176
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை நோக்கி வடமாகாண எதிர்க்கட்சி தலைவர் சி.தவராசா மற்றும் ஆளும் கட்சி உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் ஆகியோர் தொடுத்த கேள்விகளுக்கு முதலமைச்சர் பதிலளித்துள்ளார்.
வடமாகாண சபை கடந்த மூன்றரை வருடங்களில் முன்னெடுத்த செயற்திட்டங்கள் தொடர்பில் , மீளாய்வு செய்வதற்கான விசேட அமர்வு இன்றைய தினம் கைதடியில் உள்ள பேரவைக் கட்டடத்தில் நடைபெற்றது.
அதன் போது கடந்த அமர்வில் முதலமைச்சரை நோக்கி எழுப்பட்ட கேள்விகளுக்கு இன்றைய தினம் முதலமைச்சர் பதிலளித்தார்.
வினா 01.
முதலில் பளைப் பிரதேச காற்றாலைத்திட்டம் பற்றி ஆராய்வோம். “ஜூல் பவர் மற்றும் பீற்றா பவர்” நிறுவனங்களினால் வழங்கப்பட்ட Corporate Social Responsibility எனும் சமூகக் கூட்டிணைப்புப் பொறுப்பு முதல் நிதியானது மாகாண நிதியில் சேர்க்கப்படவில்லை என்பது குற்றச்சாட்டு.
அதற்கான பதில் பின்வருமாறு –
வடக்கு மாகாண பிரதம செயலாளருக்கும் யூலி பவர், பீற்றா பவர் நிறுவன முகாமைத்துவப் பணிப்பாளருக்கும் இடையில் 07.11.2014 ஆம் திகதி குறித்த நிறுவனத்திடம் இருந்து சமூக கூட்டிணைப்பு பொறுப்பு நன்கொடை என்னும் அடிப்படையில் நன்கொடை பெறுவதற்காக ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
மேற்படி ஒப்பந்தத்தில் குறித்த நிறுவனத்தினால் வடக்கு மாகாண சபைக்கு 2014 ஆம் ஆண்டு தொடக்கம் 2023 ஆம் ஆண்டு வரை வருடாந்தம் ரூபா 20 மில்லியனும் 2024ஆம் ஆண்டு தொடக்கம் 2032ஆம் ஆண்டுவரை வருடாந்தம் ரூபா 23 மில்லியனும் நன்கொடையாக வழங்கப்பட வேண்டும் எனவும், வடக்குமாகாண விவசாய அமைச்சினூடாக முன்மொழியப்படும் சுற்றாடல் சார்ந்த செயற்றிட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு அவை பயன்படுத்தப்பட வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேற்படி ஒப்பந்தத்தின் பந்தி 3 இன் பிரிவு 3.2இற்கு அமைவாக 2014 ஆம் ஆண்டிற்கான செலவின ஒதுக்கீடான ரூபா 20 மில்லியன் நிதியில் ரூபா 19.5 மில்லியன் பெறுமதிக்கு 06 தண்ணீர் பவுசர்கள் யூலி பவர், பீற்றா பவர் நிறுவனங்களினால் கொள்வனவு செய்து வழங்கப்பட்டிருந்தன.
அவற்றின் பயன்பாட்டு விபரம் வருமாறு
நான்கு கொள்கலன்கள் விவசாய அமைச்சினால் குடிநீர் விநியோகத்திற்காக பயன் படுத்தப்படுகின்றன.
ஒரு கொள்கலன் மல்லாகம் வலிவடக்கு பிரதேச சபையால் பயன்படுத்தப்படுகின்றது.
ஒரு கொள்கலன் சுன்னாகம் வலி தெற்கு பிரதேச சபையால் பயன்படுத்தப்படுகின்றது.
மிகுதி ரூபா 500,000 /- அவற்றின் மூலதனத் தன்மையான திருத்தச் செலவுகளின் பொருட்டு விவசாய அமைச்சின் வங்கிக் கணக்கிற்கு வைப்பு செய்யப்பட்டிருந்தது. அப்பணம் தற்போதும் அமைச்சின் வைப்புக் கணக்கில் காணப்படுகின்றது. அவர்களால் கொள்வனவு செய்து வழங்கப்பட்ட வாகனங்கள் 2014ஆம் ஆண்டு பிரதம செயலாளரின் பெயரில் பதிவு செய்யப்பட்டு விவசாய அமைச்சின் நிலையான சொத்துப் பதிவேட்டிலும் பதியப்பட்டுள்ளன. இவ் வாகனங்கள் தற்போதும் குடி தண்ணீர் வழங்கல் செயற்பாட்டிற்கு பயன்படுத்தப்படுகின்றன.
2015ஆம் ஆண்டிற்கான ரூபா 20 மில்லியனும், 2016ஆம் ஆண்டிற்குரிய நிதியிலிருந்து ரூபா 10 மில்லியனும் மொத்தமாக ரூபா 30 மில்லியனுக்கு 2016ஆம் ஆண்டு மாகாண வரவு செலவுத் திட்டத்தின் மூலம் ஒதுக்கீடு செய்யப்பட்டு அமைச்சர் வாரியத்தின் அனுமதிக்கமைய ரூபா 29.8 மில்லியனுக்கு வேலைத்திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
2016ஆம் ஆண்டின் மிகுதி ரூபா 10 மில்லியனும் 2017ஆம் ஆண்டுக்கான பங்களிப்பு ரூபா 20 மில்லியனும் சேர்த்து மொத்தமாக ரூபா 30 மில்லியனுக்கு குறைநிரப்பு மதிப்பீடு மூலம் விவசாய அமைச்சிற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
ஆகவே முதல் நிதியில் 6 தண்ணீர்த்தாங்கிகள் வாங்கப்பட்டன என்பதே உண்மை. நேரடியாகக் குறித்த வாகனங்களைக் குறித்த கம்பனிகள் வாங்கித் தந்ததால் முதல் நிதியை மாகாண நிதிக்கு மாற்றவேண்டிய அவசியம் இருக்கவில்லை. மிகுதி ரூபா 500000 /- பற்றியும் பதில் தரப்பட்டுள்ளது.
வினா 02.
அடுத்து எழுப்பப்பட்ட விடயம் சமாதானத்தைக் கட்டியெழுப்பும் நிதி பற்றியது. அதற்கான பதில் பின்வருமாறு –
சமாதானத்தை கட்டியெழுப்பும் நிதி
ஐக்கிய நாடுகள் பொதுச் சபை மற்றும் பாதுகாப்பு சபையின் கோரிக்கையினைத் தொடர்ந்து, 2006இல் ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகத்தினால் சமாதானத்தைக் கட்டியெழுப்பும் நிதிக்கான திட்டம் ஆரம்பிக்கப்பட்டது.
அதன் நோக்கம் –
To build long term sustainable peace and prevent a relapse into violent conflict ஆக இருந்தது. அதாவது
நிலைபேண்தகு சமாதானத்தை கட்டியெழுப்புவதற்கும் மீண்டுமொருமுறை வன்முறை முரண்பாடுகள் ஏற்படாமல் தவிர்ப்பதற்கும் சீக்கிரமானதும் நெகிழ்ச்சித்தன்மையுடையதுமான சமாதானத்தை கட்டியெழுப்பும் நிதி 20 நாடுகளுக்கு வழங்கப்பட்டது.
இந்த நிதி வசதிகளை இலங்கை அடைவதற்கான பிரகடனம் நவம்பர் 2015 இல் செய்யப்பட்டது. இலங்கையில் வடக்கு, கிழக்கு, வடமத்திய, மத்திய, ஊவா மற்றும் தென் மாகாணங்களில் இது நடைமுறைப்படுத்தப்படுகின்றது.
அதன் கட்டமைப்பு பற்றிப் பார்ப்போம் – குழு அங்கத்தவர்கள் :
சமாதானத்தை கட்;;;;டியெழுப்பும் நிதிக்கான சபையானது வெளிநாட்டு அலுவல்கள்; அமைச்சின் கௌரவ அமைச்சர் அவர்களையும் ஐக்கிய நாடுகள் வதிவிட இணைப்பாளர்; அவர்களையும் இணைத்தலைவர்களாகக் கொண்டு இயங்குகின்றது.
இக் கட்டமைப்பின் அங்கத்தவர்களாக பின்வருவோர் உள்ளனர்.
சட்டமா அதிபர் நாயகம்.
அதிமேதகு ஜனாதிபதியின் பிரதிநிதி தற்பொழுது கௌரவ ஒஸ்டின் பெர்னாண்டோ அவர்கள்
செயலாளர், தேசிய ஒருங்கிணைப்பு நல்லிணக்க அமைச்சு
செயலாளர், சட்டமும் ஒழுங்கும் அமைச்சு
செயலாளர், நீதித்துறை அமைச்சு
செயலாளர், தேசிய கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சு
செயலாளர், புனர்வாழ்வு புனரமைப்பு அமைச்சு
செயலாளர், பெண்கள் விவகார அமைச்சு
பணிப்பளார் நாயகம், தேசிய ஒருமைப்பாட்டிற்கும் நல்லிணக்கத்திற்குமான அலுவலகம்
பிரதம செயலாளர், வடமாகாண சபை
பிரதம செயலாளர், கிழக்கு மாகாண சபை
ஐக்கிய நாடுகள் வதிவிட முகவர் (ழுர்ஊர்சு)
ஐரோப்பிய ஒன்றிய தூதுவர் – வழங்குநர் பிரதிநிதி
தேசிய சிவில் சமூகப் பிரதிநிதிகள் (3)
Ms. Navaranjini Nadarajah (Sureka) Mr. Brito Fernando Mr.Mirak Raheem
16. சர்வதேச சிவில் சமூக பிரதிநிதி
Mr. Laurent Sailard, Medicins du Mond.
இங்கு நோக்கப் பாலதொன்றுண்டு. சமாதானம் கட்டி எழுப்ப வேண்டியுள்ளது வடக்கு கிழக்கு மாகாணங்களில். எமது சார்பில் குழுவில் அடங்குவோர் எமது இரு மாகாண சபைகளின் பிரதம செயலாளர்கள் மட்டுமே. இம் மாகாணங்களின் மக்கட் பிரதிநிதிகள் எவரும் இல்லை. மாகாண சிவில் சமூகப் பிரதிநிதிகள் இல்லை. அடுத்து
சமாதான ஏற்பாட்டு முன்னுரிமைத் திட்டத்தை ஆராய்வோம்.
பின்வரும் நான்கு பிரதான திட்டங்களைக் கொண்டுள்ளது.
பொறுப்புக்கூறல்நிலைமாறு நீதி
நல்லிணக்கம்
நல்லாட்சி
மீள்குடியேற்றமும் நிலையான தீர்வுகளும்
பொறுப்புக்கூறல் நிலைமாறு நீதி என்ற கட்டமைப்பின் கீழ் பின்வரும் செயற்பாடுகள் மேற்கொள்ளப்படுகின்றன.
