புதிய அரசியலமைப்பு தொடர்பில் முன்வைக்கப்பட்டுள்ள அறிக்கையில் சமஷ்டி எண்ணக்கரு எவ்விதத்திலும் வெளிப்படுத்தப்படவில்லையென ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
நாட்டின் ஒருமைப்பாட்டுக்கு பாதகமான எந்தவொரு அரசியலமைப்பையும் தயாரிக்க தான் இடமளிக்கப்போவதில்லை எனவும் தற்போதிருக்கும் அரசியலமைப்பில் பௌத்த சமயம் தொடர்பில் குறிப்பிடப்பட்டுள்ள எந்தவொரு உறுப்புரையையும் நீக்குவதற்கோ, குறைப்பதற்கோ இடமளிக்கப்பட மாட்டாதெனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
இன்று நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும் போதே ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன மேற்கண்டவாறு தெரிவித்தார்.
புதிய அரசியலமைப்பு தொடர்பான முன்மொழிவுகளில் நாட்டை பிரிக்கும் விடயங்கள் எவையும் உள்ளடக்கப்படவில்லையென குறிப்பிட்ட ஜனாதிபதி புதிய அரசியலமைப்பு தயாரிப்பு தொடர்பில் எந்தவொரு வரைபும் இதுவரை தயாரிக்கப்படவில்லை என்பதுடன் அனைவரினதும் கருத்துக்கள், முன்மொழிவுகள் பெறப்பட்டு பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ள அறிக்கை அனைத்து துறைகளிலும் கலந்துரையாடி, விவாதித்து, மீளாய்வு செய்ய வாய்ப்பளிக்கப்படும் எனவும் தெரிவித்தார்.
வடக்கு கிழக்கு மக்கள் முகம் கொடுத்துள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்குதல், நிலையான சமாதானத்தை பேணுதல், மீளவும் போர் ஏற்படாதவாறு அனைத்து இனத்தவரிடையேயும் சகவாழ்வையும் நல்லிணக்கத்தையும் கட்டியெழுப்புதல் ஆகிய விடயங்கள் தொடர்பில் அரசாங்கம் முதன்மை கவனம் செலுத்தி செயற்படுவதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
மீளவும் போரொன்று ஏற்படும் என்ற கருத்து மக்கள் மத்தியில் ஏற்பட்டால் கூட நாடு இருண்ட யுகத்துக்கு தள்ளப்பட்டுவிடும் என தெரிவித்த ஜனாதிபதி அவ்வாறான எண்ணம் மக்கள் மத்தியில் ஏற்படாதவாறு அனைத்து இனங்களிடமும் சகவாழ்வையும் நம்பிக்கையையும் கட்டியெழுப்புவதற்கு அரசாங்கம் பாடுபடுவதுடன், அந்த முயற்சிகள் வெற்றிபெறுவதற்கு ஒரே மேசையில் ஒன்றுகூடி கலந்துரையாடுமாறு பௌத்த, இந்து, இஸ்லாமிய, கத்தோலிக்க மதத்தலைவர்களை வேண்டிக்கொள்வதாகவும் தெரிவித்தார்.