197
குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்:-
காணாமல் போனோர் தொடர்பான விடயங்களைக் கண்டறிவதற்கான உடன்படிக்கை, எதிர்காலத்திற்கு ஏற்ற வகையில் தயாரிக்கப்பட்டிருப்பதாகவும் இறந்த காலத்திற்குரியதல்ல என்றும் இலங்கைப் பிரதமர் கூறியிருக்கிறார். காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு என்ன நடந்தது என்பது தொடர்பில் இலங்கை அரசாங்கம் பொறுப்புக் கூற வேண்டும் என்று வலியுறுத்தி அவர்களின் உறவினர்கள் பல மாதங்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் பிரதமர் ரணில் இவ்வாறு கூறியிருப்பது பெரும் அதிர்ச்சிகரமானது.
ஈழத்தில் 2009 ஆம் ஆண்டு நடைபெற்ற இறுதி யுத்தத்தின்போது, பல்லாயிரக் கணக்கானவர்கள் காணாமல் ஆக்கப்பட்டனர். யுத்த களத்தில் காணாமல் ஆக்கப்பட்டதுடன், யுத்தம் நிறைவடைந்த பின்னர் சரணடைந்தவர்களும் காணாமல் ஆக்கப்பட்டார்கள். சரணடையும் புலிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்கப்படும் என்றும் ஒரு நாளேனும் புலிகள் இயகத்தில் இருந்தால் இராணுவத்திடம் சரணடைய வேண்டும் என்றும் விடுவிக்கப்பட்ட அரசின் வாக்குறுதிக்கு அமைவதாகவே போராளிகள் சரணடைந்தனர்.
கிறீஸ்வத அருட்தந்தை பிரான்சிஸ் யோசப் தலைமையில் விடுதலைப் புலிகளின் முக்கிய போராளிகள் சரணடைந்தவர். இதில் சரணடைந்த நூற்றுக் கணக்கானவர்களும் குறித்த போராளிகளின் பெற்றோர்கள், மனைவியரால் இராணுவத்திடம் கையளிக்கப்பட்டவர்கள். இவர்களையும் இலங்கை அரசு காணாமல் ஆக்கப்பட்ட பட்டியலில் தள்ளியது. உயிருடன் கையளிக்கப்பட்டவர்களையும் உயிருடன் சரணடைந்தவர்களையும் காணமல் ஆக்கிவிட்டோம் என கைவிரிக்கும் இலங்கை அரசு யுத்த களத்தில் ஆங்காங்கே சரணடைந்தவர்களை என்ன செய்திருக்கும்?
யுத்தத்தின்போது 20ஆயிரம் பேர் காணாமல் போயிருப்பதாக, முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அமைத்த காணாமல் போனோரை கண்டறியும் விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கை குறிப்பிடுகின்றது. ஆனால் சுமார் நாற்பதாயிரம் காணாமல் ஆக்கப்பட்டிருப்பதாக மன்னார் மாவட்ட முன்னாள் ஆயர் இராசப்பு யோசேப், ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளருக்குக் கூயிருந்தார். நாற்பதாயிரம் பேரை இலங்கை அரசு என்ன செய்தது? அவர்களுக்கு என்ன நடந்தது? அதற்கான நீதி என்ன என்பதே ஈழ மக்களின் போராட்டமாகும்.
சசிரேகா தமிழ்ச்செல்வன், தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் அரசியல் துறைப் பொறுப்பாளர் சு.ப. தமிழ்ச்செல்வனின் மனைவி. ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் அமர்வில் கலந்துகொண்ட இவர் இலங்கை அரசின் இனப்படுகொலை குற்றங்கள் தொடர்பில் சாட்சியம் அளித்துள்ளார். இறுதிக்கட்ட யுத்தத்தின் போது, தன்னையும் தனது இரு பிள்ளைகளையும் விசாரணைக்கென சிவில் உடையில் வந்தவர்கள் இரவு 1 மணியளவில் அழைத்துச் சென்றதாக கூறிய அவர் அங்கு இடம்பெற்ற இனவதைகள் தொடர்பில் முக்கிய சாட்சியம் ஒன்றையும் குறிப்பிட்டுள்ளார்.
“ஜோசப் முகாமை நெருங்கும் போது எனது கண்களை கட்டினர்.. எனது கண்கள் கட்டப்பட்டிருந்தாலும், பெண்களின் அழுகுரல்களும், ஆண்கள் சித்திரவதைகளால் கதறியதையும் கேட்கும் போது அது ஒரு நிலத்தின் கீழ் அமைக்கப்பட்ட சித்திரவதை முகாம் என்பதை என்னால் ஊகிக்க முடிந்தது” என அவர் கூறினார்.
“இலங்கையில் அதிகமான சித்திரவதைகள் நடைபெற்ற முகாமாக கருதப்படும் ஜோசப் முகாமில் என்னை தனி அறையில் தடுத்து வைத்து விசாரணை நடத்தும் போது, புலிகளின் தலைவர் பிரபாகரனை பற்றி விசாரித்தனர் எனக்கு தெரிந்த விடயங்களை குறிப்பிட்டேன்”
காணாமல் ஆக்கப்பட்டவர்களின் விடயம் என்பது இனப்படு கொலை குறித்த விசாரணையில் மிகவும் முக்கியமானது. காணாமல் ஆக்கப்படுதலை செய்த, காணாமல் ஆக்கப்படுதலுக்கு கட்டளையிட்டவர்களை இன்றைய அரசும் பாதுகாக்க முற்படுகின்றது. காணாமல் போனோர் தொடர்பான விடயங்களைக் கண்டறிவதற்கான உடன்படிக்கை எதிர்காலத்திற்கு ஏற்ற வகையில் தயாரிக்கப்பட்டிருப்பதாக இலங்கைப் பிரதமர் கூறியிருப்பது, இனப்படுகொலையாளிகளை அச் சட்டம் ஊடாக தண்டிக்க முடியாது என்று அவர்களுக்கு விளக்கமளித்துள்ளார்.
