குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
கிளிநொச்சி மாவட்டத்தின் கடற்கரை இறங்குதுறைகள் புனரமைக்கப்படாததன் காரணமாக கடற்றொழிலில் ஈடுபடுபவர்கள் தமது படகுகளை கரைக்குக் கொண்டு வருவதில் தொடர்ச்சியாக நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளனர்.
பூநகரிப் பிரதேச செயலாளர் பிரிவில் இந்நெருக்கடி தொடர்வதன் காரணமாக கடற்றொழிலாளர்கள் தொழில் மேற்கொள்வதில் இடர்களை எதிர்கொண்டுள்ளனர்.
இது தொடர்பாக பூநகரிப் பிரதேச செயலகம், கிளிநொச்சி மாவட்டச் செயலகம் என்பவற்றில் நடைபெற்ற கூட்டங்களில் கண்டாவளை, பூநகரி ஆகிய பகுதிகளில் காணப்படுகின்ற இறங்குதுறைகளை புனரமைத்துத் தருமாறும் நீண்டகாலமாக கோரிக்கை விடுத்தும் இறங்குதுறைகள் புனரமைக்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் இதன் காரணமாக இறங்குதுறைப் பகுதிகளில் சேறு நிரம்பிக் காணப்படுவதாகவும் இதன் காரணமாக மீன்பிடி படகுகளை கரைக்குக் கொண்டு வருவதில் நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளதாகவும் கடற்றொழிலாளா்கள் தெரிவித்துள்ளனா்.
உதாரணமாக முழங்காவில் இரணைமாதாநகர், பள்ளிக்குடா, நாச்சிக்குடா, வலைப்பாடு, உள்ளிட்ட பிரதேசங்களில் தொழிலில் ஈடுபடுகின்ற மக்கள் படகுகளை கடலில் இறங்கி நீண்ட தூரத்திற்குத் தள்ளியே கடலில் மீன்பிடியில் ஈடுபட வேண்டியுள்ளதாகவும் இந்நிலையில் இறங்குதுறைகளைப் புனரமைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.