குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு
அரசாங்கத்தின் நல்லிணக்கம் என்பது பொய்யானது என பெங்கமுவே நாலக்க தேரர் தெரிவித்துள்ளார்.
அரசாங்கம் நல்லணக்கம் ஏற்படுத்திவிட்டதாக கூறுவதில் எவ்வித உண்மையில்லை எனவும், அரசாங்கத்தின் நல்லிணக்கம் என்பது சிங்கள அடையாளத்தை அழிப்பதாகவும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். கண்டி கெப்படிபொலவில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்று உரையாற்றிய போது இதனைத் தெரிவித்துள்ளார்.
மனித உரிமை என்ற பெயரில் உலக நாடுகள் இலங்கை மீது பிரயோகிக்கும் அழுத்தங்களை நிறுத்தும் நோக்கில் தேசிய உரிமைகள் அமைப்பு உருவாக்கப்பட்டது எனவும் இந்த அமைப்பில் தமிழ், சிங்கள, முஸ்லிம் என்ற இன பேதமின்றி இணைந்து கொண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் சிங்கள, தமிழ், முஸ்லிம் ஒற்றுமையின்மை கிடையாது எனவும், சம்பந்தன், சுமந்திரன் மற்றும் விக்னேஸ்வரன் போன்றவர்கள் இவ்வாறு போலியாக இன முரண்பாட்டை வெளிப்படுத்தி வருவதாகத் தெரிவித்துள்ள அவர் வாக்குகளைப் பெற்றுக்கொள்வதற்காக செய்யும் முயற்சியாகவே இதனை கருத வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.
அரசியல்வாதிகளுக்கு மக்களின் சுமை தெரிவதில்லை என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.