நிலைமாறு நீதி தந்திரோபாயத்திற்கு ஆலோசனைக்கும் அபிவிருத்திக்குமான தொழில்நுட்ப உதவி
இயலுமைக்கு உதவுதலும் செயற்படுத்தலுக்குமான நான்கு பொறிமுறைகள்
உண்மை ஆணைக்குழு
காணாமல் போனோர் அலுவலகம்
பாதிக்கப்பட்டோர், சாட்சிகளின் பாதுகாப்பு, பாதிக்கப்பட்டோருக்கான உதவி வழங்கும்
நிகழ்ச்சிகள், நட்டஈடு வழங்கும் அலுவலகம்
பொறுப்புக்கூறும் பொறிமுறைகள்
இங்கு கவனிக்கப்பட வேண்டியது வடகிழக்கு மாகாணங்களில் பொறுப்புக் கூற வேண்டியவர்கள் இராணுவத்தினர். எமது மக்களைக் கொன்றொழித்தவர்கள் அவர்கள். அவர்களின் தொகையை குறைப்பது பற்றியோ சிவில் சமூகத்துடன் அவர்களைச் சேர்க்க வேண்டிய நடைமுறைகள் பற்றியோ எதுவுமே கூறப்படவில்லை. போர்க்குற்ற விசாரணை பற்றி எதுவும் கூறப்படவில்லை. எவ்வாறு அது நடைமுறைப்படுத்தப்படப்போகின்றது என்பது பற்றி எதுவும் கூறப்படவில்லை. அரசாங்கத்திற்கு ஏற்றவாறே செயற்பாடுகள், பொறிமுறைகள் தயாரிக்கப்பட்டுள்ளன. அடுத்து
நல்லிணக்கம் என்ற கட்டமைப்பின்; கீழ் கீழ்வரும் நான்கு செயற்பாடுகள் பின்வருமாறு.
பகுப்பாய்வும் கொள்கை உதவியும்
சமூக பொருளாதார உதவி
தேசிய கலந்துரையாடல்
நிறுவனங்களை வலுவூட்டல்
இங்கும் ஒன்றைச் சுட்டிக் காட்ட விரும்புகின்றேன். நல்லிணக்கம் எவ்வாறு ஏற்படக்கூடும்? முரண்பாடுகளுக்கு வித்திட்ட காரணங்களை அறிந்து அவற்றிற்குப் பரிகாரம் தேடுவதில்த்தான் நல்லிணக்கம் ஏற்படலாம். ஆனால் அவ்வாறான ஆய்வில் மேற்படி கட்டமைப்பு இறங்கவில்லை.
நல்லாட்சி என்ற கட்டமைப்பின்; கீழ்வரும் செயற்பாடுகள்
மேற்கொள்ளப்படுகின்றன.
• மாகாண நிர்வாகங்களுக்கான பகிர்வுக்கு ஆதரவு வழங்கல்
• சுதந்திர ஆணைக்குழுக்களை வலுவூட்டல்
• சமாதானத்தை கட்டியெழுப்புவதில் பெண்களினதும் இளைஞர்களினதும் கூடிய பங்களிப்பை மேம்படுத்தல்
• அரசியலமைப்பும் சட்டவாக்க மறுசீரமைப்பிற்கான தொழில்நுட்ப உதவி
• பாராளுமன்ற மேற்பார்வை செய்யும் குழுக்கள்
• பொதுச்சேவை மறுசீரமைப்பு நடவடிக்கைகள்
• பாதுகாப்பு பிரிவு, மறுசீரமைப்பு ஆரம்ப நடவடிக்கைகளுக்கு உதவி வழங்கல்
• சட்டவாட்சியையும், நீதி வழங்கலையும் மேம்படுத்தல்
• பொதுமக்கள் சமூகத்தினை வலுவூட்டுவதற்கான ஆதரவு
இங்கும் ஒரு முக்கிய விடயம் கவனத்திற்கு எடுக்கப்படவில்லை. பெருவாரியான பேரின இராணுவ இருப்பை உறுதி செய்து கொண்டு நல்லாட்சியை எவ்வாறு உறுதிப்படுத்தப் போகின்றோம் என்பது கவனத்திற்கு எடுக்கப்படவில்லை. தொடர் இராணுவ இருப்போடு ஏற்படும் ஆட்சி நல்லாட்சியா வல்லாட்சியா என்ற கேள்வி எழுகின்றது.
மீள்குடியேற்றமும் நிலையான தீர்வுகளும் என்ற கட்டமைப்பின்; நான்கு
செயற்பாடுகள் மேற்கொள்ளப்படுகின்றன.
• பகுப்பாய்வும் கொள்கை உதவியும்
• காணியும் வீடும்
• சமூக பொருளாதார நிலையினை உயர்த்துதல்
• பாதுகாப்பு
இங்கு பாதுகாப்பு என்பது மக்கள் பாதுகாப்பா நாட்டின் பாதுகாப்பா என்பது விபரிக்கப்படவில்லை.
இதுவரை கூறியவை நோக்கம் பற்றியும் கட்டமைப்புப் பற்றியும் அதன் முன்னுரிமைத் திட்டங்கள் பற்றியுமாவன. அடுத்து
07.04.2017ந் திகதி நடாத்தப்பட்ட மாதாந்த சபைக் கூட்டத்தில் அங்கீகரிக்கப்பட்ட திட்டங்கள் பற்றிப் பார்ப்போம்.
திட்டம் 1
Support to strengthen the capacity to undertake reforms to advance peace building and transitional justice process in Sri Lanka
இலங்கையில் சமாதானத்தை கட்டியெழுப்புதல், நிலைமாறுகால நீதி நடைமுறைகளை மறுசீரமைத்தலையும் முன்னேற்றுதலையும் நடைமுறைப்படுத்துவதற்கு வேண்டிய வாண்மைவிருத்தி செய்வதற்கு உதவி அளித்தல்
திட்டம் 2
Promoting Reconciliation in Sri Lanka (dialogue mechanism, peace education and psycho social support)
இலங்கையில் நல்லிணக்கத்தை மேம்படுத்தல் (கலந்துரையாடல் பொறிமுறைகள், சமாதானக் கல்வி, மற்றும் உளவியல் சமூக ரீதியான உதவிகள்)
திட்டம் 3
Participation of Youth & Women in the peace building process
சமாதானத்தை கட்டியெழுப்புதல் நடவடிக்கைகளில் இளைஞர்களையும் பெண்களையும் பங்குபற்ற வைத்;தல் .
இவை தான் இது வரையில் நடந்துள்ளன.
எந்தவிதமான நிதி உதவியும் எமக்குக் கிடைக்காமற் போய்விடவில்லை. என் சார்பில் ஆலோசகர் ஒருவரை பெயர் குறித்து உத்தியோகபூர்வமாக நியமிக்கும்படி எப்பொழுதேனும் கோரப்படவில்லை.
ஆனால் என்சார்பில் தகுந்த அறிவு பெற்ற ஆலோசகர் ஒருவர் கடமையாற்றியது உண்மை. அப்பொழுது மேற்படி திட்டங்களில் படிப்படியான இராணுவக்குறைப்பு, போராளிகளின் நலன் கருதிய திட்டங்கள், போரினால் பாதிக்கப்பட்ட விதவைகளினதும் குழந்தைகளினதும் நலன் கருதிய திட்டங்கள், உள்நாட்டில் இடம் பெயர்ந்தோரின் நலன் கருதிய திட்டங்கள் போன்ற பலதையும் உள்ளடக்காது தான்தோன்றித்தனமாக மேற்படி திட்டம் அரசாங்கத்தின் அனுசரணையை மாத்திரமே பெற்று அரசாங்கத்திற்குச் சார்பாக வகுக்கப்பட்டமை எம்மால் கண்டிக்கப்பட்டது. அதனால் திட்டத்திற்கான பணமேதும் நிறுத்தப்படவில்லை. அரசாங்கம் கருதிய திட்டமும் கைவிடப்படவில்லை. இது தான் உண்மை. எனது நண்பருக்கு மற்றுமொரு இரகசியத்தை இங்கு கூறி வைக்கின்றேன்.
சென்ற திங்கட் கிழமை தான் எமது ஐக்கிய நாடுகளுக்கான வதிவிடப் பிரதிநிதியுடன் சேர்ந்து ஐக்கிய நாடுகள் தொடர்பான அங்கங்கள் பலவற்றின் பிரதிநிதிகளுஞ் சேர்ந்து வந்திருந்து சுமூகமாக எங்களுடன் கலந்துறவாடி சென்றார்கள். நண்பர் கூறும் விரிசல் எதுவும் எம்மிடையே இல்லை. அவ்வாறான விரிசல் ஏற்படவும் விடமாட்டோம்.
வினா 03
முன்னைய ஆளுநர் G. A. சந்திரசிறி மற்றும் முன்னைய பிரதம செயலாளர் ஆர். விஜயலட்சுமி என்பவர்களை மாற்றிய பின் சாதித்தது என்ன என்பதே கேள்வி.
பதில் பின்வருமாறு
முன்னைய ஆளுநர் திரு.G. A..சந்திரசிறி அவர்களின் மாற்றமானது அவருடைய இராணுவப் போக்குடைய எதேட்சை அதிகாரத் தன்மையுடைய, வடக்கு மாகாண சபையை ஓரங்கட்டும் நடவடிக்கைகளோடு கூடிய முன்னெடுப்புகளுடன் செயற்பட்டமையை, வடமாகாணத்தைச் சேர்ந்த, எம்மாகாணத்தின் முன்னேற்றத்தில் அக்கறையுடைய கௌரவ மாகாணசபை உறுப்பினர்கள், கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்கள், புத்திஜீவிகள், உயர் அதிகாரிகள், பொதுமக்கள் ஆகிய எம் எல்லோராலும் உணரப்பட்டு கூட்டிணைப்புடன் கூடிய அழுத்தத்தின் பயனாக நடைபெற்ற ஒன்று. இது ஒட்டுமொத்தமாக எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்று. ஆனால் கௌரவ தவராசா அவர்களின் கேள்வி இதனை அவர் விரும்பவில்லையா என்று கேட்க வைக்கின்றது. அவ்வாறு விரும்பவில்லையாயின் அவர் தன்னுடைய எதிர்ப்பை அப்போது வெளியிட்டிருக்க வேண்டும். ஆளுநர் சந்திரசிரிக்கு நிகரானவர்கள் எவரும் இல்லை என்று எதிர்க்கட்சித் தலைவர் அப்போது அவர் புகழ் பாடியிருக்க வேண்டும். அவரின் செயற்பாடுகளில் திடீரென எமது எதிர்க் கட்சித் தலைவருக்கு மதிப்பு ஏற்பட்டுள்ளமை விந்தையே. அவர் போல் எதேட்சையாக ஏன் நீங்கள் நடந்து கொள்ளவில்லை என்று கேட்கின்றார்.
நான் வன்வழிவந்தவனல்ல. ஜனநாயகத்தை மதிப்பவன். ஆகவே அவர் வழி எதிர்க்கட்சித் தலைவருக்குப் பொருத்தமாக இருக்கலாம். எமக்கு அது பொருந்தாது.
அவ்வாறே முன்னைய பிரதம செயலாளர் வடமாகாண சபையின் நிர்வாக நடவடிக்கைகளை மாகாண சபையுடன் இணைந்து செயற்படுத்தாமல் தன்னிச்சையாகச் செயற்பட்டிருந்தார். அவருடைய இடமாற்றம் நிர்வாக நடவடிக்கைகளுக்குட்பட்டது.
இவ்விரு விடயங்களையும் இணைத்து ஒன்றுக்கொன்று தொடர்பில்லாமல் கேள்வி கேட்கும் கௌரவ எதிர்க்கட்சித் தலைவர் தவராசா அவர்கள் குறித்த இருவரும் தம் காலத்தில் சாதித்தது என்ன என்பதைப் பட்டியலிட்டுக் கூறுவாரானால் அதன் பின் அவர்கள் மாற்றத்தின் பின் எம்மால் மேற்கொண்ட சாதனைகள் பற்றித் தெளிவுபடுத்தலாம்.
