இலங்கை பிரதான செய்திகள்

வட்டுக்கோட்டைக்கு வழி கேட்டால் கொட்டைப்பாக்குக்கு விலை சொல்கிறார் முதலமைச்சர். – சி.தவராசா

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
வட மாகாண சபையின் செயல் திறனற்ற செயற்பாடுகள் தொடர்பாக இன்று முதலமைச்சரினால் அவையில் கூறப்பட்ட பதில்கள் என்னால் முன்வைக்கப்பட்ட வினைத்திறனற்ற செயற்பாடுகளைத் திசை திருப்பும் வகையில் அமைந்திருக்கின்றதே அன்றி என்னால் முன்வைக்கப்பட்ட விடயங்களிற்கான ஆக்க பூர்வமான பதில்களாக அமைந்திருக்கவில்லை. என வடமாகாண சபை எதிர்க்கட்சி தலைவர் சி.தவராசா குறிப்பிட்டு உள்ளார்.
எதிர்க்கட்சி தலைவரினால் ஊடகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்ட அறிக்கையிலையே அவ்வாறு குறிப்பிடப்பட்டு உள்ளது.
குறித்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டு உள்ளதாவது ,
முதமைச்சர் மீதான குற்றச்சாட்டுகளை மறைமுகமாக ஏற்றுக் கொண்டுள்ளார்
வட்டுக்கோட்டைக்குப் போகும் வழி எதுவென்றால் துட்டுக்கு இரண்டு கொட்டைப்பாக்கு என்பது போல் அமைந்துள்ளது முதலமைச்சரின் இன்றைய வடமாகண சபை அமர்வின் போதான உரை.
கடந்த 21.07.2017 ம் திகதிய சபை அமர்வில் வட மாகாண சபை மூன்று வருடங்கள் ஒன்பது மாதங்களில் சாதித்தது என்ன என்ற மீளாய்வு வாதத்தினை ஆரம்பித்து வைத்து என்னால் ஆதாரங்களுடன் எடுத்தியம்பிய வட மாகாண சபையின் செயல் திறனற்ற செயற்பாடுகள் தொடர்பாக இன்று முதலமைச்சரினால் அவையில் கூறப்பட்ட பதில்கள் என்னால் முன்வைக்கப்பட்ட வினைத்திறனற்ற செயற்பாடுகளைத் திசை திருப்பும் வகையில் அமைந்திருக்கின்றதே அன்றி என்னால் முன்வைக்கப்பட்ட விடயங்களிற்கான ஆக்க பூர்வமான பதில்களாக அமைந்திருக்கவில்லை.
உதாரணத்திற்குப் பளையில் அமைக்கப்பட்ட மின் காற்றாலை சம்பந்தமான ஒப்பந்தத்தில் சபையின் செயலாளரைக் கையொப்பமிட வைத்தது ஓர் மிகத் தவறான செயல் என என்னால்  சுட்டிக்காட்டப்பட்டதோடு சபையின் செயலாளரிற்கும், நிறைவேற்று அதிகார செயற்பாட்டிற்கும் என்ன தொடர்பு இருக்கின்றதென்பதனையும் வினவியிருந்தேன்.
அத்துடன் அதன் முதல் வருடத்தில் அம் மின் காற்றாலையை நிறுவிய நிறுவனங்களிடமிருந்து கொடையாக நிதியைப் பெற்று வடக்கு மாகாண சபையின் வரவிற்குட்படுத்தப்பட்டு மாகாண சபையின் பாதீட்டினூடாகவே செலவு செய்யப்பட்டிருக்க வேண்டும் என்பதனை எடுத்துக் காட்டியிருந்தேன். அதனை விடுத்து அவர்களிடமிருந்து நேரடியாக வாகனங்களைப் பெற்றது தவறான செயல் என்பதனையும் சுட்டிக்காட்டியிருந்தேன். இதற்கான பதிலளிக்காமல் 2015, 2016ஆம் ஆண்டுகளில் அவர்களிடமிருந்து கொடையாகப் பெற்ற நிதியின் கணக்கினையே சபையில் சமர்ப்பித்திருந்தார் முதலமைச்சர்.
