குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு
இனங்களுக்கு இடையில் நம்பிக்கையற்ற தன்மை நீடித்து வருவதாக ஐக்கிய நாடுகள் அமைப்பின் சிறுபான்மை விவகார விசேடப் பிரதிநிதி ரீடா இசாக் நாடியா தெரிவித்துள்ளார். இலங்கைக்கு மேற்கொண்டிருந்த விஜயத்தை முடித்துக்கொண்ட போது ஊடகவியலாளர்களை சந்தித்து உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இன சமூகங்களுக்கு இடையில் நம்பிக்கைத்தன்மை தொடர்பில் ஓர் இடைவெளி காணப்படுவதாகவும் எனினும் இலங்கையில் பாரியளவிலான மாற்றங்கள் ஏற்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.
மேலும் யுத்தம் காரணமாக ஏற்பட்ட உள ரீதியான பாதிப்புக்கள் உள்ளிட்டனவற்றை உதாசீனம் செய்துவிட முடியாது என குறிப்பிட்டுள்ள அவர் இனங்களுக்கு இடையிலான முரண்பாடு, ஏற்றத்தாழ்வு ஒடுக்குமுறைகள் பெரும் பாதிப்பினை ஏற்படுத்தியுள்ளதாகத் தெரிவித்துள்ளார். உண்மையைக் கண்டறிதல், நல்லிணக்கத்தை ஏற்படுத்தல் காயங்களை ஆற்றுதல் போன்ற ஒரே இரவில் மேற்கொள்ள முடியாது எனவும் எவ்வாறெனினும், 2015ம் ஆண்டில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்திலான உத்வேகம் கைவிடப்படக் கூடாது எனவும், நல்லிணக்கத்தை ஏற்படுத்த முயற்சிகள் துரித கதியில் மேற்கொள்ளப்பட வேண்டுமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பெண்கள் உள்ளிட்ட தரப்பினருக்கு உளவியல் ரீதியான ஆலோசனைகள் வழங்கப்பட வேண்டியது மிகவும் அவசியமானது என சுட்டிக்காட்டியுள்ள அவர் நல்லிணக்கத்தை ஏற்படுத்தவும் குற்றச் செயல்களுக்கு பொறுப்பு கூறுதல் தொடர்பிலும் அரசாங்கத்தின் மெய்யான அவசியப்பாடு வெளிப்படுத்தப்பட வேண்டியது அவசியமானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். சிறுபான்மை சமூகத்தினர் தாம் ஒடுக்குமுறைக்கு உட்படுத்தப்படுவதாக உணராத வகையில் நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டியது அவசியமானது என அவர் குறிப்பிட்டுள்ளார்.