அடுத்து வினா 04க்கு வருவோம்.
யாழ். மாநகரசபையின் ஊழல்கள் தொடர்பாக கௌரவ உறுப்பினர் பரஞ்சோதி அவர்களால் கேட்கப்பட்ட போது இவ் விடயம் தொடர்பில் ஓய்வு பெற்ற நீதிபதி க. அரியநாயகம் அவர்களால் விசாரணை மேற்கொள்ளப்படுவதாக 34வது அமர்வில் 01.09.2015ல் தங்களால் தெரிவிக்கப்பட்டது. எனினும், தகவல் அறியும் சட்டத்தின் மூலம் பெற்றுக் கொண்ட தகவல்களின் பிரகாரம் இது ஓய்வு பெற்ற நீதிபதி வசந்தசேனன் அவர்களால் மேற்கொள்ளப்பட்டுள்ளமை தெரியவருகின்றது. இவ்வாறான குழப்ப நிலை ஏன் ஏற்பட்டது?
இந்தக் கேள்விக்கான பதில் பின்வருமாறு –
யாழ்ப்பாண மாநகர சபை தொடர்பாக இரண்டு ஓய்வு பெற்ற நீதிபதிகளால் விசாரணைகள் நடாத்தப்பட்டுள்ளன. முதலில் ஓய்வுபெற்ற நீதிபதி திரு.கந்தையா அரியநாயகம் அவர்களால் 08.08.2014 ஆரம்பிக்கப்பட்டு 22.12.2014 வரை நடாத்தப்பட்டு 16.03.2015ல் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது.
இரண்டாவதாக ஓய்வுபெற்ற நீதிபதி திரு.இ.வசந்தசேனன் அவர்களால் நடாத்தப்பட்ட விசாரணை 2015.06.03 திகதி ஆரம்பிக்கப்பட்டு அவரது அறிக்கை 2015.10.07ல் சமர்ப்பிக்கப்பட்டது.
முதலாவது விசாரணை அதிகாரி திரு.கந்தையா அரியநாயகம் அவர்களின் சிபார்சுக்கு அமைய, மீண்டும் மாநகரசபையில் நடைபெற்ற முறைகேடுகள் தொடர்பாக ஓய்வுபெற்ற நீதிபதி திரு.இ.வசந்தசேனன் அவர்கள் நியமிக்கப்பட்டார்.
இருவருடைய பெயர்களும் அக்காலத்தில் செயற்பாட்டில் இருந்தமையால் நீதிபதியின் பெயர் மாறிக் கூறப்பட்டுவிட்டது. அதற்காக வருந்துகிறேன். குழப்ப நிலை எதுவும் இல்லை. 01.09.2015 திகதிய ஹன்சாட் அறிக்கையில் திரு. கந்தையா அரியநாயகம் என்பதற்கு பதிலாக திரு.இ.வசந்தசேனன் என வாசித்துக் கொள்ளுமாறு இச்சபையை கேட்டுக் கொள்கின்றேன். அவைத்தலைவர் அத் திருத்தத்திற்காக ஆவன செய்வார் என்று நம்புகின்றேன்.
குறித்த தவறை எடுத்துக் காட்டாது ஏதோ பாரிய குழப்பம் நடந்தேறியதாக எதிர்க் கட்சித் தலைவர் சித்திரிக்க முன் வந்தமை நகைச் சுவையாக இருக்கின்றது. வடமாகாணசபை எதிர்க்கட்சித் தலைவர் யார் என்றால் தற்செயலாக தவராஜா என்று கூறாது தவநாதன் என்று கூறுவது போலானது தான் இது. அதைப் பெரிது படுத்தத் தேவையில்லை. இரண்டு நபர்களும் EPDPயில் தான் இன்னமும் இருக்கின்றார்கள். இந்த விடயத்தில் இரண்டு விசாரணை அதிகாரிகளும் ஓய்வு பெற்ற நீதிபதிகள் தான்!
வினா 05.
சுன்னாகம் நிலத்தடி நீர்
2016ம் ஆண்டு யூன் மாதம் பிரித்தானிய உயர்ஸ்தானிகர் யாழ். வந்தபோது சுன்னாகம் நிலத்தடி நீர் தொடர்பில் வெளிநாட்டு நிபுணத்துவக் குழுவின் அறிக்கையின் பிரகாரம் தற்போது ஒயிலின் அளவு அபாய நிலையிலும் குறைவாக உள்ளது என பதிலளித்தமையானது நிபுணத்துவக் குழுவின் அறிக்கையினை முழுமையாக வாசித்துப் பார்க்காது பதிலளித்துள்ளதாகத் தெரிகிறது.
இப் பகுதியில் 4000 கிணறுகள் பாதிக்கப்பட்டபோதும் 12 கிணறுகளின் மாதிரிகளைக் கொண்டு ஆய்வு செய்துள்ளமை பொருத்தமற்றதாகும் என்பதே குற்றச்சாட்டு. இதற்கு விளக்கம் பின்வருமாறு –
சுன்னாகம் நிலத்தடி நீர் பிரச்சினை தொடர்பான ஆய்வுகளும் இது தொடர்பான விளக்கங்களும் இச்சபையில் ஏற்கனவே முன்னாள் விவசாய அமைச்சர் கௌரவ திரு. பொ.ஐங்கரநேசன் அவர்களால் விளக்கப்பட்டுள்ளது.
எனவே, மீண்டும் மீண்டும் அது தொடர்பாக விளக்கமளிப்பது அவசியமற்றது. என்றாலும் வெளிநாட்டு உயர்ஸ்தானிகரை முன்வைத்து கேள்வி பிறப்பிக்கப்பட்டதால் முழுமையான அறிக்கை ஒன்று தேவைப்படுவதாகக் கருதுகின்றேன்.
என் பதில் பின்வருமாறு ,
அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த துறைசார்ந்தவர்கள் தங்களது ஆய்வுக்காகத் தெரிவு செய்த 12 கிணறுகளில் 9 கிணறுகள் ஏற்கனவே உயர் செறிவில் எண்ணெய் இருப்பதாக இங்கு மேற்கொள்ளப்பட்ட சோதனைகளில் தெரிய வந்த கிணறுகள் ஆவன.
இக்கிணறுகளில் இருந்து சேகரிக்கப்பட்ட நீர் மாதிரிகள் சிங்கப்பூரில் உள்ள ஆய்வகத்தில் சோதிக்கப்பட்டபோது இவை எவற்றிலும் எண்ணெய்மாசு இருப்பதாகத் தெரிய வரவில்லை.
Norwegian Geotechnical Institute (NGI) ஐ சேர்ந்த விஞ்ஞானிகள் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் (NBRO – National Building Research Organization) அழைப்பின் பேரில் 2015 ஆம் ஆண்டு மே மாதம் இறுதியில் சுன்னாகத்துக்கு வருகை தந்து கள ஆய்வில் ஈடுபட்டனர். அவர்களது அறிக்கையிலும் பாரதூரமான எண்ணெய்மாசு இருப்பதாக அவதானிக்கப்படவில்லை என்றே குறிப்பிடப்பட்டுள்ளது.
இவற்றின் அடிப்படையில் எண்ணெய்மாசின் அளவு குறைந்திருக்கின்றது என்று பிரித்தானிய உயர்ஸ்தானிகருக்குக் குறிப்பிட்டதில் தவறேதும் இல்லை.
தேசிய நீர் வழங்கல் வடிகால் சபை, சுன்னாகம் நீர்மாசு தொடர்பாக தனது பிந்திய அறிக்கையை வெளியிட்டுள்ளது. யூலை 2016 தொடங்கி பெப்ரவரி 2017 வரை மேற்கொள்ளப்பட்ட தனது இரண்டாம் கட்ட ஆய்வு அறிக்கையை அது கடந்த மார்ச் மாதம் வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் சுன்னாகம் மின் நிலையத்தை மையமாக வைத்து 4 கிலோமீற்றர் ஆரைப் (radius) பகுதியில், ஏற்கனவே மாசு என அடையாளப்படுத்தப்பட்ட கிணறுகள் உட்பட 160 கிணறுகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவற்றில் 125 கிணறுகளில் எவ்வித எண்ணெய்மாசும் இருக்கவில்லை.
தேசிய நீர் வழங்கல் வடிகால் சபை நொவம்பர் 2013 தொடங்கி செப்ரம்பர் 2014 வரை மேற்கொண்ட அதன் முதற்கட்ட ஆய்வில் சுன்னாகம் மின் நிலையத்தைச் சுற்றி 1.5 கிலோமீற்றர் ஆரையளவில் 150 கிணறுகளைச் சோதனைக்கு எடுத்திருந்தது. அப்போது 109 கிணறுகளில் ஒரு மில்லிகிராம் Æ , லீற்றர் என்ற அளவைவிட எண்ணெய்மாசு அதிகமாக இருந்ததாகக் குறிப்பிட்டுள்ளது. இப்போதைய இரண்டாம் கட்ட ஆய்வில் ஒரு மில்லிகிராம் Æ , லீற்றர் என்ற அளவைவிட அதிகமாக 6 கிணறுகளிலேயே எண்ணெய்மாசு இருப்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
தேசிய நீர் வழங்கல் வடிகால் சபையின் இரண்டாம் கட்ட ஆய்வறிக்கையிலும் எண்ணெய்மாசு குறைவடைந்திருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அந்தவகையில், எண்ணெய்மாசு குறைவடைந்துள்ளதாக பிரித்தானிய உயர்ஸ்தானிகருக்குத் தெரியப்படுத்தியதில் தவறேதும் இல்லை.
எந்த ஒரு அறிக்கையிலும், பதிவுகளிலும் 4000 கிணறுகள் எண்ணைமாசு அடைந்திருப்பதாகக் குறிப்பிடப்படவில்லை. சுன்னாகம் குடிநீரில் எண்ணெய் இருப்பதாகத் தெரிவித்த தேசிய நீர் வழங்கல் வடிகால் சபைகூட ஆயிரக்கணக்கில் கிணறுகள் மாசுபட்டதாக எங்கும் குறிப்பிடவில்லை. இந்த மிகைப்படுத்தல் பல்வேறு உள்நோக்கங்களைக் கொண்ட திட்டமிட்ட பரப்புரையாகும். எதிர்க்கட்சித் தலைவர் யார் சார்பில் இத் தவறான கேள்வியைக் கேட்டுள்ளார் என்று எனக்கு விளங்கவில்லை.
வினா 06.
பின்வரும் உயர் அதிகாரிகள் மாதக் கணக்கில் பயன்படுத்தாமல் குழாமில் (Pool) வைத்திருந்தீர்கள். இவை தங்கள் நிர்வாகத்தின் வினைத்திறனற்ற செயற்பாடு என்பதுடன்,
தங்களின் சிபார்சு மற்றும் வேண்டுகோளின் அடிப்படையிலேயே கௌரவ ஆளுநர் இவ்வாறு செயற்பட்டார்.
