குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
பிரித்தானிய பிரதமர் தெரேசா மேயின் அரசியல் எதிர்காலம் குறித்து கொன்சேவேர்டிவ் கட்சியின் சிரேஸ்ட தலைவர்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். பிரதமர் தெரேசா மே சமீபத்தில் வழங்கிய பல பேட்டிகளில் அடுத்ததேர்தலிலும் கொன்சவேர்ட்டிவ் கட்சிக்கு தலைமை தாங் கவிரும்புவதாக தெரிவித்திருந்தார்.
இது தொடர்பில் முன்னாள் கல்வியமைச்சர் நிக்கிமோர்கன், தெரேசா மே இன்னொரு தேர்தலில் போட்டியிடுவது சாத்தியமற்ற விடயம் என தெரிவித்துள்ளார். ஐரோப்பா குறித்த விவகாரத்தினால் கட்சிக்குள் உருவாகியுள்ள மாற்றுக்கருத்துக்கள் முரண்பாடுகளிற்கு தீர்வை காண்பதற்கு தெரேசா மே முயலவில்லை எனவும் அடுத்த தேர்தலில் எங்களிற்கு தெரேசா மே தலைமை தாங்குவது என்பது சாத்தியமற்ற விடயம் என கருதுகிறேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அதேவேளை ஜோன் மேஜர் அரசாங்கத்தில் பிரதி பிரதமராக பதவி வகித்த ஹெசெல்டைன் பிரபு கடந்த மே மாத தேர்தல் போன்று இன்னொருமுறை தொழிற்கட்சி தலைவருடன் போட்டியிடுவதற்கு கொன்சவேர்டிவ் கட்சி விரும்பாது என குறிப்பிட்டுள்ளார்.
தெரேசா மேயிற்கு நீண்ட காலம் என்றவொன்றே இல்லை என நான் கருதுகிறேன் என அவர் தெரிவித்துள்ளார். அத்துடன் பிரித்தானியா அடுத்த இரண்டு வருடத்திற்குள் இன்னொரு பொதுத்தேர்தலை சந்திக்கும் என அவர் எதிர்வுகூறியுள்ளார்.