செப்டெம்பர் 30 சர்வதேச மொழி பெயர்ப்பு தினமாகப் பிரகடனப்படுத்தப்பட்டு உள்ளது.
இன்றைய நவ காலனித்துவ உலகமயமாக்கல் சூழலில் பரவலாக்கம் செய்யப்பட்டுவரும் நுகர்வுப் பண்பாடானது பல்லாயிரம் வருட வரலாற்றினைக் கொண்ட மொழிகளை சாகடித்துக் கொண்டிருக்கும் பின்னணியில் சர்வதேச மொழிபெயர்ப்பு தினம் கொண்டாடப்படுவதற்கான அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளமை முக்கியத்துமுடையதாகின்றது.
இந்த உலகத்தில் பேசப்படும் நீண்ட வரலாற்றினைக் கொண்ட மொழிகளுள் ஒன்றான தமிழ் மொழியினைத் தாய் மொழியாகக் கொண்டுஉலகம் எங்கும் பரந்தும் சிதறியும் வாழுகின்ற தமிழ் பேசும் மக்களாகியநாம் இம்மொழிபெயர்ப்புநாளை அதிக முக்கியத்துவத்துடன் கொண்டாடவேண்டியது காலத்தின் தேவையாகியுள்ளது.
இன்றைய உலகில் தமிழ் மொழியைத் தாய் மொழியாகக் கொண்டவர்கள் உலகின் பல்வேறு நாடுகளிலும் வாழ்கின்ற சூழலில் உலகின் பன்மைப் பண்பாடுகளை பல்வேறு ஆய்வு அறிவு அனுபவங்களை நேரடியாகத் தமிழுக்குக் கொண்டுவரும் வாய்ப்புக்கள் அதிகமாக உள்ளன. அதாவது ஆங்கிலம் எனும் தரகுமொழியூடாகவன்றி வித்தியாசங்கள் மிகுந்த உலகின் அறிவுஅனுபவங்களை அந்தந்த மொழிகளிலிருந்து நேரடியாகத் தமிழுக்குக் கொண்டுவர முடியும்.
ஈழத்தமிழர்களின் கடந்த மூன்றுதசாப்தங்களுக்கும் மேலானபுலப்பெயர்வும் அகதிவாழ்வும் துன்பத்தில் கிடைத்த ஒருவாய்ப்பாக இதனை உருவாக்கியுள்ளது. இந்தவாய்ப்பை சரியாகப் பயன்படுத்தி உலகின் பல்வேறு அறிவு அனுபவங்களை உடனுக்குடன் தமிழுக்குத் தரும் மெழிகளின் வளமுள்ள ஆளணிகளை ஆக்கபூர்வமாக வளர்த்தெடுத்து உலகின் பல்வேறு அறிவு அனுபவங்களையும் உடனுக்குடன் உள்வாங்கி உயர்வடையும் வளமுள்ள வலிமையான மொழியாகத் தமிழை வளர்க்க தமிழின் மீதுபற்றுக் கொண்ட உலகம் முழுவதும் பரந்துவாழும் ஒவ்வொரு தமிழரும் முயலுவோமாக… இதனை இந்த சர்வதேச மொழிபெயர்ப்பு நாளில் தமிழ் மொழிபேசுவோரின் தொனிப் பொருளாகக் கொண்டு செயற்படுவோம். இந்த முக்கியமான பணியைப் புரிந்தால் அடுத்துவரும் நூற்றாண்டிலும் தமிழின் இருப்பை உறுதிப்படுத்தக் கூடியதாக இருக்கும். இதேவேளை சுயமாகவும், சிறுகுழுவாகவும் சமூக அக்கறையுடன் தன்னார்வத்துடன் ஆக்கபூர்வமான மொழிபெயர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்கள், ஈடுபட்டுக் கொண்டிருப்பவர்கள் எனத் தமிழை வளப்படுத்திவரும் மொழிபெயர்ப்பாளர்களை இந்நாளில் கவனத்திற்குக் கொண்டுவந்து அத்தகையோரை வாழ்த்தி அவர்களுக்கு உறுதுணையாக நிற்போம்.
மூன்றாவது கண் உள்ளுர் அறிவுதிறன் செயற்பாட்டுக் குழு…