். கொழும்பில் நடைபெற்ற இந்தச் சந்திப்பு மிகவும் உணர்வுபூர்மாக அமைந்திருந்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது.
யாழ்ப்பாணம் நல்லூரடியில் தனது உத்தியோகபூர்வ காரில் பயணம் செய்து கொண்டிருந்த போது நீதிபதி இளஞ்செழியன் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத் தாக்குதலுக்குப் பின்னர் இந்தச் சந்திப்பு நடைபெற்றுள்ளது.
இந்தச் சந்திப்பின்போது, நீதிபதி இளஞ்செழியனைக் கண்டதும், அமெரிக்க தூதுவர் ஓடோடிச் சென்று கைலாகு கொடுத்து, அவரைத் தழுவிக் கட்டியணைத்து புகைப்படமும் எடுத்துக் கொண்டார்.
நல்லூரடியில் நடைபெற்ற துன்பியல் நிகழ்விலும் அதன் பின்னரும் நீதிபதி இளஞ்செழியன் நடந்து கொண்ட அனைத்து விடயங்களையும் தான் அவதானித்து மனம் நெகிழ்ந்து போனதாக அமெரிக்க தூதுவர் அவரிடம் உணர்வுபூர்வமாகத் தெரிவித்தார்.
அந்தச் சம்பவம் குறித்தும், அதன் பின்னர் இடம்பெற்ற நிகழ்வுகள் தொடர்பிலும் அமெரிக்க தூதுவர் நீதிபதி இளஞ்செழியனிடம் விரிவாகக் கேட்டறிந்து கொண்டார்.
இந்தச் சந்திப்பின்போது, சுமார் ஒரு மணித்தியாலம் நீதிபதி இளஞ்செழியனுடன் உணர்வுபூர்வமாக அளவளாவிய அமெரிக்க தூதுவர் சந்திப்பின் முடிவில் என்னவிதமான உதவிகள் தேவைப்பட்டாலும், உடனடியாகத் தன்னுடன் தொடர்பு கொள்ளுமாறும் அமெரிக்க தூதுவர் நீதிபதி இளஞ்செழியனிடம் தெரிவித்துள்ளார்.
நீதிபதி இளஞ்செழியன் மீதான துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தைத் தொடர்ந்து இடம்பெற்ற நீதிபதியின் செயற்பாட்டைப் புகழ்ந்து அமெரிக்க தூதுவர் தனது டுவிட்டரில் குறிப்பிட்டிருந்தார்.
அத்துடன், அந்தத் துப்பாக்கிப் பிரயோகச் சம்பவம் தொடர்பில் உடன் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம் கோரியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.