இலங்கையில் இருக்கும் ரோஹிங்யா அகதிகளை அவர்களின் பாதுகாப்பு மற்றும் நலன்கருதி வேறு நாடுகளுக்கு மாற்றுவது குறித்து அவசரமான தீர்மானமொன்றுக்கு அரசாங்கம் வரவேண்டுமென கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகளுக்கான முகவராண்மையிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அத்தோடு இனவாத ரீதியில் செயற்படும் பிக்குகள் சிலர் ரொஹிங்கியா அகதிகள் விடயத்தில் நடந்துகொண்ட விதம் சர்வதேச ரீதியில் கட்டியெழுப்பப்பட்டு வரும் இலங்கைக்கான நற்பெயருக்கு களங்கத்தினை ஏற்படுத்தியுள்ளது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அவர்களை பயங்கரவாதிகள் என்றும் அவர்களை நாட்டை விட்டு வெளியேறுமாறும் பிக்குகள் தலைமையிலான தரப்பினர் போராட்டத்தை நடாத்தியிருந்தனர்.
மியன்மாரில் உருவாகியிருக்கும் மிக மோசமான சூழ்நிலை காரணமாக அங்கிருந்து தப்பித்து வந்திருக்கும் ரோஹிங்ய முஸ்லிம்களுக்கு இலங்கையில் பாதுகாப்பான சூழல் இல்லை என்பதே உண்மையாகும்.
இந்த மனிதநேயமற்ற செயலினால் இலங்கை அரசு சர்வதேச ரீதியில் பாரிய சவாலைகளை எதிர்நோக்க நேரிடும் எனவும் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.