இந்தியாவின் உள்நாட்டு பாதுகாப்பை மேம்படுத்துவதற்காக 25 ஆயிரம் கோடி ரூபா மதிப்பிலான புதிய திட்டத்துக்கு இந்திய மத்திய அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. பாதுகாப்பு தொடர்பான மத்திய அமைச்சரவைக் குழு கூட்டம் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் டெல்லியில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்குப் பின்னர் இந்திய, மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் செய்தியாளர்களிடம் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இதுவரை இல்லாத வகையில் மிகப்பெரிய உள்நாட்டு பாதுகாப்பு திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாகவும் இதன்படி, அடுத்த 3 நிதியாண்டுகளில் 2017-18 முதல் 2019-20 வரை) 25,060 கோடி ரூபா செலவிடப்படும் என்று தெரிவித்தார்.
அத்துடன் மத்திய அரசு 18,636 ரூபா கோடியையும் மாநில அரசுகள் .6,424 கோடி ரூபாவும் வழங் கும். இதில் ஜம்மு காஷ்மீர், வடகிழக்கு மாநிலங்கள் மற்றும் இடதுசாரி தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ள மாநிலங்களின் பாதுகாப்பு தொடர்பான செலவுகளுக்கு மட்டும் 10,132 கோடி ரூபா ஒதுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இந்த திட்டத்தின் கீழ், சட்டம் ஒழுங்கு, பெண்கள் பாதுகாப்பு, நவீன ஆயுதங்கள் தாராளமாக கிடைக்க வகைசெய்வது, காவல் துறையை நவீனப்படுத்துதல், காவலர்கள் நேரத்துக்கு சம்பவ இடங்களுக்கு செல்ல வழிசெய்தல், ஹெலிகப்டர்களை வாடகைக்கு எடுத்தல், போலிஸ் தகவல் தொடர்பை மேம்படுத்துதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படும். இதன்மூலம் உள்நாட்டு பாதுகாப்பை மேலும் மேம்படுத்த முடியும் என்றும் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மேலும் குறிப்பிட்டார்.