அதே போல் ஐக்கிய நாடுகள் சபையின் சமாதானத்தைக் கட்டியெழுப்பும் நிதித்தேவைகள் மதிப்பீடு (Peace Building Fund Joint Needs Assessment) தொடர்பாக முதலமைச்சரினால் ஓர் ஆலோசகரின் பெயர் குறிப்பிட்டு, ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிடப் பிரதிநிதிக்குச் சிபார்சு செய்ததன் விளைவாகத்தான் ஐக்கிய நாடுகள் சபையின் பிரதிநிதிகளிற்கும், மாகாண சபைக்கும் இடையே அன்று விரிசல் ஏற்பட்டதென்பதனை ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிடப்பிரதிநிதியினால் வட மாகாண சபை உறுப்பினர்களிற்கு 16.10.2015 ஆம் திகதியிடப்பட்டு எழுதப்பட்ட கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதென்பதனை ஆதாரபூர்வமாகக் காட்டியிருந்தேன்,
அதற்குப் பதிலளிப்பதனைத் தவிர்த்து முதலமைச்சர் சமாதானத்தைக் கட்டியெழுப்பும் நிதி என்ன என்பது தொடர்பான நீண்ட ஓர் விளக்கவுரையினை வழங்கியிருந்தார்.
சுண்ணாகம் நிலத்தடி நீரில் தற்போது ஒயில் கலப்பு இல்லை என ஐக்கிய இராச்சிய உயர் ஸ்தானிகரிற்கு முதலமைச்சர் கூறியிருந்தது தொடர்பாக நான் மாகாண சபையில் கேள்வியெழுப்பியிருந்த போது, அவுஸ்திரேலியாவில் வசிக்கும் புலம்பெயர் தமிழர்களின் ஆய்வு அறிக்கையினை வைத்தே தான் அவ்வாறு கூறியதாகப் பதிலளித்திருந்தார்.
அவ் ஆய்வு அறிக்கையில் அவ்வாறு குறிப்பிடப்பட்டிருக்கவில்லை என்பதனை அவ் அறிக்கையினை ஆதாரமாகக் காட்டி முதலமைச்சர் தவறாக வழிநடத்தப்படுகின்றார் எனச் சுட்டிக்காட்டியிருந்தேன். இக் கூற்றிற்குப் பதிலளிப்பதனைத் தவிர்த்து சுண்ணாகம் நிலத்தடி நீரில் ஒயில் மாசு இருக்கின்றதா என்பது தொடர்பான நீண்டதொரு உரையை முதலமைச்சர் ஆற்றியிருக்கின்றார்.
இவ்வாறாக முதலமைச்சரின் அமைச்சின் வினைத்திறனற்ற செயற்பாடுகள் தொடர்பாக மட்டும் ஏறத்தாழ 20 விடயங்களை நான் எனது 21.07.2017ம் திகதிய உரையில் குறிப்பிட்டிருந்தேன். அவ் இருபது விடயங்களில் பதினொரு விடயங்களிற்கு மட்டுமே இன்று தனது பதிலைத் தெரிவித்த முதலமைச்சர் இரு விடயங்களில் நான் குறிப்பிட்டது சரியென்பதனை ஏற்றுக் கொண்டதோடு ஏனைய விடயங்கள் தொடர்பாக நீண்ட விளக்கவுரையினை ஆற்றியிருந்தும், என்னால் வினைத்திறனற்றவையெனச் சுட்டிக்காட்டப்பட்ட அவ் விடயங்கள் தொடர்பான செயற்பாடுகளிற்கு நேரடியாகப் பதிலளிக்கவில்லை. இது மறைமுகமாக முதலமைச்சர் வினைத்திறனற்ற செயற்பாடுகள் தொடர்பான எனது குற்றச்சாட்டுகளை ஏற்றுக் கொள்கிறார் என்பதனைத் தெளிவாக்குகின்றது.
முதலமைச்சர் தனது உரையில் என்னால் சுட்டிக்காட்டப்பட்ட வினைத்திறனற்ற செயற்பாடுகள், ஊடகங்களின் விளம்பரத்திற்காகக் கூறப்பட்ட விடயங்களென்றும் அத்துடன் குற்றஞ்சாட்டப்பட்ட விடயங்களிற்குப் புறம்பான அரசியல் விடயங்களைக் கூறி முழு விவாதத்தினையுமே திசை திருப்ப முயன்ற வேளையிலே எனது கடும் எதிர்ப்பின் விளைவாக அது கைவிடப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது. என மேலும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

Spread the love

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Share via
Copy link