குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
கிளிநொச்சி மாவட்டத்தில் திட்டமிடப்படாத முறையில் காடழிப்பு மேற்கொள்ளப்பட்டு கிரவல் மண் அகழ்வு இடம் பெற்ற பகுதிகளில் மர நடுகை மேற்கொள்ளுமாறு பொது அமைப்புகள் வேண்டுகோள் விடுத்துள்ளன.
2009 ஆம் ஆண்டு மக்கள் இடம்பெயர்ந்து செட்டிகுளம் போன்ற நலன்புரி முகாம்களில் இருந்த காலங்களில் இராணுவ முகாம்கள் அமைப்பதற்கும் வீதிகளைப் புனரமைப்பதற்கும் பெருமளவு காடுகள் அழிக்கப்பட்டு கிரவல் மண் அகழ்வுகள் நடைபெற்றுள்ளன. இப்பகுதிகளில் காடுகள் அழிக்கப்பட்டதன் காரணமாக மரங்கள் அழிந்தும் அழியும் நிலையிலும், காணப்படுகின்றது.
குறிப்பாக கோணாவில் கிராம அலுவலர் பிரிவில் யூனியங்குளம் காட்டுப்பகுதி, இராமநாதபுரம் கிராமத்தில் இருந்து அம்பகாமம் செல்லும் வீதியிலும், முறிகண்டி அக்கராயன் வீதியிலும், கொக்காவில் மற்றும் புத்துவெட்டுவான் போன்ற பகுதிகளில் காடுகள் அழிக்கப்பட்டு பெருமளவு கிரவல் மண் அகழ்வு இடம் பெற்ற பகுதிகளில் மர மீள் நடுகை இடம் பெறவில்லை.
இவற்றில் பல பொது மக்களுக்குத் தெரியாமல் காடுகளுக்கு நடுவே இடம் பெற்றிருக்கின்றன. எனவே அபிவருத்திகளுக்காக திட்டமிடப்படாத கிரவல் மற்றும் மணல் அகழ்வினால் இப்பிரதேசங்களில் பெருமளவு பெறுமதிமிக்க மரங்கள், அழிந்துள்ளதுடன் அழியும்நிலையிலும் காணப்படுகிறது.
எனவே கிளிநொச்சி மாவட்டச் செயலகம் உரிய திணைக்களத்துடன் இணைந்து இவ்வாறான இடங்களில் மீள் மரநடுகை செயற்திட்டத்தை மேற்கொள்ள வேண்டும் என பொது அமைப்புகள் சில வேண்டுகோள் விடுத்துள்ளன.