வடக்கு முதலமைச்சர் தமிழ் அரசியல் கைதிகளை சந்தித்தமை குறித்து மகிந்தவின் கூற்று…
முன்னாள் இராணுவத் தளபதி ஜகத் ஜயசூரியவைப் பற்றி அமைச்சர் சரத் பொன்சேகா பேசியிருக்கக் கூடாது. இவ்வாறான காட்டிக்கொடுப்புகள் மூலம் சமூகம், நாடு மற்றும் யுத்தத்தின் முடிவுகள் குறித்து குழப்பமான நிலை ஏற்படும் என முன்னாள் ஜனாதிபதியும் நாடாளுமன்ற உறுப்பினருமான மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
அனுராதபுரம், ஜயஸ்ரீ மகா விகாரைக்கு இன்று (10) விஜயம் மேற்கொண்ட அவர், ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கையில்,
“முன்னாள் இராணுவத் தளபதியாக, சரத் பொன்சேகா கருத்து தெரிவிப்பதால் அதில் உண்மை இருக்கலாம் என வடக்கு முதலமைச்சர் சி.வி.விக்னேஷ்வரன் கூறியிருக்கிறார். அவருக்கும் சந்தேகம் எழுந்துள்ளது. இராணுவத் தளபதியொருவர் இவ்வாறான கருத்தை வெளியிட்டிருக்கக் கூடாது என்றே நான் கருதுகிறேன்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
வட மாகாண முதலமைச்சர், தமிழ் அரசியல் கைதிகளை சந்திப்பது தொடர்பில் ஊடகவியலாளர்கள் இதன்போது கேள்வி எழுப்பியுள்ளனர். அதற்குப் பதிலளித்த மகிந்த ராஜபக்ஷ, “அது அவர்களின் உரிமை. அந்த மக்களை அவர்கள் பிரதிநிதித்துவப்படுத்துகிறார்கள். எம்மவர்களுக்கு அதனை விளங்கிக்கொள்ள முடியாமல் போய்விட்டது” என்றார்.