வடக்கு பயங்கரவாதத்துடன் தொடர்புபட்ட தனிப்பட்ட நபர்களுக்கு எதிராக வழக்குத் தொடர்வதற்கு எந்தவித சந்தர்ப்பமும் இல்லை என்று ஜனாதிபதியும் தானும் தெரிவித்திருப்பதாக கூறியுள்ள ரணில், குறித்த உடன்படிக்கை ஊடாக எக்னலிகொட காணாமல் ஆக்கப்பட்டமை மற்றும் தாஜுடீன் கொலை செய்யப்பட்டமை போன்ற சம்பவங்களின் குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்க முடியும் என கூட்டு எதிர்கட்சி கூறிவரும் குற்றச்சாட்டையும் பிரதமர் நிராகரித்துள்ளார். ஆனால் இன்றைய ஈட்சியாளர்கள் குறிப்பிடப்பட்ட கொலைகள் தொடர்பில் கடந்த ஆட்சியின்போது விமர்சனம் செய்து வந்தனர்.
வடக்கு கிழக்கில் இடம்பெற்ற காணாமல் ஆக்கபட்டமை மற்றும் கொலைகளுடன் மேற்குறிப்பிட்ட கொலைகளையும் தாமே செய்தோம் என்பதை மகிந்த ராஜபக்ச தரப்பு ஒப்புக்கொள்வதும், அதற்காக உங்களை தண்டிக்க இடமளிக்க மாட்டோம் என்பதை இன்றைய ஆட்சியாளர் ரணில் விக்கிரமிங்க உறுதியளிப்பதையும் இங்கு தெளிவாக உணர்ந்து கொள்ள முடியும். சிங்கள மக்களுக்கு எதிராக செய்யப்பட்ட குற்றங்களுக்காக கூட குற்றவாளிகளை தண்டிக்க இடமளிக்க மாட்டோம் என்று கூறும் அரசு தமிழ் மக்களுக்கு எதிரான குற்றங்களை எவ்வாறு அணுகும்?
ஐக்கிய நாடுகள் சபையில் உரையாற்றும் ஜனாதிபதி, இலங்கையில் கண்ணீருடன் ஒரு இனம் போராடுவதை மறைத்துக்கொண்டு, எல்லாம் தீரக்கப்பட்டு வருவதுபோல பெருமிதமாக பேசுகின்றார். சர்வதேச சமூகத்தை அணைத்து இந்த விடயங்களை நீர்த்துப் போக செய்யும் விதமாக அணுகுகிறார். இறந்த கால நீதியை மறுக்கும் குறித்த சட்டத்தை ஐ.நா மனித உரிமை ஆணையாளர் பாராட்டியுள்ளார். அத்துடன் காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகத்தை திறத்தல் தொடர்பிலும் இலங்கை ஜனாதிபதியிடம் வலியுறுத்தியுள்ளார்.
ஆனால், காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பான உண்மையை கூறாமல், இப் பிரச்சினையை உடன் தீர்க்காமல் காணாமல் போனோர் அலுவலகத்தை திறந்து மேலும் காலத்தை வீணடித்து, இந்த விவகாரத்தை நீர்த்துப் போகச் செய்யப்போகிறதா இலங்கை அரசு என்ற ஆதங்கமே பாதிக்கப்பட்ட தமிழ் மக்களிடம் உள்ளது. காணாமல் ஆக்கப்பட்டவர்களின் விவகாரத்தை இழுத்தடிக்க ராஜபக்ச, காணாமல் போனோரை கண்டறியும் ஆணைக்குழுவை அமைத்ததுபோலவே, தற்போதைய அரசாங்கம் காணாமல் போனோர் அலுவலகம் அமைக்கிறதா என்று தமிழ் மக்கள் சந்தேகம் கொள்கின்றனர்.
உண்மையை வெளிப்படுத்தவும், நீதியை நிலைநாட்டவும் அலுவலகங்களும் ஆணைக் குழுக்களும் தேவையில்லை. காலத்தை இழுத்தடிக்கவும் நீதியை குழிதோண்டிப் புதைக்கவுமே இவை பயன்படுத்தப்படுகின்றன. இந்த நிலையில் இலங்கை அரசின் மற்றுமொரு மோசமான செயலாக “காணாமல் போனோர் தொடர்பான விடயங்களைக் கண்டறிவதற்கான உடன்படிக்கை” இறந்த காலத்திற்கு உரியதல்ல என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறெனினும், காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான பதில் என்பது இறந்த காலத்திற்கான நீதி. அந்த நீதியில் இருந்தே எதிர்காலத்தை கட்டமைக்க முடியும். ஈழத் தமிழ் மக்கள் மத்தியில் சிங்கள அரசு நிகழ்த்திய கொடுமைகள் ஆறாத வடுவாக நிலைத்துவிட்டதுடன் அதற்கான நீதியையும் பதிலையும் ஈழ மக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். அறுபது வருடங்களாக இன ஒடுக்குமுறையையும் முப்பது வருடங்களுக்கு மேலாக இன அழிப்பு யுத்தத்தையும் சந்தித்த எமது மக்கள் நீதியைப் பெற்று உரிமையை நிலை நாட்டும் விடயத்தில் பின்வாங்க மாட்டார்கள். பின்வாங்கவும் முடியாது.
குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்
Spread the love