குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
கண்டி பல்லேகலே மைதானத்தில் நேற்று நடைபெற்ற இந்திய அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியிலும் இலங்கை அணி தோல்வியைத் தழுவியுள்ளது. நாணய சுழற்சியில் வெற்றியீட்டிய இந்திய அணி, இலங்கையை துடுப்பெடுத்தாடுமாறு பணித்தது. இதன்படி களமிறங்கிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் எட்டு விக்கட்டுகளை இழந்து 236 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.
இதில் மிலிந்த சிறிவர்தன 58 ஓட்டங்களையும் சாமர கபுகெதர 40 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர். பந்து வீச்சில் பும்ரா நான்கு விக்கட்டுகளை வீழ்த்தினார். இந்திய அணி இன்னிங்ஸை ஆரம்பிக்க முன்னதாக மழை குறுக்கீடு செய்த காரணத்தினால் , இந்தியாவின் இன்னிங்ஸ் 47 ஓவர்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டது. டக்வர்த் என்ட் லுயிஸ் முறையில் 231 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்திய அணி 44.2 ஓவர்களில் இந்திய அணி வெற்றி இலக்கை எட்டியது. ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களான சிக்கர் தவான் 49 ஓட்டங்களையும், ரோஹித் சர்மா 54 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டு முதல் விக்கட்டுக்காக 109 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டனர்.
எனினும் மத்திய வரிசை வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழக்க இலங்கை வலுவான நிலையை அடைந்திருந்தது. இலங்கை வீரர் அகில தனன்ஜய ஆறு விக்கட்டுகளை வீழ்த்தியிருந்தார்.
எனினும், எட்டாவது விக்கட்டுக்காக இணைந்து கொண்ட தோனி புவனேஸ்வர் குமார் ஜோடி நிதானமாக துடுப்பெடுத்தாடி இலங்கையின் வெற்றிக் கனவை தகர்த்தது.
புவனேஸ்வர் குமார் ஆட்டமிழக்காது 53 ஓட்டங்களையும், மஹேந்திர சிங் தோனி ஆட்டமிழக்காது 45 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.