திரு. C.A. மோகன்ராஸ் – 4 மாதங்கள்
திரு. இ, வரதீஸ்வரன் – 6 மாதங்கள்
திரு. க. தெய்வேந்திரன் – 7 மாதங்கள்
திரு. அ .சிவபாதசுந்தரம் – 7 மாதங்கள்
திருமதி அ.சாந்தசீலன் – 4 மாதங்கள்
இதற்கான விளக்கம் வருமாறு,
கௌரவ ஆளுநர் வடமாகாணம்; அவர்களது 2013/01 இலக்க 2013.08.07 ந் திகதிய வடமாகாண பொதுச் சேவைக்கான அதிகார கையளிப்புத் தத்துவத்தின் பிரகாரம் மாகாண பொதுச்சேவையிலுள்ள அமைச்சுக்களின் செயலாளர்கள், கௌரவ ஆளுநரின் செயலாளர், மாகாண பொதுச் சேவை ஆணைக்குழு செயலாளர் , பேரவைச் செயலகத்தின் செயலாளர், பிரதிப் பிரதம செயலாளர்கள், திணைக்களத் தலைவர்களினுடைய நியமனங்கள், இடமாற்றங்கள், மற்றும் ஒழுக்காற்று நடவடிக்கைகள் என்பனவற்றை மேற்கொள்வதற்கான அதிகாரம் கௌரவ ஆளுநர் அவர்களுக்கே உரித்தாக்கப்பட்டுள்ளன.
இதற்கமைவாக மேற் குறிப்பிட்ட உத்தியோகத்தர்களுக்கு வழங்கப்பட்ட நியமனங்கள் / இடமாற்றங்கள் தொடர்பான அறிக்கை கீழ்வருமாறு
திரு. அ.சிவபாதசுந்தரம் , இ.நி.சே. விசேட தரம்
அரசாங்க நிர்வாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சின் 79/10/36/37 இலக்க 14.10.2013 ந் திகதிய கடித மூலம் திரு. அ. சிவபாதசுந்தரம் தரம் ஐ அவர்கள் வடக்கு மாகாணசபைக்கு இடமாற்றம் செய்யப்பட்டு 29.10.2013ம் திகதி வடமாகாண சபையில் கடமைக்கு அறிக்கையிட்டார்.
பின்னர் குறித்த உத்தியோகத்தருக்கு கௌரவ ஆளுநர் அவர்களது 27.11.2013ந்; திகதிய கடித மூலம் 27.11.2013 இலிருந்து ஆறு மாத காலங்களுக்கு பேரவைச் செயலகத்தின் செயலாளருக்குரிய கடமைகளில் பரீட்சயம் பெறும்பொருட்டு வடக்கு மாகாண பேரவைச் செயலகத்திற்கு இணைக்கப்பட்டு பின்னர் கௌரவ ஆளுநர் அவர்களது 2014.09.04 ந் திகதிய கடித மூலம் 2014.09.10ந் திகதி முதல் செயற்படும் வண்ணம் பேரவைச் செயலகத்தின் செயலாளராக நியமிக்கப்பட்டார்.
எனவே இதற்கமைவாக குறித்த உத்தியோகத்தர் கடமைக்கு அறிக்கையிட்டது முதல் பேரவைச் செயலகத்திற்கு தற்காலிக இணைப்பு பெறும்வரை அண்ணளவாக ஒரு மாதமளவிலேயே பிரதம செயலாளர் செயலகத்தில் இணைக்கப்பட்டிருந்தார்.
திரு. க. தெய்வேந்திரம் இ.நி.சே. விசேட தரம்
மாகாண பொதுச் சேவை ஆணைக்குழுவின் செயலாளர் பதவி விசேட தரத்திற்குரியது. கௌரவ ஆளுநரின் 2012.12.31 ந் திகதிய கடிதத்திற்மைவாக 2013.01.08ந் திகதி முதல் செயற்படும் வண்ணம் திரு.க.தெய்வேந்திரம் இ.நி.சே.வகுப்பு அவர்கள் மாகாண பொதுச் சேவைக் ஆணைக்குழுவின் பதில் செயலாளராக நியமிக்கப்பட்டார்.
அரசாங்க நிர்வாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளரது இடமாற்றக் கட்டளைக்கமைவாக மத்திய அரசாங்கத்திலிருந்து வடக்கு மாகாண சபைக்கு இடமாற்றம் பெற்று வடக்கு மாகாண சபையில் 20.05.2015 இல் கடமையைப் பொறுப்பேற்ற திருமதி. ரூபிணி வரதலிங்கம் இ.நி.சே. விசேட தரம் அவர்களுக்கு கௌரவ ஆளுநரது 2015.06.01ந் திகதிய கடித மூலம்; மாகாண பொதுச் சேவை ஆணைக் குழுவின் செயலாளராகவும் திரு.க.தெய்வேந்திரம் இ.நி.சே.தரம் ஐ அவர்களுக்கு கௌரவ ஆளுநர் அவர்களது 01.06.2015ந் திகதிய கடித மூலம், மாகாண கல்வித் திணைக்களத்தில் மேலதிக மாகாண கல்விப் பணிப்பாளராக ( நிர்வாகம் ) 2015.06.01ந் முதல் செயற்படும் வண்ணம் நியமனம் வழங்கப்பட்டது.
இதன் பின்னர் திரு.க.தெய்வேந்திரம் அவர்கள் தனக்கு வழங்கப்பட்ட இந்த நியமனம் தொடர்பில் குறித்த பதவியை தான் ஏற்பதில் உள்ள இடர்பாடுகளை காரணங் காட்டி மேன்முறையீடு செய்ததன் அடிப்படையில் இவர் பிரதம செயலாளர் செயலகத்தில் 15.06.2015 திகதி முதல் தற்காலிகமாக இணைக்கப்பட்டார்.
பின்னர் கௌரவ ஆளுநர் அவர்களால் 2016.02.05ந் திகதிய கடித மூலம் 2016.02.08 முதல் செயற்படும் வண்ணம் திரு.க. தெய்வேந்திரம் அவர்களுக்கு இ.நி.சே. விசேட தரத்திற்குரிய பதவியான பேரவைச் செயலகத்தின் செயலாளராக நியமனம் வழங்கப்பட்டது.
இவருக்குரிய நியமனம் வழங்கப்படும் வரை இவர் அண்ணளவாக ஏழு மாதங்கள் (2015.06.15 -2016.02.07) பிரதம செயலாளர் செயலகத்தில் இணைக்கப்பட்டிருந்தார்.
எனவே, திரு. தெய்வேந்திரம் அவர்கள் மாகாண பொதுச் சேவை ஆணைக்குழுவின் செயலாளர் பதவி கௌரவ ஆளுநர் அவர்களினால் மீளப்பெறப்பட்டு அவருக்கு தரம் ஐ இற்குரிய பதவியான மேலதிக கல்விப் பணிப்பாளர் நியமனம் வழங்கப்பட்டபோதும் தன்னுடைய தனிப்பட்ட காரணங்களின் அடிப்படையில் அப்பதவியை ஏற்க மறுத்தமை காரணமாகவே 15.06.2015 தொடக்கம் பிரதம செயலாளர் அலுவலகத்தில் இணைக்கப்பட்டார். பின்னர் அவர் விசேட தரத்திற்கான பதவி உயர்வினைப் பெற்றுக்கொண்ட போது பேரவைச் செயலகத்தின் செயலாளராக 07.02.2015 ல் இணைக்கப்பட்டார்.
திரு. இ. வரதீஸ்வரன் இ.நி.சே. விசேட தரம்
திரு.இ.வரதீஸ்வரன் இ.நி.சே. விசேட தரம் அவர்கள் முதலமைச்சர்; அமைச்சின் செயலளாராக கடமையாற்றிக் கொண்டிருந்த வேளையில்; குறித்த உத்தியோகத்தரது செயற்பாடுகளில் திருப்பதியின்மை காணப்படுவதாகவும் இவரை முதலமைச்சரின் செயலாளர் பதவியிலிருந்து மாற்றஞ் செய்யுமாறு 13.03.2016ந் திகதிய கடிதம் மூலம் எம்மால் சமர்ப்பித்த கோரிக்கைக்கமைவாக கௌரவ ஆளுநர் அவர்களது 2016.04.01ந் திகதிய கடித மூலம் திரு. இ. வரதீஸ்வரன் அவர்களுக்கு முதலமைச்சர் செயலாளராக வழங்கப்பட்ட நியமனம் 2016.04.01ந் திகதியுடன் மீளப் பெறப்பட்டது.
அத்துடன் திருமதி. வி.கேதீஸ்வரன், இ.நி.சே.வகுப்பு ஐ அவர்களுக்கு கௌரவ ஆளுநர் அவர்களது 2016.04.01ந் திகதிய கடித மூலம் முதலமைச்சர் அமைச்சின் செயலாளாராக நியமனம் வழங்கப்பட்டது.
இதனையடுத்து குறித்த உத்தியோகத்தர் பிரதம செயலாளர் செயலகத்தில் 2016.05.02ந் திகதி இணைக்கப்பட்டார்.
இதன் பின்னர் இ.நி.சே.வகுப்பு ஐ இல் வெற்றிடமாகிய மாகாண கல்வித் திணைக்களத்தின மேலதிக மாகாண கல்விப் பணிப்பாளர் – (நிர்வாகம்) பதவிக்கு திரு.இ.வரதீஸ்வரன் அவர்களது சம்மதத்துடன் பிரதம செயலாளரால் 11.10.2016. ந் திகதிய கடித மூலம் நியமனம் செய்யப்பட்டார்.
இதனடிப்படையில் இவ் உத்தியோகத்தர் 2016.05.02 இலிருந்து 2016.10.11 வரை இச் செயலகத்தில் இணைக்கப்பட்டிருந்தார்.
திரு. ஊ.யு.மோகன்ராஸ் இ.நி.சே. விசேட தரம்
பொது நிர்வாக மற்றும் முகாமைத்துவ அமைச்சின் 2017ம் ஆண்டுக்கான வருடாந்த இடமாற்றக் கட்டளையில் வட மாகாண சபை விவசாய அமைச்சின் செயலாளராக கடமையாற்றிக் கொண்டிருந்த திரு. பற்றிக் டிரஞ்சன் வடக்கு மாகாண சபையிலிருந்து முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திற்கும் முல்லைத்தீவு செயலகத்தின் மேலதிக அரசாங்க அதிபராக கடமையாற்றிய திரு..சி.ஏ.மோகன்ராஸ் இ.நி.சே. விசேட தரம் அவர்களுக்கு முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திலிருந்து வடக்கு மாகாண சபைக்கும் 01.01.2017 முதல் இடமாற்றம் வழங்கப்பட்டது.
இதன் பிரகாரம் திரு. சி.ஏ.மோகன்ராஸ் வடக்கு மாகாண சபையில் 2017.01.02 ந் திகதி கடமைக்கு அறிக்கையிட்டிருந்தார்.
திரு. .சி.ஏ.மோகன்ராஸ் அவர்களுக்கு கௌரவ ஆளுநர் அவர்களது 2017.05.09ந் திகதிய கடித மூலம் 2017.05.15ந் திகதி முதல் செயற்படும்; வண்ணம் மாகாண பொதுச்சேவை ஆணைக்குழுவின் செயலாளராக நியமனம் வழங்கப்பட்டது. அப்போதைய விவசாய அமைச்சர் இலங்கை நிர்வாக சேவை விசேட தரத்தைச் சேர்ந்த திரு.வரதீஸ்வரனைத் தமது அமைச்சின் செயலாளராக ஆக்க விடுத்த கோரிக்கையின் நிமித்தம் இவருக்குரிய நியமனம் வழங்கப்படாமை காரணமாக 2017.01.02 இலிருந்து 2017..05.18 வரை குறித்த உத்தியோகத்;தர் பிரதம செயலாளர் செயலகத்தில் இணைக்கப்பட்டிருந்தார்.
