குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ராம்பின் உரை தொடர்பில் உலகத் தலைவர்கள் விமர்சனங்களை வெளியிட்டுள்ளனர்.
ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்தில் டொனால்ட் ட்ராம்ப் ஆற்றியிருந்த விசேட உரை தொடர்பிலேயே விமர்சனங்களை வெளியிட்டுள்ளனர். ட்ராம்பின் கருத்து நாகரீகமற்றது எனவும், ஐக்கிய நாடுகள் அமைப்பில் இவ்வாறு கருத்து வெளியிட்டமை ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல எனவும் ஈரானிய வெளிவிவகார அமைச்சர் ஜாவெட் செரீப் தெரிவித்துள்ளார்.
டுவிட்டர் கணக்கில் இடப்பட்டுள்ள பதிவொன்றின் மூலம் அவர் இதனைச் சுட்டிக்காட்டியுள்ளார்.
21ம் நூற்றாண்டைச் சேர்ந்த அரசியல் தலைவர் ஒருவரைப் போன்று ட்ராம்ப் உரையாற்றவில்லை எனவும், பண்டைய நகரீகமற்ற காலத்தின் மனிதர்களைப் போன்று கருத்து வெளியிட்டுள்ளதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார். இதேவேளை, அழுத்தங்களை கண்டு அச்சம் கொள்ளப் போவதில்லை என வெனிசுலாவின் வெளிவிவகார அமைச்சர் ஜொர்க் அரேசா தெரிவித்துள்ளார்.
ட்ராம்ப் இந்த உலகின் ஜனாதிபதி அல்ல எனவும் சொந்த நாட்டையே நிர்வாகம் செய்ய தகுதியற்றவரே இந்த ட்ராம்ப் எனவும் அவர் தெரிவித்துள்ளார். இதேவேளை, செல்வந்த வர்த்தகரான ட்ராம்பின் கருத்துக்கள் ஆச்சரியப்படுவதற்கில்லை என பொலிவிய ஜனாதிபதி ஈவோ மொராலஸ் தெரிவித்துள்ளார். ட்ராம்ப் சோசலிசத்தை தாக்கி வருவதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
இதேவேளை, ட்ராம்பின் உரை பொருத்தமற்றது என சுவீடன் வெளிவிவகார அமைச்சர் மார்கிரட் வெல்ஸ்ட்ரோம் தெரிவித்துள்ளார். தவறான நேரத்தில் தவறான இடத்தில் தவறாக ட்ராம்ப் பேசியுள்ளதாகத் தெரிவித்துள்ளார். இதேவேளை, ட்ரம்பின் உரையை இஸ்ரேல் பிரதமர் பென்ஜமின் நெட்டன்யாகூ வரவேற்றுள்ளார்.