குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
முல்லைத்தீவு துணுக்காய் தென்னியங்குளம் கிராமத்தில் சட்டவிரோத மணல் அகழ்வுகள் பெருமளவில் இடம்பெற்று வருவதாக கிராம மக்களினால் தெரிவிக்கப்படுகின்றது.
இக்கிராமத்தில் இருந்து பெருமளவு மரங்கள் வெட்டி எடுத்து வெளியிடங்களுக்குக் கொண்டு செல்லப்பட்ட நிலையில் தற்போது இக்கிராமத்தின் ஆற்றுப்படுகைகளில் பெருமளவு மணல் அகழ்வு இடம்பெற்று வருவதாகவும் இது தொடர்பாக துணுக்காய் பிரதேச செயலாளரிடம் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் இக்கிராமத்தில் உழவு இயந்திரங்கள் வைத்திருப்பவர்கள் தங்களுடைய உழவு இயந்திரங்களுக்கான கடன்களை செலுத்துவதற்காக மணல் அகழ்வில் ஈடுபடுவதாகத்; கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.
எதிர்காலத்தில் தென்னியங்குளம் கிராம காடு அழிப்பு, மணல் அகழ்வினால் பெரும் அழிவினை எதிர்கொள்ளும் எனவும் இதனைத் தடுப்பதற்கு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள், விவசாய அமைச்சர், மற்றும் வடமாகாண சபை உறுப்பினர்கள், முல்லைத்தீவு மாவட்டச் செயலாளர் விரைவான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனவும் பொது மக்கள் தெரிவிக்கின்றனர்.
கிராமத்தில் நடைபெறுகின்ற மணல் அகழ்வுடன் கிராம அபிவிருத்திச் சங்கத்தின் முக்கிய பொறுப்பில் உள்ளவர்களுக்கும் தொடர்புகள் இருப்பதாகவும் இதன் காரணமாகவே தகவல்களை அதிகாரிகளுக்கும் நாடாளுமன்ற் உறுப்பினர்களுக்கும் மாகாண சபை உறுப்பினர்களுக்கும் தெரியப்படுத்துவதில்லை எனவும் தென்னியங்குள மக்கள் தெரிவிக்கின்றனர். தென்னியங்குளத்தில் நடைபெறுகின்ற மணல் அகழ்வினைத் தடுப்பதற்கு வடமாகாண சபை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது மக்களின் கோரிக்கையாகும்.