திருமதி. அ.சாந்தசீலன் இ.நி.சே. தரம் ஐ
பொது நிர்வாக மற்றும் முகாமைத்துவ அமைச்சின் 2017ம் ஆண்டுக்கான வருடாந்த இடமாற்றக் கட்டளையின் பிரகாரம் வட மாகாண கூட்டுறவு அபிவிருத்தி ஆணையாளராக கடமையாற்றி கொண்டிருந்த திருமதி. மதுமதி வசந்தகுமார், இ.நி.சே. வகுப்பு ஐ வடக்கு மாகாண சபையிலிருந்து சாவகச்சேரி பிரதேச செயலகத்திற்கும் சாவகச்சேரி பிரதேச செயலாளர் திருமதி. அ.சாந்தசீலன் இ.நி.சே. வகுப்பு ஐ, அவர்களுக்கு சாவகச்சேரி பிரதேச செயலகத்திலிருந்து வடக்கு மாகாண சபைக்கும் 01.01.2017 முதல் இடமாற்றம் வழங்கப்பட்டது.
இதன் பிரகாரம் திருமதி. அ.சாந்தசீலன் வடக்கு மாகாண சபையில் 2017.01.02 ந் திகதி கடமைக்கு அறிக்கையிட்டிருந்தார்.
திருமதி அ. சாந்தசீலன் அவர்களை மாகாண கல்வித் திணைக்களத்தின் மேலதிக கல்விப் பணிப்பாளராக நியமனம் செய்யுமாறு கௌரவ ஆளுநர் அவர்களால் வழங்கப்பட்ட 2017.04.22ந் திகதிய கடிதத்திற்கமைவாக திருமதி.அ.சாந்தசீலன் அவர்களுக்கு பிரதம செயலாளரது 2017.04.24ந் திகதிய கடித மூலம்; உடனடியாகச் செயற்படும் வண்ணம் மாகாண கல்வித் திணைக்களத்தின் மேலதிக கல்விப் பணிப்பாளராக (நிர்வாகம்) நியமனம் வழங்கப்பட்டது.
எனவே இவருக்குரிய நியமனம் வழங்கப்படாமை காரணமாக இவர் அண்ணளவாக நான்கு மாதங்கள் பிரதம செயலாளர் செயலகத்தில் இணைக்கப்பட்டிருந்தார்.
நியமனங்கள் தாமதமாவது தவிர்க்க முடியாதது. ஒவ்வொருவரின் விருப்பு வெறுப்புக்களை, தகைமைகளை கருத்தில் எடுத்தே நியமனங்கள் நடைபெறுகின்றன. முன்னைய ஆளுநரின் இராணுவ எதேச்சாதிகாரத்துடன் நாங்கள் நடந்து கொள்ள முடியாது . நிர்வாக வினைத்திறன் என்று எதிர்க்கட்சித் தலைவர் கூறுவது “நாம் நினைத்ததை நடத்திக் காட்ட வேண்டும்” என்ற அகந்தையின் பால்ப்பட்டது. அவ்வாறான அகந்தை தான் முன்னைய ஜனாதிபதியை பதவியில் இருந்து இறக்கியது என்பதையும் அவரின் தலைவரையும் அமைச்சுப்பதவியில் இருந்து இறக்கியது என்பதையும் நண்பர் புரிந்துகொள்ள வேண்டும். போதுமானவரையில் எல்லோர் கரிசனைகளையும் மனதிற்கெடுத்தே எமது நிர்வாகம் நடைபெறுகின்றது. அது ஆமை வேகமாக நண்பருக்குப்பட்டால் ஆமைதான் முயலை முந்தியது என்பதை நண்பர் மறக்காதிருப்பாராக!
அடுத்து வினா 07 ஐப் பார்ப்போம்
2015ஆம் ஆண்டு செயலாளர்களுக்கு தவறுதலாக வழங்கப்பட்ட வீட்டு வாடகை நீர் மற்றும் மின்சாரக் கொடுப்பனவு ரூபா 924,000 மீளப் பெறுவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை எனக் கணக்காய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடப்பட்டது.
இவ்விடயம் தொடர்பில் விளக்கம் வருமாறு
செயலாளர்களுக்கு வழங்கப்பட்ட விடுதி வாடகை, நீர் மற்றும் மின்சாரக் கொடுப்பனவு தொடர்பாக விசேடமாக சுற்று நிருபங்கள் எவையும் இல்லாத போதும் வடக்கு மாகாண சபையின் செயற்பாடுகளை இலகுபடுத்தும் பொருட்டு 18.09.2008ஆம் திகதி கௌரவ ஆளுநரின் அனுமதிக்கமைய வடக்கு மாகாண சபையில் அரச விடுதிகள் இல்லாத காரணத்தினால் மாகாண நிதியிலிருந்து தனியார் வீடுகளை ரூபா. 15,000 /- உட்பட்ட வாடகைக்கு பெற்றுத் தேவையான செயலாளர் தர உத்தியோகத்தர்களுக்கு விடுதி, நீர் மற்றும் மின்சார வசதிகள் உட்பட வழங்கப்பட்டு அவர்களின் சம்பளத்திலிருந்து மாதாந்தம் ரூபா 500.00 அறவிடப்பட்டு வருகின்றது. எனவே கணக்காய்வு ஐயவினவில் குறிப்பிடப்பட்ட தொகை குறித்த செயலாளர்களிடமிருந்து தவறான கொடுப்பனவாகக் கருதி அறவிடப்பட்டதாகக் கூறுவது உண்மைக்குப் புறம்பானது.
அடுத்து வினா 08 ஐப் பரிசீலிப்போம்
வடமாகாண சபையின் அமைச்சுகள் மற்றும் திணைக்களங்களின் பாவனைக்காக வாடகைக்கு எடுக்கப்பட்ட கட்டிடங்கள் தொடர்பில் உரிய கொள்ளல் நடைமுறை பின்பற்றப்படவில்லை என கணக்காய்வுத் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.
இதற்கான பதில் வருமாறு
திருகோணமலையிலிருந்து வடக்கு மாகாண சபையின் திணைக்களங்கள் 2010 செப்ரெம்பர் காலப்பகுதி முதல் யாழ்ப்பாணம், கிளிநொச்சி போன்ற இடங்களுக்கு இடமாற்றப்பட்டிருந்தன. இதன் போது வெவ்வேறு காலப்பகுதிகளுக்கு மாத வாடகை ரூபா 50,000ஃ- இற்கு உட்பட்டிருந்த காரணத்தினால் மாகாண நிதிப்பிரமாணத்தின் பிரிவு 420 இற்கமைய, திறந்த கேள்வி நடைமுறை பின்பற்றப்படாது கடைகொள்ளல் முறை மூலம் தனியார் கட்டடங்கள் வாடகைக்கு பெறப்பட்டதுடன், தொழில்நுட்ப உத்தியோகத்தரின் அறிக்கையுடன் பிரதம செயலாளரினால் அமைக்கப்பட்ட மூன்று பதவிநிலை உத்தியோகத்தர்களை கொண்ட மதிப்பீட்டுக் குழுவின் மதிப்பீட்டு அறிக்கையும் பெறப்பட்டு கௌரவ ஆளுநரது அனுமதியுடன் வாடகை ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டன.
தற்போது, அலுவலகங்களுக்கான புதிய வாடகை கட்டடங்கள் பெறப்படும் போதும், வாடகை தொகையில் ஏற்படும் மாற்றங்களின் போதும் விலை மதிப்பீட்டுத் திணைக்களத்தின் பரிந்துரைக்கமைய, தொடர்புடைய ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டு, அமைச்சர் சபையின் சிபார்சு பெறப்பட்டு, கௌரவ ஆளுநரது அனுமதியுடன் வாடகை ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
ஆயினும், இல.26, சோமசுந்தரம் அவனியு, யாழ்ப்பாணம் எனும் முகவரியில் இயங்கி வந்த முதலமைச்சரின் அமைச்சு அலுவலக வாடகை ஒப்பந்தமானது, அதிமேன்மை தங்கிய ஜனாதிபதியின் செயலாளரது 2013.12.18 ஆம் திகதிய கடித அனுமதிக்கமைய வழங்கப்பட்டது. 2016.03.31 ஆம் திகதியிலிருந்து இவ்வலுவலகம் கைதடிக்கு நிரந்தர கட்டடத்திற்கு இடம்மாற்றப்பட்டுள்ளதால், தற்போது இவ்வலுவலகத்திற்கான வாடகை ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்படுவதில்லை.
அடுத்து வினா 09
ஆளுநர் நிதியத்திலிருந்து மாற்றப்பட்ட 144 மில்லியன் ரூபா நிதி பயன்படுத்தப்படாது கணக்கில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு தொடர்பான பதில் வருமாறு
கௌரவ ஆளுநர் அவர்களின் அறிவுறுத்தலுக்கமைய 11.09.2013 ஆம் திகதி கடிதத்தின் மூலம் பின்வரும் மாகாண அமைச்சு மற்றும் திணைக்களங்களிடமிருந்து பின்வரும் தொகைகள் ஆளுநர் செயலக வைப்புக் கணக்கிற்கு மாற்றப்பட்டன.
விவசாய அமைச்சு ரூபா 11,457,360.95
விவசாயத் திணைக்களம் ரூபா 62,135,200.00
காணி நிர்வாகத் திணைக்களம்ரூபா4,700,000.00
கூட்டுறவு அபிவிருத்தித் திணைக்களம் ரூபா 32,000.000.00
மொத்தத் தொகைரூபா 110,292,560.95
மேற் குறிப்பிட்ட தொகையுடன் ஆளுநர் செயலகத்தின் வைப்புக் கணக்கிலிருந்த ரூபா 6 மில்லியன் நிதியினையும் உள்ளடக்கி ஆளுநர் செயலகத்தால் ரூபா 116,292,560.95 இனை 17.09.2013 ஆம் திகதிய கடிதத்தின் மூலம் ஆளுநர் சுயேட்சை நிதியத்திற்கு மாற்றப்பட்டது.
இந் நிதி தொடர்பாக 03.11.2015 மற்றும் 04.11.2015 ஆகிய திகதிகளில் நடைபெற்றமாகாண பொதுக் கணக்குக் குழுக் கூட்ட தீர்மானம் கேள்வி 5(டி) (ஆ) பந்திக்கு அமைவாக, ஆளுநர் சுயேட்சை நிதியம் ரூபா 110,292,560 தொடர்பாக அமைச்சுக்கள் மற்றும் திணைக்களங்களிடமிருந்து பெற்றுக்கொள்ளப்பட்ட நிதியை உரிய அமைச்சுக்கள் / திணைக்களங்களுக்கு மீளளித்தல் வேண்டும்.
அவ்வாறு மீளளிக்கப்படும் தொகைகளை எந்தெந்த நோக்கங்களுக்கு நிதி பெறப்பட்டதோ அந்தந்த நோக்கங்களின் அடிப்படையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கான உதவித்திட்டங்களை உரிய அமைச்சு ஃ திணைக்களங்கள் பிரதம செயலாளரின் ஆலோசனையுடன் தயாரித்து அமைச்சர் வாரியத்தினூடாக கௌரவ ஆளுநரின் அனுமதியைப் பெற்று வடக்குமாகாண சபையின் அங்கீகாரம் பெற்று அத்திட்டங்கள் நிறைவேற்றப்பட வேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்தது.
மேற் கூறிய தீர்மானத்தின் பிரகாரம் கௌரவ ஆளுநர் நிதியத்திலிருந்து 07.09.2016ஆம் திகதிய கடிதத்தின் மூலம்; ரூபா 144,041,686.47 பிரதம செயலாளரின் வங்கிக் கணக்கிற்கு மாற்றப்பட்டது.
நிதி விபரங்கள் வருமாறு,
விவசாய அமைச்சு ரூபா 11,457,360.95
விவசாயத் திணைக்களம் ரூபா 62,135,200.00
காணி நிர்வாகத் திணைக்களம்ரூபா 4,700,000.00
கூட்டுறவு அபிவிருத்தித் திணைக்களம் ரூபா 32,000.000.00
ஆளுநர் செயலக நிதியத்தில் எஞ்சியிருந்த நிதி ரூபா 33,749,125.52
மொத்தத் தொகைரூபா 144,041,686.47
இது தொடர்பாக மேற்படி குழுக் கூட்டத் தீர்மானத்தின் தொடர் நடவடிக்கையாக பிரதம செயலாளர் செயலகத்தில் பிரதம செயலாளர் தலைமையில் 04.10.2016 ஆம் திகதி இவ்விடயத்துடன் தொடர்பு பட்ட அமைச்சு, திணைக்களங்களுடன் கலந்துரையாடி உரிய காலப்பகுதியில் திட்ட முன்மொழிவுகளை சமர்ப்பிக்குமாறு கோரப்பட்டது.
இதில் ரூபா 72.52 மில்லியனில் 1058 பெண்களைத் தலைமைத்துவமாகக் கொண்ட வலுவிழந்த குடும்பங்களுக்கு வருமானத்தை அதிகரிப்பதற்கான வாழ்வாதார கருத்திட்ட முன்மொழிவுகள் அனுமதிக்காக சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. மிகுதித் தொகைக்கான கருத்திட்டங்கள் இன்னும் கிடைக்கப்பெறவில்லை.
ஆளுநர் செயலகத்தில் எஞ்சியிருந்த ரூபா 33,749,125.52 நிதி மருத்துவ நிதி உதவிக் கோரிக்கையாளர்;களுக்கு வழங்குவதற்காக பிரதிப் பிரதம செயலாளர்-நிதி அலுவலக வைப்புக் கணக்கிற்கு மாற்றப்பட்டு மருத்துவ நிதி உதவிக் கோரிக்கைக்கமைய 2017ஆம் ஆண்டு யூலை வரை ரூபா 30,515,000.00 வழங்கப்பட்டுள்ளது. மிகுதி நிதி, கிடைக்கப்பெறும் மருத்துவ நிதி உதவிக் கோரிக்கைகளுக்கமைய பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.
இனி வினா 10 ஐப் பார்ப்போம்
2014ம் ஆண்டு 690 மில்லியன் வருட இறுதியில் வைப்புக் கணக்கிற்கு மாற்றப்பட்டு செலவினம் மேற்கொண்டமை தவறான செயற்பாடுகள் என சுட்டிக் காட்டப்பட்ட போதும் 2015ம் ஆண்டில் ரூபா. 92,585,349.00 செலவினம் செய்யாமையால் வருட இறுதியில் வைப்புக் கணக்கிற்கு மாற்றப்பட்டுள்ளமை.
இதற்கான பதில் வருமாறு
வடக்கு மாகாண சபையின் 2015ஆம் நிதியாண்டில் மூலதன செலவினங்களுக்காக கிடைக்கப் பெற்ற ஒதுக்கீடு, கட்டுநிதி மற்றும் 2015ஆம் நிதியாண்டிற்கு மேற்கொள்ளப்பட்ட மூலதன செலவின விபரங்கள் வருமாறு.
ஆண்டு
ஒதுக்கீடு
(ரூபா. மில்லியனில்)
கிடைக்கப்பெற்ற கட்டுநிதி
(ரூபா. மில்லியனில்)
மேற்கொள்ளப்பட்ட செலவினம்
(ரூபா. மில்லியனில்)
2015
2,758.69
2,547.04
2,531.25
எனவே 2015ஆம் நிதியாண்டில் வடக்குமாகாண சபையால் எந்தவொரு மூலதன வேலைத்திட்டத்திற்கான நிதியும் வைப்புக் கணக்கிற்கு மாற்றப்படவில்லை என்பதனை அறியத் தருகின்றேன்.
அதாவது குறிப்பிட்ட சில வேலைத்திட்டங்களுக்காக அரச சார்பற்ற நிறுவனங்கள், கருத்திட்ட அலுவலகங்கள் மற்றும் அமைப்புக்களால் மாகாண அமைச்சுக்கள் திணைக்களங்களுக்கூடாக செயற்படுத்துவதற்கு வழங்கப்பட்ட நிதிகள் மற்றும் ஏனைய செயற்பாடுகளுக்காக இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் நிதிப்பிரமாணம் 215 இன் அடிப்படையில் வைப்புச் செய்யப்பட்ட ரூபா 92,585,349.00 தொகையினைக் குறிக்கின்றதேயொழிய இத் தொகை 2015 ஆம் நிதியாண்டின் இறுதியில் மூலதன ஒதுக்கீட்டிலிருந்து வைப்புக் கணக்கிற்கு மாற்றப்பட்ட தொகையினால் எழவில்லை.
மேற்படி தொகை தற்போது அமைச்சுக்கள், திணைக்களங்களினால் உரிய நோக்கங்களுக்காக பயன்படுத்தப்பட்டுள்ளதுடன் நோக்கங்கள் நிறைவடைந்த பின்னுள்ள மீதியாகவுள்ள தொகைகள் குறித்த அமைச்சுக்கள் திணைக்களங்களினால் மாகாண வருமானக் கணக்கிற்கு மாற்றப்பட்டுள்ளன.
விபரம் வருமாறு
அமைச்சு/ திணைக்களம்
வைப்பின் வகை
தொகை
ரூபா.
தற்போதைய நிலை
தீர்வு செய்யப்பட்ட காலம்
மாகாண சுகாதாரத் திணைக்களம்
செயற்திட்ட நிறைவேற்றத்தின் போதான நிர்வாகச் செலவினம் மற்றும் செயல்திட்ட கொடுப்பனவுகள்
24,728,603.00
குறித்த நோக்கங்களுக்காக பயன்படுத்தப்பட்டு நிதி முடிவுறுத்தப்பட்டது.
2016 ஆம் ஆண்டில்
பிரதிப் பிரதம செயலாளர் அலுவலகம் – ஆளணிப் பயிற்சி
கருத்திட்டத்தின் மூலம் மனிதவள அபிவிருத்திப் பயிற்சி நெறிக்காக கிடைக்கப்பெற்ற நிதி
3,558,978.00
கருத்திட்டத்திற்கான மனிதவள அபிவிருத்திப் பயிற்சிகள் நடாத்தப்பட்டு நிதி முடிவுறுத்தப்பட்டது.
31.03.2016
மாகாண உள்ளுராட்சித் திணைக்களம்
இலங்கை உள்ளுராட்சி மன்ற நிறுவனத்தினால் ஊழியர்பயிற்சி நெறிக்காக வருட இறுதியில் கிடைக்கப்பெற்றது
1,443,718.00
ஊழியர்களுக்காகன பயிற்சி நெறிகள் 2016ஆம் ஆண்டில் நடாத்தப்பட்டு நிதி முடிவுறுத்தப்பட்டது.
2016 ஆம் ஆண்டில்
மாகாணக் கல்வி அமைச்சு
பிள்ளைப்பராய அபிவிருத்தி ஆசிரியர்களுக்கான பயிற்சிநெறி மற்றும் கால்பந்தாட்டப் போட்டிக்கான தொகை
242,135.00
பிள்ளைப்பராய அபிவிருத்தி ஆசிரியர்களுக்கான பயிற்சி மற்றும் கால்பந்தாட்ட போட்டிகள் நடாத்தப்பட்டு நிதி முடிவுறுத்தப்பட்டது..
2016 ஆம் ஆண்டில்
மாகாண விவசாயத் திணைக்களம்
செயற்திட்டம் நிறைவேற்றும் போதான நிர்வாகச் செலவு மற்றும் செயற்திட்ட கொடுப்பனவுகள்
3,240,958.00
செயற்திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு நிதி முடிவுறுத்தப்பட்டது
29.02.2016
15.11.2016
பிரதம செயலாளர் செயலகம்
வாகன வாடகைக் கொள்வனவுக்காக ஒதுக்கப்பட்ட தொகை
58,990,330.00
வாகன வாடகைக் கொள்வனவுக்கான கொடுப்பனவுகள் மேற்கொள்ளப்பட்டு நிதி முடிவுறுத்தப்பட்டது.
31.01.2016
மாகாண கால்நடை உற்பத்தி சுகாதாரத் திணைக்களம்
கருத்திட்ட அலுவலகத்தினால் வழங்கப்பட்டு குறித்த நோக்கங்களுக்கு பயன்படுத்தப்பட்ட நிதியின் மிகுதித் தொகை
102,855.00
மாகாண வருமானக் கணக்கிற்கு மாற்றப்பட்டுள்ளது.
21.03.2016
மாகாண கூட்டுறவு அபிவித்தித் திணைக்களம்.
கூட்டுறவு ஊழியர்களின் பயிற்சி நெறியின் போதான நிர்வாகச் செலவன நோக்கங்களுக்கு பயன்படுத்தப்பட்ட நிதியின் மிகுதித் தொகை
277,772.00
மாகாண வருமானக் கணக்கிற்கு மாற்றப்பட்டுள்ளது.
2016
மொத்தம்
92,585,349.00
வினா 11 பின்வருமாறு அமைகின்றது.
நெல்சிப் திட்டத்தில் 2013ம் ஆண்டு 128,784 மில்லியன் இல் செலவில் கட்டப்பட்ட 14 கட்டிடங்கள் எதுவித பாவனையும் இன்றிக் காணப்படுகின்றன.
1. முல்லைத்தீவு சிறுவர் பூங்கா
2. மறிச்சிக்கட்டி கடைத் தொகுதி
3. சிலாவத்துறைக் கடைத் தொகுதி
4. மன்னார் பஸ் நிலையத்தில் உள்ள நகரசபைக் கடைத் தொகுதி
5. எருக்கலம்பிட்டி கொள்கலம்
6. பெரிய உலக்குளம் சந்தை
7. மகா கச்சக்கொடி சந்தை
8. ஈரப்பெரியகுளம் கலாசார மண்டபம்
9. தோணிக்கல் விளையாட்டரங்கு
10. ஈரப்பெரியகுளம் சந்தை
நெல்சிப் திட்டத்தில் 2013 ம் ஆண்டு 128.784மில்லியன் ரூபா செலவில் கட்டப்பட்ட 14 கட்டடங்கள் பாவனைக்கு விடப்படவில்லையெனத் தெரிவிக்கப்பட்டது. ஆனால் 10 வேலை விபரங்களே குறிப்பிடப்பட்டுள்ளன.
அவற்றிற்கான விளக்கங்கள் வருமாறு.
NELSIP திட்டமானது வடமாகாணத்தில் உலகவங்கி நிதியுதவியுடன் 2010ம் ஆண்டு காலப்பகுதியில் உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டு 2011ம் ஆண்டு முதல்; நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் ஒரு திட்டமாகும்.
இத்திட்டமானது அக்காலப்பகுதியில் உள்ளுராட்சி ஆணையாளரைத் திட்டப்பணிப்பாளராகக் கொண்டு பிரதம செயலாளரின் நேரடி மேற்பார்வையின் கீழ் மற்றும் கௌரவ ஆளுநரின் நெறிப்படுத்தலின் கீழ் நடைமுறைப்படுத்தப்பட்டு வந்துள்ளது.
திட்டங்களின் முன்மொழிவுகள் அதற்கான இடத்தெரிவு என்பன தொடர்பில் வடமாகாண உள்ளுராட்சி அமைச்சானது நேரடியாகப் பங்கேற்கவில்லை என்பதனை அறியத்தருகின்றேன்.
எனினும் தங்களால் சுட்டிக்காட்டப்பட்ட பாவனைக்கு விடப்படாததும் NELSIP திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட கட்டடங்கள் தொடர்பில் ஆராயப்பட்டு அதற்கான காரணங்கள் தொடர்பில் ஆராய்ந்து அதனை பயன்படுத்துவதற்கான அறிவுறுத்தல்கள் என்னால் தற்போது வழங்கப்பட்டுள்ளதுடன் இது தொடர்பான தொடர்ச்சியான கண்காணிப்புகள் மேற்கொள்வதற்கு என்னால் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுளளன என்பதை அறியத்தருவதுடன் அவை தொடர்பான விரங்கள் வருமாறு –
சிறுவர் பூங்கா, கரைத்துறைப்பற்று, முல்லைத்தீவு
இவ்வேலைத் திட்டம் இனங்காணும் பொறிமுறையினூடாகவும், கரைத்துறைப்பற்று பிரதேச சபையின் முன்னுரிமைப் பட்டியலின்படியும், மக்களின் விருப்புத் தேர்வுடனும், மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு, மக்களினால் தெரிவுசெய்யப்பட்ட உறுப்பினர்களைக் கொண்ட பிரதேச சபையின் சபைத் தீர்மானத்தின் பிரகாரமும் தெரிவு செய்யப்பட்டது.
இதனை நெல்சிப் திட்டத்தின் PAT குழு அனுமதித்ததுடன், மாவட்ட திட்டப்பிரிவின் சுற்றுச்சூழல் சாத்திய அனுமதி என்பன பெறப்பட்டு திட்டத்தினால் அனுமதி வழங்கப்பட்ட பின்னரே வேலை தொடங்கி நிறைவேற்றப்பட்டது.
இது மக்கள் பாவனைக்காக விடப்பட்ட போதும் இது மக்களினால் பயன்படுத்தாமைக்கான காரணம் மாவட்ட செயலகத்தின் US AID நிறுவனத்தினால் வேறொரு பூங்கா அமைக்கப்பட்டு அது மக்களிடத்தில் பிரபல்யம் அடைந்தமை ஆகும்.
தற்போது இப்பூங்காவின் சுற்றாடல் அழகுபடுத்தப்பட்டு சுற்றுலா மையமாக மாற்றுவதற்கு சபையினால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
மறிச்சுக்கட்டி கடைத்தொகுதி,
இவ் வேலைத் திட்டமானது மக்களினால் தெரிவு செய்யப்பட்ட உறுப்பிர்களைக் கொண்ட முசலிப் பிரதேச சபையின் சபைத் தீர்மானத்தின் பிரகாரமும், பிரதேச அபிவிருத்திக்குழுவின் அனுமதியுடனும், மக்களின் விருப்பத்திற்கேற்றவாறும் தெரிவுசெய்யப்பட்டது.
இதற்கான சாத்தியவள அறிக்கை, சுற்றுச் சூழல் அறிக்கை என்பன பெறப்பட்டு நெல்சிப் திட்டத்தின் அனுமதியுடனேயே வேலை நடைமுறைப்படுத்தப்பட்டது.
இக் கடைகள் உரிய முறையில் வழங்கப்பட்டபோதும் மீள்குடியேற்றம் முழுமைபெறாமை, மின்சார வசதியின்மை போன்ற காரணங்களினால் கடைகளைப் பெற்றுக் கொண்டவர்கள் ஒப்பந்தம் கைச்சாத்திடுவதில் தயக்கம்காட்டியதுடன் கடைகள் நடாத்தப்படாமல்; பாவனையற்றுள்ளன.
தற்போது 01.09.2017 ம் திகதியிலிருந்து இயங்குவதற்கான நடவடிக்கை பிரதேச சபையினால் மேற்கொள்ளப்பட்டுவருகின்றது.
சிலாவத்துறை கடைத்தொகுதி
இவ் வேலைத் திட்டமானது மக்களினால் தெரிவு செய்யப்பட்ட உறுப்பிர்களைக் கொண்ட முசலிப் பிரதேச சபையின் சபைத் தீர்மானத்தின் பிரகாரமும், பிரதேச அபிவிருத்திக்குழுவின் அனுமதியுடனும், மக்களின் விருப்பத்திற்கேற்றவாறும் தெரிவுசெய்யப்பட்டது.
இதற்கான சாத்தியவள அறிக்கை, சுற்றுச் சூழல் அறிக்கை என்பன பெறப்பட்டு நெல்சிப் திட்டத்தின் அனுமதியுடனேயே வேலை நடைமுறைப்படுத்தப்பட்டது.
இக் கடைத் தொகுதிகள் முற்பணம் பெறப்பட்டு வழங்கப்பட்டன. போக்குவரத்துச் சீரின்மை, பாதையில் மழைகாலத்தில் நீர்தேங்கி நிற்றல், மின்சார வசதியின்மை போன்ற காரணங்களினால் கடைகள் இயங்காமலுள்ளன. தற்போது கடைகளுக்கான வாடகை விலைமதிப்பீட்டுத் திணைக்களத்தினால் நிர்ணயம் செய்யப்பட்டு 01.09.2017 ம் திகதிமுதல் இயங்குவதற்கான நடவடிக்கை பிரதேச சபையினால் மேற்கொள்ளப்படப்பட்டுள்ளது.
மன்னார் நகர சபை பஸ்நிலைய கடைத் தொகுதி
இவ்வேலைத் திட்டம் மன்னார் உப்புக்குள மக்களினால் முன்னுரிமைப்படுத்தப்பட்டு மக்களினால் தெரிவுசெய்யப்பட்ட உறுப்பினர்களைக் கொண்ட நகர சபையின் சபைத் தீர்மானத்தின்படியும் வேலை தெரிவுசெய்யப்பட்டு அனுமதிக்கப்பட்டது.
புதிதாக போக்குவரத்துச் சபை, தனியார் பஸ்நிலையங்கள் அமைப்பதற்காக அங்கிருந்த கடைகள் உடைக்கப்பட்டன. அதற்கு மாற்றீடாக இக்கடைகள் வழங்கப்படுவதில் தாமதம் ஏற்பட்டது. தற்போது உரிய அனுமதிகள் பெறப்பட்டு கடைகள் 01.09.2017 ம் திகதிமுதல் இயங்கவுள்ளன.
எருக்கலம்பிட்டி கொல்களம்
இக் கொல்களம் 08.03.2014 ம் திகதிமுதல் இயங்கிவந்தது. பின்னர் அப்பகுதியில் மக்கள் கூடுதலாக குடியேறியமையினால் குடியிருப்பில் சுற்றாடல் அசுத்தமாகியமை, கட்டாக்காலி நாய்களின் தொல்லை போன்ற காரணங்களினால் பொதுச் சுகாதாரப் பரிசோதகரின் அறிவுறுத்தலுக்கமைவாக தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.
பெரிய உலுக்குளம் சந்தை
மேற்படி சந்தை வவுனியா தெற்கு சிங்கள பிரதேச சபையின் சபை உறுப்பினர்களின் தீர்மானத்தின் மூலமும். மக்கள் பங்களிப்புடனான அபிவிருத்தித் திட்டத்தில் முன்னுரிமைப்படுத்தப்பட்டும் இனங் காணப்பட்டு உரிய அனுமதிகளுடன் நிர்மாணிக்கப்பட்டது.
சந்தை மக்கள் பாவனைக்கு விடப்பட்டு ஆரம்பத்தில் சிறப்பாக இயங்கியது. பின்னர் பிரதேச சபையின் உறுப்பினர்களின் தலையீடு போன்ற காரணத்தினால் கேள்வி மனுவினை யாரும் பெற்றுக் கொள்ள முன்வரவில்லை. தற்போது இதனை இயங்கவைக்க பிரதேச சபையினால் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.
மகாகச்சக்கொடிய சந்தை,
மேற்படி சந்தை வவுனியா தெற்கு சிங்கள பிரதேச சபையின் சபை உறுப்பினர்களின் தீர்மானத்தின் மூலமும், மக்கள் பங்களிப்புடனான அபிவிருத்தித் திட்டத்தில் முன்னுரிமைப்படுத்தப்பட்டும் இனங் காணப்பட்டு நெல்சிப் திட்டத்தின் Pயுவு குழு, திட்டத்தின் உரிய அனுமதிகளுடன் நிர்மாணிக்கப்பட்டது.
சந்தை மக்கள் பாவனைக்காக விடப்பட்டிருந்தும் ஆரம்பத்தில் சிறப்பாக இயங்கினாலும் பின்னர் இயங்கவில்லை. தற்போது சனிக்கிழமைகளில் பகுதியளவில் நடைபெற்றுவருகின்றதுடன் இதனை சிறப்பாக இயங்கவைக்க பிரதேச சபையினால் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
ஈரற்பெரியகுளம் சந்தை
இத் திட்டமும் மக்கள் பங்களிப்புடனான அபிவிருத்தித் திட்டத்தில் முன்னுரிமைப்படுத்தப்பட்டதுடன், வவுனியா தெற்கு சிங்களப் பிரதேச சபையின் உறுப்பினர்களின் சபைத் தீர்மானம் மற்றும் Pயுவு குழுவின் அனுமதியுடனும் தெரிவுசெய்யப்பட்டது.
இச் சந்தையும் மக்கள் பாவனைக்கு உட்படுத்தப்பட்டு ஆரம்பகாலத்தில் சபை உறுப்பினர்களின் தலையீடுகள் காரணமாக சந்தைச் செயற்பாடுகள் குழப்பமடைந்தன. அதன் பின்னர் பலமுறை பிரதேச சபையினால் கேள்வி கோரல் செய்யப்பட்டபோதும் மனுவினை யாரும் பெற முன்வரவில்லை. தற்போது ஒருவரால் வியாபார நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக பிரதேச சபையிடம் முற்பணம் செலுத்தப்பட்டுள்ளது.
ஈரற்பெரியகுளம் கலாச்சார மண்டபம்
இக்கட்டடம் பகுதியளவில் இயங்கிவருவதுடன் இதன் சுற்றுப்புறத்தில் மட்டமாக்கலுடன் கூடிய அழகுபடுத்தல் வேலைகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. எதிர்வரும் செப்ரெம்பர் மாதத்திலிருந்து முழுமையாக இயங்குவதற்கான நடவடிக்கைகள் பிரதேச சபையினால் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.
தோணிக்கல் விளையாட்டரங்கு
இவ்விளையாட்டரங்கில் விளையாட்டுப் போட்டிகள் மற்றும் பொதுநிகழ்வுகள் தற்போது நடைபெற்றுவருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆகவே மன்னார் மாவட்டத்திலும் வவுனியா மாவட்டத்திலும் இருக்கும் கட்டடங்கள் தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றன. அவற்றைப் பற்றிக் கேள்வி எழுப்பிய எதிர்க்கட்சித் தலைவர் அவர்களுக்கு எமது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
கௌரவ எதிர்க்கட்சித் தலைவரால் எழுப்பப்பட்ட இன்னுஞ் சில வினாக்களுக்கான பதில் தரவேண்டியுள்ளன. அவற்றின் விபரங்களைச் சேகரிக்கக் காலம் போதவில்லை. இம் மாதம் 31ந் திகதி நியமிக்கப்படும் கூட்டத்தில் அவற்றிற்கான பதில்களைத் தருவேன். மேலும் இன்று எழுப்பப்பட்ட அல்லது எழுப்பப்படப் போகும் சில கரிசனைகள் பற்றியும் அன்று நான் பதில் தருவேன்.
அடுத்து கௌரவ சிவாஜிலிங்கம் அவர்கள் எழுப்பிய வினாவை வினா 12 ஆகக் கணித்து அவர் கோரிக்கையை இப்பொழுது எடுத்துக் கொள்கின்றேன்.
வினா 12
கௌரவ சிவாஜிலிங்கம் அவர்களினால் முன் வைக்கப்பட்ட கோரிக்கை பின்வருமாறு
2013 தொடக்கம் 2016 ஆம் ஆண்டு வரை வடமாகாண சபைக்கு வழங்கப்பட்ட சகலநிதி ஒதுக்கீடு, கிடைக்கப் பெற்ற கட்டுநிதி மற்றும் செலவீனம் என்பவற்றின் தொகுப்பு அவரால் கோரப்பட்டுள்ளன. அந்த விபரங்கள் பின்வருமாறு –
வடக்கு மாகாண சபைக்கு 2013ஆம் ஆண்டு தொடக்கம் 2016ஆம் ஆண்டு வரை கிடைக்கப்பெற்ற ஒதுக்கீடு, கட்டுநிதி விபரங்கள் மற்றும் வடக்கு மாகாண சபையால் மேற்கொள்ளப்பட்ட செலவின விபரங்கள் பின்வருமாறு.
மீண்டுவரும் செலவினங்கள்
ஆண்டு
ஒதுக்கீடு
(ரூபா. மில்லியனில்)
கிடைக்கப்பெற்ற கட்டுநிதி
(ரூபா. மில்லியனில்)
மேற்கொள்ளப்பட்ட செலவினம்
(ரூபா. மில்லியனில்)
2013
12,883.30
12,205.62
12,001.83
2014
14,580.00
14,397.79
13,924.89
2015
18,590.93
18,360.20
18,372.94
2016
19,366.38
19,168.05
19,312.52
65,420.61
64,131.66
63,612.18
மூலதனச் செலவினங்கள் -மாகாண குறித்தொதுக்கப்பட்ட அபிவிருத்திக் கொடை
ஆண்டு
ஒதுக்கீடு
(ரூபா. மில்லியனில்)
கிடைக்கப்பெற்ற கட்டுநிதி
(ரூபா. மில்லியனில்)
மேற்கொள்ளப்பட்ட செலவினம்
(ரூபா. மில்லியனில்)
2013
1030.00
618.00
850.58
2014
1035.00
908.00
1023.78
2015
1440.00
1440.00
1023.78
2016
3283.30
1800.00
2311.04
6,788.30
4,766.00
5,209.18
மூலதனச் செலவினங்கள் -பிரமாண அடிப்படையிலான கொடை
ஆண்டு
ஒதுக்கீடு
(ரூபா. மில்லியனில்)
கிடைக்கப்பெற்ற கட்டுநிதி
(ரூபா. மில்லியனில்)
மேற்கொள்ளப்பட்ட செலவினம்
(ரூபா. மில்லியனில்)
2013
195.00
195.00
194.05
2014
393.00
280.00
391.43
2015
400.00
250.00
379.23
2016
475.00
437.00
460.58
1,463.00
1,162.00
1,425.29
இதில் கவனிக்க வேண்டியது 2016ம் ஆண்டில் அரச பணம் கிடைக்காததால் முற்பணமாக மாகாண நிதியில் இருந்து ஒரு தொகை வழங்கப்பட்டு பொதுத் திறை சேரியினால் 2017ம் ஆண்டில் குறித்த நிதி தரப்பட்டது.
மூலதனச் செலவினங்கள் -சுகாதாரத்துறை அபிவிருத்திக் கருத்திட்டம்.
ஆண்டு
ஒதுக்கீடு
(ரூபா. மில்லியனில்)
கிடைக்கப்பெற்ற கட்டுநிதி
(ரூபா. மில்லியனில்)
மேற்கொள்ளப்பட்ட செலவினம்
(ரூபா. மில்லியனில்)
2013
100.00
2014
180.00
180.00
180.00
2015
355.00
355.00
354.75
2016
365.00
365.00
365.00
1,000.00
900.00
899.75
மூலதனச் செலவினங்கள் -பாடசாலை கல்வியை ஒரு அறிவு மையத்தின் அடிப்படையாக மாற்றும் செயற்திட்டம் (வுளுநுP)
ஆண்டு
ஒதுக்கீடு
(ரூபா. மில்லியனில்)
கிடைக்கப்பெற்ற கட்டுநிதி
(ரூபா. மில்லியனில்)
மேற்கொள்ளப்பட்ட செலவினம்
(ரூபா. மில்லியனில்)
2013
310.00
310.00
310.00
2014
290.00
286.47
286.47
2015
387.66
335.61
335.61
2016
465.00
289.00
289.00
1,452.66
1,221.08
1,221.08
மூலதனச் செலவினங்கள் -யுனிசெப்
ஆண்டு
ஒதுக்கீடு
(ரூபா. மில்லியனில்)
கிடைக்கப்பெற்ற கட்டுநிதி
(ரூபா. மில்லியனில்)
மேற்கொள்ளப்பட்ட செலவினம்
(ரூபா. மில்லியனில்)
2013
188.06
188.05
188.05
2014
71.78
50.98
50.92
2015
26.03
16.43
15.75
2016
11.35
7.81
7.81
297.22
263.27
262.53
மூலதனச் செலவினங்கள் -1000 பாடசாலைகள்
ஆண்டு
ஒதுக்கீடு
(ரூபா. மில்லியனில்)
கிடைக்கப்பெற்ற கட்டுநிதி
(ரூபா. மில்லியனில்)
மேற்கொள்ளப்பட்ட செலவினம்
(ரூபா. மில்லியனில்)
2013
35.00
28.00
28.00
2014
35.00
35.00
24.79
2015
–
–
–
2016
–
–
–
70.00
63.00
52.79
மூலதனச் செலவினங்கள் -கட்டட நிர்மாணம் கைதடி
ஆண்டு
ஒதுக்கீடு
(ரூபா. மில்லியனில்)
கிடைக்கப்பெற்ற கட்டுநிதி
(ரூபா. மில்லியனில்)
மேற்கொள்ளப்பட்ட செலவினம்
(ரூபா. மில்லியனில்)
2013
–
–
–
2014
–
–
–
2015
150.00
150.00
27.32
2016
150.00
74.00
92.61
300.00
224.00
119.93
மூலதனச் செலவினங்கள் -கூட்டிணைந்த சமூகப் பொறுப்பு
ஆண்டு
ஒதுக்கீடு
(ரூபா. மில்லியனில்)
கிடைக்கப்பெற்ற கட்டுநிதி
(ரூபா. மில்லியனில்)
மேற்கொள்ளப்பட்ட செலவினம்
(ரூபா. மில்லியனில்)
2013
–
–
–
2014
–
–
–
2015
–
–
–
2016
30.00
30.00
29.80
30.00
30.00
29.80
மூலதனச் செலவினங்கள் -அருகில் உள்ள பாடசாலை சிறந்த பாடசாலை
ஆண்டு
ஒதுக்கீடு
(ரூபா. மில்லியனில்)
கிடைக்கப்பெற்ற கட்டுநிதி
(ரூபா. மில்லியனில்)
மேற்கொள்ளப்பட்ட செலவினம்
(ரூபா. மில்லியனில்)
2013
–
–
–
2014
–
–
–
2015
–
–
–
2016
1,450.00
685.35
685.35
1,450.00
685.35
685.35
இதில் 2014ஆம் நிதியாண்டிற்கு மூலதனச் செலவினங்களை மேற்கொள்வதற்காக வழங்கப்பட்ட ஒதுக்கீட்டில் ரூபா 404.35 மில்லியனுக்கான செலவினமானது மாகாண நிதி விதி 162இற்கமைவாகவும் இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் நிதிப்பிரமாணம் 215 இற்கமைவாகவும் பிரதம செயலாளரின் அனுமதியுடன் பொதுவைப்புக் கணக்கிற்கு மாற்றப்பட்டது.
இவ் வேலைத்திட்டங்கள் யாவும் 31.08.2015ஆம் திகதிய செலவின அறிக்கையின்படி முற்றுமுழுதாக நிறைவேற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
மூலதன வேலைத்திட்டத்திற்கான CBG, PSDG, Construction of Kaithady Building (CKB) என்பவற்றிற்கு ஆண்டு இறுதியில் நிறைவேற்றப்பட்ட வேலைத்திட்டங்களுக்கான கட்டுநிதி (காசு) போதியளவு கிடைக்கப்பெறாத பொழுது கொடுப்பனவு செய்ய வேண்டிய உறுதிச் சீட்டுக்களுக்கு வருட இறுதியில் தீர்ப்பனவு செய்வதற்காக பொதுவைப்புக் கணக்கில் தற்காலிகமாக (ஏனைய திணைக்களங்களுக்கு மீளச் செலுத்த வேண்டிய மாகாணத் திறைசேரியின் பொறுப்பிலிருந்த காசு) வைப்புத் தொகையிலிருந்து வழங்கப்பட்டது. இத் தொகை தொடர்ந்து வரும் வருடத்தில் தீர்வு செய்யப்படாத கொடுப்பனவு உறுதிச்சிட்டைகளுக்கான கட்டுநிதி என்ற அடிப்படையில் பொதுத்திறைசேரியிடமிருந்து கிடைக்கப் பெற்று தீர்வு செய்யப்பட்டது.
எனவே கிடைக்கப்பெற்ற கட்டுநிதிக்கும் செலவு செய்யப்பட்ட தொகைக்கும் இடையிலான வேறுபாடு இதனாலேயே ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
நாங்கள் வெறுமனே தருவதை மட்டும் கொடுக்கும் தபால்க் கந்தோராக இருக்க முடியாது. கையிருப்பில் பணம் வைத்திருக்க வேண்டும். நிதி முகாமைத்துவம் முற்றிலும் அவசியம்.
இது வரை 12 கேள்விகளுக்குப் பதில் தந்துவிட்டேன். மேலதிகமாகப் பதில் அளிக்க வேண்டிய கேள்விகள்
13 – 1. இரணைமடுத்திட்டம் தொடர்பாக.
14 – 2. வெளிநாட்டு ஒப்பந்தங்கள் கருத்தாவணம் சம்பந்தமாக.
15 – 3. ஒட்டிசுட்டானில் தொழில்ப்பயிற்சி நிலையம்.
16 – 4. நோர்வே CEPA பற்றியது.
17 – 5. வல்வெட்டித்துறை மாநகரசபையின் அறிக்கைகள் பற்றியது.
13 தொடக்கம் 16 வரையிலானவை கௌரவ எதிர்கட்சித் தலைவரால் எழுப்பப்பட்டவை. 17வது கோரிக்கை கௌரவ சிவாஜிலிங்கம் அவர்களால் முன்வைக்கப்பட்டது.
இவை யாவுக்கும் இம் மாதம் 31ந் திகதிய தொடர் கூட்டத்தில் நான் பதில் அளிப்பேன் என தெரிவித்தார்.
Spread the love